இந்திய ஏ அணி வெஸ்ட் இண்டீஸ் ஏ இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா ‘ஏ’ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 4 நாட்கள் கொண்ட 2ஆவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. ஜூலை 10ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் கேப்டன் ப்ரூக்ஸ்ஸின் சிறப்பான சதத்தால் வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 302 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் முகமது சிராஜ் 4, நதீம் 3 விக்கெட்களை வீழ்த்தினர்.
பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ‘ஏ’ அணி வெஸ்ட் இண்டீசிஸின் நேர்த்தியான பந்துவீச்சால் 192ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் கருண் நாயர் 42 ரன்களும், அங்கிட் பாவ்னே 43 ரன்களும், ஐபி எல் புகழ் விஜய் சங்கர் 30 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி சார்பில் ரேமன் ரெய்பர் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டும், ஒஷானே தாமஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
**இந்தியாவுக்கு சாதகமான 2ஆவது இன்னிங்ஸ்**
இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி துவக்கத்தில் சிறப்பாகவே விளையாடியது. ஆனால் அதன் பின்னர் மெல்ல மெல்ல ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. இதனால் இறுதியில் 210 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா ‘ஏ’ சார்பில் மீண்டும் முகமது சிராஜ் 4 விக்கெட் கைப்பற்றினார். குர்பானி 3 விக்கெட்டும், ஜெயந்த் யாதவ் 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதனால் இந்தியா ‘ஏ’ அணிக்கு 321 வெற்றி இலக்காக நிர்ணயிக்கபட்டது. 321 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. ஹனுமா விஹாரி மற்றும் கேப்டன் கருண் நாயர் ரிஷப் பந்த் ஆகியோரின் அரைசதங்களால் 5 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இந்தியா ஏ அணி இந்தப் போட்டியில் வெற்றி பெற்றது.









