உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் தேடித் தேடி சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று ‘செலரி’ (Celery). பார்ப்பதற்கு கொத்தமல்லி தண்டு போலவே இருக்கும் இந்த வெளிநாட்டுக்காய், இப்போது நம் ஊர் சூப்பர் மார்க்கெட்டுகளிலும் தாராளமாகக் கிடைக்கிறது. இதை ஏன் “நெகட்டிவ் கலோரி உணவு” (Negative Calorie Food) என்று அழைக்கிறார்கள் தெரியுமா? இதைச் செரிமானம் செய்யத் தேவைப்படும் ஆற்றலை விட, இதில் இருக்கும் கலோரி குறைவு. அதனால், உடல் எடை சரசரவென குறையும்.
செலரியின் சூப்பர் நன்மைகள்:
- இரத்த அழுத்தம் குறையும்: செலரியில் உள்ள ‘தாலிட்ஸ்’ (Phthalides) என்ற வேதிப்பொருள், இரத்த நாளங்களை விரிவடையச் செய்து, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது.
- நீர்ச்சத்து & செரிமானம்: இதில் 95% நீர்ச்சத்து உள்ளது. மேலும், இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கலைத் தீர்த்து, குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது.
- வீக்கத்தைக் குறைக்கும்: மூட்டு வலி அல்லது உடலில் வீக்கம் உள்ளவர்களுக்கு இது சிறந்த மருந்து. இதிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வீக்கத்தைக் குறைக்கும் தன்மை கொண்டவை.
தேவையான பொருட்கள்:
- செலரித் தண்டுகள் – 5 அல்லது 6 (பொடியாக நறுக்கியது)
- பெரிய வெங்காயம் – 1
- பூண்டு – 3 பற்கள்
- உருளைக்கிழங்கு – 1 (சிறியது, சூப் கெட்டியாக வர)
- வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- காய்கறி வேகவைத்த நீர் (Vegetable Stock) அல்லது தண்ணீர் – 2 கப்
- பால் – அரை கப் (தேவைப்பட்டால்)
- மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வதக்குதல்: ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- காய்கறிகள் சேர்ப்பு: வெங்காயம் வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள செலரித் தண்டுகள் மற்றும் உருளைக்கிழங்கைச் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். செலரியின் பச்சை வாசனை போகும் வரை வதக்குவது முக்கியம்.
- வேகவைத்தல்: இப்போது தண்ணீர் அல்லது காய்கறி வேகவைத்த நீரை ஊற்றி, உப்பு சேர்த்து மூடி வைக்கவும். காய்கறிகள் நன்கு மென்மையாகும் வரை (சுமார் 15 நிமிடங்கள்) வேகவிடவும்.
- அரைத்தல்: கலவை ஆறியதும், மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக்கொள்ளவும். (சூப் மிகவும் கெட்டியாக இருந்தால் சிறிது சுடுதண்ணீர் சேர்க்கலாம்).
- இறுதி டச்: அரைத்த விழுதுடன் காய்ச்சிய பாலைச் சேர்த்து, மிதமான தீயல் ஒரு கொதி விடவும். இறக்கும் போது மிளகுத் தூள் தூவி, மேலே சிறிது செலரி இலைகளைத் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: இரவு உணவிற்குப் பதில் (Dinner) இந்த சூப்பை குடித்து வந்தால், பசி அடங்குவதோடு, காலையில் வயிறு லேசாக இருக்கும். எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பாலைத் தவிர்த்துவிட்டுச் செய்யலாம்.
