பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தின் சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் ‘தமிழில்’ வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தமது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது: திரு. சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள், தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறனால் பொது வாழ்வில் நீண்ட காலம் தன்னை வேறுபடுத்திக் காட்டியுள்ளார். தாம் வகித்த பல்வேறு பதவிகளின் போது, சமூக சேவை மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் எப்போதும் கவனம் செலுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அடிமட்ட நிலையில் அவர் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளார். எங்கள் கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அவரை பரிந்துரைக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி குடும்பம் முடிவு செய்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
அமித்ஷா புகழாரம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமது எக்ஸ் பக்கத்தில் தமிழில் பதிவிட்டுள்ளதாவது: துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள மகாராஷ்டிர ஆளுநர் திரு.சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
நாடாளுமன்ற உறுப்பினராகவும், பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் உங்கள் பணி அரசியலமைப்பு கடமைகளை திறம்பட நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. உங்கள் பரந்த அனுபவமும் ஞானமும் மேல்சபையின் கௌரவத்தை உயர்த்தும் மற்றும் புதிய மைல்கற்களை தொடும் என்று நான் நம்புகிறேன்.
இந்த முடிவிற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மற்றும் பாஜக நாடாளுமன்றக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என் நன்றி. இவ்வாறு அமித்ஷா தெரிவித்துள்ளார்.