சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சமீப நாட்களாக அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள், அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்படுவது தொடர்ந்து வருகிறது.
சமீபத்தில் கோவை ஆட்சியர் அலுவலகம், ஆளுநர் மாளிகை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இந்தநிலையில் இன்று (செப்டம்பர் 19) சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றங்களில் 6 ஆர்டிஎக்ஸ் வகை வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றங்களில் முழுவதும் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி நீதிபதிகள், வழக்கறிஞர்கள், ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானோர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றம், சிபிஐ நீதிமன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றங்களுக்கு தொடர்ந்து 4 வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்பட்டுத்துள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதி பெயரில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுபோன்று இன்று (செப்டம்பர் 19) மும்பை உயர் நீதிமன்றத்துக்கும் மிரட்டல் வந்து அங்கும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே டெல்லி உயர் நீதிமன்றத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.