வைஃபை ஆன் செய்ததும் ஏப்ரல் 24 மாலை முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்ட முரசொலி செல்வம் சிலை திறப்பு நிகழ்வு வீடியோ இன்பாக்சில் வந்து விழுந்தது.
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் உறுதி என்ற தகவல் நேற்று மாலை முரசொலி செல்வம் சிலை திறப்பு நிகழ்வுக்குப் பின் அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சட்டமன்றம் நடைபெற்று வரும் நேரத்தில் கூட அமைச்சரவை மாற்றம் இருக்குமா என்ற தகவல் நேற்று இரவு முழுதும் திமுக வட்டாரங்களில் பேசுபொருளானது.
செந்தில்பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா, அல்லது ஜாமீனில் வெளியே இருக்க வேண்டுமா என்ற சாய்ஸ் கொடுத்து வரும் ஏப்ரல் 28 திங்கள் கிழமைக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இது தொடர்பான சட்ட ஆலோசனைகள் முதல்வர் வட்டாரத்தில் தீவிரமாக நடைபெற்றன. அதன் முடிவில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்.
செந்தில்பாலாஜியோடு அமைச்சரவை மாற்றம் முடிவடையாது என்பதுதான் நேற்று முரசொலி செல்வம் சிலை திறப்பு நிகழ்வுக்குப் பிறகான பரபரப்பு. Cabinet reshuffle… Stalin action Ponmudi shock
முரசொலி வளாகத்தில் நடைபெற்ற முரசொலி செல்வம் சிலை திறப்பு நிகழ்வுக்கு நேற்று மாலை முதலமைச்சர் சென்றுவிட்டார். இந்நிகழ்வில் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

நிகழ்வுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வருவதில் போக்குவரத்து நெரிசலால் சற்று தாமதம் ஏற்பட்டது. அதுவரை முரசொலியில் தனது அறையில் அமர்ந்த முதல்வர் ஸ்டாலின் சில முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவை தனது அறைக்கு அழைத்து தனியாக அவரிடமும் ஆலோசனை நடத்தினார். இதன் பின் சிலை திறப்பு, நூல் வெளியீட்டு நிகழ்வும் நடைபெற்றது.
நிகழ்வு முடிந்து அனைவரும் சென்ற பிறகு… சில நிமிடங்களில் அமைச்சர் பொன்முடியிடம், ‘நீங்கள் உங்கள் அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்துவிடுங்கள்’ என்று தகவல் அனுப்பி அறிவுறுத்தியிருக்கிறார் முதல்வர். இந்தத் தகவலை அறிந்த பொன்முடி அதிர்ந்துவிட்டார்.

