இந்த ஆண்டின் அரிய வகை முழு சந்திர கிரகணம் இன்று (செப்டம்பர் 7) இரவு நிகழ உள்ளது.
சூரியன், நிலவு, பூமி என மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் நிகழ்கின்றன. இந்த நிலையில் நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் என்றும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி தென்பட்டது. இந்நிலையில் இன்று இரவு முழு சந்திர கிரகணம் நிகழ்கின்றது. முதலில் இரவு 8.58 மணிக்கு மங்கலான பகுதிக்குள் நுழைய ஆரம்பித்துவிடும். இரவு 9.57 முதல் 1.27 மணி வரை நீண்ட சந்திர கிரகணம் நிகழ உள்ளது. குறிப்பாக 11.42 முதல் 12.33 வரை முழுமையான சந்திர கிரகணம் தென்படும். அந்த நேரத்தில் நிலவு அடர் சிவப்பு நிறத்தில் ஒளிரும். இதனால் அதற்கு ரத்த நிலா (பிளட் மூன்) என்று பெயர்.
இந்த சந்திர கிரகணத்தை பொது மக்கள் வெறும் கண்ணால் காண இயலும். பைனாகுலர் உதவியோடும் பார்க்கலாம். மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரவு 9 மணி முதல் கிரகணம் முடியும் வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
முழு சந்திர கிரகணத்தை ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் காண இயலும். இந்தியாவிலும் குறிப்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல இடங்களில் தெளிவாகத் தெரியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அரிய வகை நிகழ்வு இனி வரும் 2028 டிசம்பர் 31 ல் தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது .