ஆளுநர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மாநில அரசுகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், மசோதாக்களை நிறுத்தி வைக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்தது. இந்த தீர்ப்பு மீது குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 14 கேள்விகளை எழுப்பி மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பிஆர் கவாய் தலைமையிலான அரசியல் சாசன பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பின் சில முக்கிய அம்சங்கள்:
- மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவெடுங்கள் என உச்சநீதிமன்றத்தால் ஆளுநர்களுக்கு உத்தரவிட முடியாது.
- மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தல் தர முடியும்.
ஒரு நியாயமான காலத்துக்குள் முடிவெடுங்கள் என கேட்டுக்கொள்ள முடியும் - ஆளுநர்களின் செயல்பாடுகளை அரசியலமைப்பு மற்றும் நீதிமன்றங்கள் கேள்வி கேட்க முடியாது.
- ஆனால் ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலம் எந்த முடிவையும் ஆளுநர் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்தால் அதை நீதிமன்றங்கள் ஆய்வுக்கு உட்படுத்த முடியும்.
- மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைக்கும் போது காரணங்களை மாநில அரசுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்
- ஒரு மசோதா மீது காரணமே இல்லாமல் நீண்ட காலத்துக்கு ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் கிடப்பில் போட்டு வைத்திருந்தார் என்றால் மாநில அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடலாம்
- ஆளுநருக்கு நீதிமன்றங்களால் எந்த உத்தரவையும் போட முடியாது
- மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலக்கெடு விதித்த தமிழ்நாடு அரசு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் வழங்கிய தீர்ப்பு, அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
