தமிழக 2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. நடிகரும் தவெக தலைவருமான விஜய் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை சந்திக்க உள்ளார். இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தின.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய தீவிர விசாரணையில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டது. தேர்தல் அதிகாரிகளின் முறைப்படியான புகாரைத் தொடர்ந்து, சேலம் அன்னதானப்பட்டி காவல் துறையினர் தவெக மாவட்டச் செயலாளர் பார்த்திபன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் ரம்ஜான் பண்டிகையன்று மசூதி ஒன்றின் முன்பாகக் கட்சியின் கொடி மற்றும் சின்னம் பொறிக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களைப் பொதுமக்களுக்கு விநியோகித்ததாகப் புகார் எழுந்தது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது கட்சி அடையாளங்களுடன் இத்தகைய செயல்களில் ஈடுபடுவது விதிமீறல் என அறிவிக்கப்பட்டது.
இதன் அடிப்படையில், சூரமங்கலம் காவல் துறையினர் தவெக நிர்வாகிகள் மூன்று பேர் மீது தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தேர்தல் நெருங்கும் வேளையில், புதிய அரசியல் சக்தியாகக் களம் காணும் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் மீது அடுத்தடுத்து வழக்குப் பதியப்பட்டிருப்பது சேலம் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு அனைத்துக் கட்சியினருக்கும் அதிகாரிகள் மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.
