அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்ற வாசகத்துடன் 2019-ம் ஆண்டு, ஜனவரி 15-ம் தேதி ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் போஸ்டரை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு தமிழ் சினிமாவின் ஒட்டுமொத்த கவனத்தை தன் பக்கம் திருப்பினார் இயக்குநர் ஷங்கர்.
23 ஆண்டுகள் கழித்து, இந்தியன் முதல் பாகம் வெளியான பிறகு வந்த இரண்டாம் பாக அறிவிப்பு ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் இப்படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்ல பல்வேறு விவாதங்களையும் சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியது.
இந்தியன் படத்தின் முதல் பாகம் அரசு எந்திரத்தில் புரையோடிக்கிடக்கும் ஊழல் பற்றிய படம். இரண்டாம் பாக அறிவிப்பு வெளியான புதிதில் கமல்ஹாசன் முழுநேர அரசியல்வாதியாகி விட்டதால், இதுதான் கமல்ஹாசனின் கடைசித் திரைப்படம் என்று கூறப்பட்டது. அதனால், இந்தப் படத்தில் அரசியல் அனல்பறக்கும் என்றெல்லாம் பேசப்பட்டது.
1996-லிருந்து 2019-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில், கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியான ஹேராம், ஆளவந்தான், அன்பே சிவம், விருமாண்டி, தசாவதாரம், விஸ்வரூபம் படங்களின் மூலம் சினிமா ரசிகர்களின் ரசனைகளை வேறு தளத்துக்கு கொண்டு சேர்த்திருந்தார்.
அதே வேளையில் இயக்குநர் ஷங்கர், இந்தியன் முதல் பாகத்துக்குப் பிறகான 23 ஆண்டு காலக்கட்டத்தில், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், சிவாஜி, நண்பன், ஐ, எந்திரன்,2.0 ஆகிய திரைப்படங்களை இயக்கியதன் மூலம் வெவ்வேறு கதை களத்தில் பயணித்திருந்தார்.
ஷங்கரை மறக்கடித்த ராஜமவுலி
பிரம்மாண்டம் என்றால் ஷங்கர் என்கிற பிம்பம் தென்னிந்திய சினிமாவில் இருந்தது. அதனை ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் பிரம்மாண்டம், அப்படத்தின் வெற்றி ஷங்கர் என்கிற பிரம்மாண்ட இயக்குநரை மறக்கடிக்க வைத்திருந்தது.
பாகுபலி – 2, RRR, கேஜி எஃப் படங்களின் பிரம்மாண்டம், அப்படங்கள் நிகழ்த்திய வசூல் சாதனைகளுக்கு இணையாக தமிழ் சினிமாவும் சாதனை நிகழ்த்துமா என்கிற கேள்விகள் இங்கு கேட்கப்பட்டு வருகின்றன.
எனவே கமல்ஹாசன்- ஷங்கர் இணைவதன் மூலம் பிரம்மாண்டம் இருக்க கூடும் என்கிற எதிர்பார்ப்பை இந்தியன் – 2 படத்தின் அறிவிப்பு ஏற்படுத்தியது.
பிரம்மாண்டமாக படம் தயாரித்தால் மட்டும் போதாது. அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முழு அர்ப்பணிப்புடன் இயங்க வேண்டும் என்பதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர் நடிகர் கமல்ஹாசன். கோடம்பாக்கத்து முன்னணி நட்சத்திர நடிகர்கள் தாங்கள் நடிக்கும் படங்களின் விளம்பர நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை.
குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களை கூட சந்திக்காத நட்சத்திர நடிகர்களை காட்டிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் பன்முக ஆளுமை கமல்ஹாசன் அறிமுக ஹீரோ தன்படத்தின் வெற்றிக்காக மெனக்கெடுவதை போன்று இந்தியன்-2 பட புரமோஷன் நிகழ்வுகளில் இயல்பாக பங்கேற்பதுடன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு அரசியல்வாதியாக, திரைக்கலைஞராக எந்த கேள்வியையும் தவிர்க்காமல் பதில் கூறி வருகிறார்.
அப்படியொரு நிகழ்வில் இந்தியன் படத்தில் கமல்ஹாசன் நடித்திருக்கும் சேனாதிபதி தோற்றம் எதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதை சுவாரஸ்யத்துடன் இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு!