அமைச்சர் பொன்முடி கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அன்பகத்தில் நடந்த பெரியார் திக நிகழ்வில், சைவ – வைணவ சமயங்கள் பற்றியும், பெண்கள் பற்றியும் ஆபாசமாக பேசினார்.
இது தொடர்பான வீடியோ சில நாட்களுக்குப் பின் வெளியாக, ஏப்ரல் 11 ஆம் தேதி, அவரை திமுகவின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின். இதையடுத்து மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி. Cabinet reshuffle… Stalin action Ponmudi shock
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமன்றி நீதிமன்றமும் பொன்முடிக்கு எதிரான கடுமையான கருத்துகளை வெளியிட்டிருக்கிறது. அதிமுக பொன்முடியை கண்டித்து தொடர்ந்து தமிழகம் முழுதும் ஆர்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது.
இந்த பின்னணியில்… முதல்வரை சந்தித்து தன் தரப்பு விளக்கத்தைக் கொடுக்க பல முறை முயற்சித்தார் அமைச்சர் பொன்முடி. ஆனால், அவருக்கு அந்த வாய்ப்பை அளிக்கவே இல்லை முதல்வர். சில நாட்களுக்கு முன் முதல்வரின் சித்தரஞ்சன் சாலை இல்லத்துக்கே சென்று காத்திருந்தார் பொன்முடி. ஆனால், முதல்வர் வருவதற்கு தாமதமாகும், நீங்கள் கிளம்புங்கள் என்று அவரிடம் சொல்லப்பட்டுள்ளது. ஒரு மணி நேரம் காத்திருந்துவிட்டு புறப்பட்டுவிட்டார் பொன்முடி.
சட்டமன்றம் நடக்கும் நேரம் என்பதால் சட்டமன்ற வளாகத்திலேயே முதல்வரை சந்திக்க முயற்சித்தார் பொன்முடி. ஓரிரு நாட்களுக்கு முன் மதியம் சட்டமன்றத்தில் முதலமைச்சர் இருந்தபோது, அவரது அருகே அமர்ந்திருக்கும் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் துரைமுருகன் போன்ற அமைச்சர்கள் லஞ்ச்சுக்கு சென்றுவிட்டனர்.
முதலமைச்சர் மட்டும் உட்கார்ந்திருந்த நிலையில், அவர் அருகே சென்று பவ்யமாக ஏதோ சொல்ல முயன்றிருக்கிறார் அமைச்சர் பொன்முடி. Cabinet reshuffle… Stalin action Ponmudi shock
ஆனால் பொன்முடியை பார்த்ததுமே, தன் கையை அசைத்து பேச முடியாது என்று சைகையிலேயே மறுத்துவிட்டார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து பொன்முடி அப்படியே பின் வாங்கிவிட்டார்.

இந்தக் காட்சியை பார்த்த திமுக சட்டமன்ற உறுப்பினர்கள், ‘பொன்முடி மீது முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னும் கோபம் குறையவில்லை. பொன்முடி தவறு செய்துவிட்டார். விவகாரம் சர்ச்சையானவுடனேயே தனது அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் கட்சிப் பதவியான துணைப் பொதுச் செயலாளர் பதவியைக் காப்பாற்றிக் கொண்டிருக்கலாம். ஆனால், அமைச்சர் பதவிக்கு ஆசைப்பட்டு அமைதியாக இருந்ததால் கட்சிப் பதவியான துணைப் பொதுச் செயலாளர் பதவியை இழந்துவிட்டார்” என்று சட்டமன்ற வளாகத்திலேயே பேசிக்கொண்டனர்.
இந்த பின்னணியில்தான் நேற்று முரசொலி செல்வம் சிலை திறப்பு நிகழ்வுக்குப் பின், அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துவிடுங்கள் என்ற தகவல் நேரடியாக பொன்முடிக்கு சொல்லப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரமாகவே பொன்முடி மீது மிகுந்த கோபத்தில் இருந்திருக்கிறார் முதல்வர். ‘பொதுவாகவே நம்மைப் பார்த்து இந்து விரோத ஆட்சி என்று பாஜக தொடர்ந்து விமர்சிக்கிறது. பெண்களுக்கு எதிரான ஆட்சி என்று அதிமுக பிரச்சாரம் செய்து வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை மூலமாக முருகன் மாநாடு நடத்தியிருக்கிறோம். ஆயிரம் கோவில்களுக்கு மேல் குடமுழுக்கு நடத்தியிருக்கிறோம். பல்வேறு கோயில்களின் சொத்துகளை மீட்டிருக்கிறோம். இப்படி நம் மீதான விமர்சனத்துக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் ஆன்மீக ஆட்சியாகவும் நடத்தி வருகிறோம். அதேபோல பெண்களுக்கு தொடர் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். Cabinet reshuffle… Stalin action Ponmudi shock
நாம் நான்கு வருட ஆட்சியில் செய்திருக்கும் இந்த ஆன்மீகத்துக்கான பெண்களுக்கான திட்டங்களை எல்லாம் தனது 2 நிமிட பேச்சிலேயே குழி தோண்டி புதைத்துவிட்டார் பொன்முடி.

