மூளையை தின்னும் அமீபா தொற்று குறித்தும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
உலகளவில் அரிதாக பார்க்கப்படும் மூளையை தின்னும்தின்னும் அமீபா தொற்று என்பது மூளை திசுக்களை அழித்து மூளை வீக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இதனால் பாதிக்கப்பட்டவர்களில் 97%க்கும் அதிகமானோர் உயிரிழப்பை சந்தித்துள்ளனர் என்றும் அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (சிடிசி) தெரிவிக்கிறது.
இந்த நிலையில் தான் அண்டை மாநிலமான கேரளாவில் இந்த அமீபா தொற்று காரணமாக கோழிக்கோட்டைச் சேர்ந்த மிருதுல்(14), கண்ணூரைச் சேர்ந்த தக்ஷினா(13) மலப்புரத்தைச் சேர்ந்த ஃபட்வா(5) ஆகிய 3 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து தற்போது இணையதளத்தில் ‘brain-eating amoeba’ குறித்து அதிகளவில் தேடப்பட்டு வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் தேவை!
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது எக்ஸ் பதிவில், “ கேரளா மாநிலத்தில் அமீபா நுண்ணுயிர் பரவலால் மூளையில் பாதிப்பு ஏற்பட்டு மூவர் உயிரிழந்துள்ளதாக வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
கேரளாவில் இந்த நுண்ணுயிர் பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டில் இத்தகு பரவல்கள் ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையுடன் அரசு செயல்பட வேண்டும். அசுத்தமான நீரின் வாயிலாகவே பரவும் இந்த நுண்ணுயிர்,
குழந்தைகளைத் தொற்றும் ஆபத்து அதிகம் உள்ளதால், மக்களின் உயிர்களைக் காக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அதிக கவனத்தைச் செலுத்துமாறு இந்த தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்திருந்ததார்.
வழிகாட்டல் சுற்றறிக்கை வெளியீடு!
இதனையடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் மக்களை எச்சரிக்கும் விதமாக ‘அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ்’ என்ற மூளையை தின்னும் அமீபா தொற்று குறித்தும், எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் வழிகாட்டுதல் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், “தேங்கி இருக்கும் நீரில் குளிப்பதைப் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் தவிர்க்க வேண்டும். நீர்நிலைகள், குளங்கள், ஏரிகளில் சுற்றுச்சூழல் சுகாதாரம் பேணப்பட வேண்டும். அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் என்னும் மூளையைத் தின்னும் நோய்த் தொற்று தொடர்பான உயிரிழப்புகள் கேரளாவில் நிகழ்ந்ததைக் கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, குழப்பம், பிரமைகள் மற்றும் வலிப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகள் ஆகும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
’இந்தியன் தாத்தா’ தோற்றம் உருவானது எப்படி? : சீக்ரெட்டை ஓபன் செய்த ஷங்கர்
கண்ணீர் மழையில் 8 மணி நேர ஊர்வலம்… பெளத்த முறைப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்!