‘இந்தியன் உருவான போது, சேனாதிபதி கதாப்பாத்திரத்தை உருவாக்க கமல் சாரோட போட்டோ, அவரோட அப்பா போட்டோ, அண்ணா போட்டோ என எல்லாவற்றையும் தோட்டா தரணியிடம் தந்து ஒரு ஸ்கெட்ச் போட்டுத் தரச் சொன்னேன். அந்த ஸ்கெட்ச் பார்த்த போதே சிலிர்ப்பாக இருந்தது. முதல் படத்தில் அவர் மேக்கப் போட்டு வந்து நின்ற போது கூஸ்பம்ஸ் வந்தது, இப்போது இந்த படத்தில் மீண்டும் அவர் மேக்கப் போட்டு வந்த போது, அதே சிலிர்ப்பு வந்தது. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது.
அவரை ஷூட்டில் பார்க்கும்போது கமல் சார் என்றே தோன்றாது, ஏதோ இந்தியன் தாத்தா நம்முடனே இருக்கிறார் என்பது போல் தான் தோன்றும். அவர் இந்தியன் தாத்தாவாகத்தான் வாழ்ந்திருக்கிறார். அதே உணர்வு படம் பார்க்கும் போது உங்களுக்கும் வரும்.
இந்தியன் படம் எடுக்கும் போது 2 ஆம் பாகம் எடுப்பேன் என நினைக்கவே இல்லை, அப்போது தேவைப்பட்ட போது, இந்தியன் தாத்தாவிற்கு அப்போதைக்கு ஒரு வயது வைத்து விட்டேன், ஆனால் இப்போது படம் எடுக்கும்போது அவருக்கு வயது என்ன என்கிற சர்ச்சை வந்துள்ளது. இதை நான் எப்படி பார்க்கிறேன் என்றால் சீனாவில் 118 வயது மார்ஷியல் ஆர்ட்ஸ் வீரர் இருந்தார், அந்த வயதிலும் அவர் திடகாத்திரமாக சண்டை போடுவார், ஜேம்ஸ் பாண்ட் ஒரிஜினல் வயது 100க்குமேல் ஆனால் அதையெல்லாம் நாம் கண்டுகொள்வதில்லையே, அதே போல் இந்தியன் தாத்தா என்பது ஒரு உணர்வு. அதை ரசிகர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
மெல்லிய பிராஸ்தடிக் மேக்கப்!
இந்தியன் பார்ட் 1 வந்த போது, பிராஸ்தடிக் மேக்கப் அந்த அளவு வளரவில்லை, அதனால் அது ரொம்ப திக்காக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் அந்த நிறுவனத்திடம் சொல்லி மேக்கப் தின்னாக இருக்க வேண்டும் எனக்கேட்டு போட வைத்தோம். அதனால் நீங்கள் கமல் சார் நடிப்பை இன்னும் நன்றாகப் பார்க்கலாம். இந்தப்படத்தை முதலில் வேறொருவர் தான் எடுப்பதாக இருந்தது ஆனால் கதையை கேட்டவுடன் நான் தான் தயாரிப்பேன் எனச் சொன்னார் சுபாஸ்கரன், இந்தியன் மாதிரி ஒரு படத்தை லைகா போன்ற நிறுவனம் தான் எடுக்க முடியும்.
சுபாஸ்கரன் சார், ரெட் ஜெயண்ட் நிறுவனம் சார்ந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி. இந்தியன் படம் தமிழ் நாட்டில் நடக்கும் ஆனால் இது இந்தியா முழுக்க நடக்கும் கதை, இந்தியா முழுக்க பல மாநிலங்களில் ஷூட் செய்துள்ளோம். ரசிகர்கள் ரசிப்பார்கள் என்று நம்புகிறேன்.’ என்றார்.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் & ரெட் ஜெயண்ட் மூவிஸ் இப்படத்தை, தயாரித்துள்ளனர். இந்தியன் 2 திரைப்படமானது அசல் தமிழ் பதிப்பு இந்தியன் 2 எனவும், தெலுங்கில் பாரதியுடு 2, இந்தியில் ஹிந்துஸ்தானி 2 என உலகம் முழுவதும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி இப்படம் வெளியிடப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– இராமானுஜம்
கண்ணீர் மழையில் 8 மணி நேர ஊர்வலம்… பெளத்த முறைப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம்!