இப்போது எதிர்க்கட்சிகள் மீண்டும் பொன்முடி சொன்னதை வைத்து தங்களின் குற்றச்சாட்டுகளை நியாயப்படுத்துகின்றன. நீதிமன்றங்களும் நெருக்கடி தருகின்றன. எவ்வளவோ முறை அவரை எச்சரித்தும் அவர் கேட்கவில்லை’ என்று தனது கடும் கோபத்தை நெருக்கமான நிர்வாகிகளிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர். மேலும், பொன்முடியின் ஆபாசப் பேச்சை முதலில் கனிமொழி கடுமையாக கண்டித்தார். முதல்வரின் குடும்பத்திலுள்ள பெண்களுக்கும் பொன்முடி மீது கடும் கோபம் இருக்கிறது.
இந்த பின்னணியில்தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு பொன்முடிக்கு ஆர்டர் போட்டிருக்கிறார் ஸ்டாலின்.
’அந்த பேச்சுக்காகத்தான் எனது கட்சிப் பதவியைப் பறித்துவிட்டாரே… மீண்டும் தண்டனையா?’ என்று தன்னிடம் தகவல் சொன்னவர்களிடமே கோபப்பட்டிருக்கிறார் பொன்முடி. ஆனால், ‘உங்கள் பையன்களுக்கு கட்சியில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. அவர்களுக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வழங்கப்படலாம். எனவே முதல்வரின் எண்ணத்தைப் புரிந்து நடந்துகொள்ளுங்கள்’ என்று பொன்முடியிடம் சொல்லியிருக்கிறார்கள். இதன் பின் நேற்று விழுப்புரத்தில் இருந்த தனது மனைவி விசாலாட்சியிடமும் ஆலோசித்திருக்கிறார் பொன்முடி.
அதன் பின் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். அதேநேரம், ‘கட்சிப் பதவியும் இல்லாமல், அமைச்சர் பதவியும் இல்லாமல் இருந்தால் மரியாதை என்னாவது? சட்டமன்ற கொறடா பதவியாவது கொடுங்கள் என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி.
இதற்கிடையே செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகிய அமைச்சர்களுக்கு பதில் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட போகிறார்களா அல்லது பிற அமைச்சர்களிடம் இலாகாக்கள் பகிர்ந்து அளிக்கப்படுமா என்ற விவாதமும் நடைபெற்று வருகிறது. Cabinet reshuffle… Stalin action Ponmudi shock

செந்தில்பாலாஜியிடம் இருக்கும் டாஸ்மாக், மின்சாரம் ஆகிய முக்கிய துறைகளை யாரிடம் ஒப்படைப்பது என்ற ஆலோசனையில்… கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த வெள்ளக்கோவில் சுவாமிநாதனிடம் செந்தில்பாலாஜியின் இரு துறைகளில் ஒன்று கொடுக்கப்படலாம் என்ற ஆலோசனை நடக்கிறது.
அதேநேரம் விழுப்புரம் மாவட்ட அமைச்சராக தற்போது இருக்கும் பொன்முடி,. அப்பதவியில் இருந்து அகற்றப்படும் நிலையில், அம்மாவட்டத்துக்கு அமைச்சரவை பிரதிநிதித்துவம் இல்லாமல் போய்விடும். அந்த அடிப்படையில் ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த செஞ்சி மஸ்தான் மற்றும் ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன், விழுப்புரம் லட்சுமணன் ஆகியோர் பெயர்களும் பொன்முடிக்கு பதிலாக விழுப்புரம் கோட்டாவில் பேசப்படுகின்றன.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு வளமான துறை எதுவும் இல்லாத நிலையில் பொன்முடியின் வனத்துறை தங்கத்துக்கு அளிக்கப்பட்டால் கூட ஆச்சரியமில்லை என்ற பேச்சும் கோட்டை வட்டாரத்தில் இருந்து கிடைக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.