உதயசங்கரன் பாடகலிங்கம்
நிறையவே குழப்பமூட்டும் கதை!
சில தமிழ் படங்களைப் பார்க்கும்போதே, ‘வெளிநாட்டுப்படத்தைப் பார்த்து எடுத்திருப்பாங்க போல’ என்பது போன்ற ‘கமெண்ட்’களை தியேட்டரில் கேட்க நேரிடும். தழுவல் என்று சப்பைக்கட்டு கட்ட முடியாத அளவுக்கு, மிகச்சில படங்கள் மேற்கத்திய தாக்கத்துடன் இருக்கும். கடந்த காலங்களில் சில படங்கள் அப்படியொரு இக்கட்டான சூழலுக்குச் சம்பந்தப்பட்ட படக்குழுவினரைத் தள்ளியிருக்கின்றன.
சரி, ஜீவா, பிரியா பவானிசங்கர் நடித்துள்ள ‘பிளாக்’ படத்திற்கும், மேலே சொல்லப்பட்டவற்றுக்கும் என்ன சம்பந்தம்? ‘அதுதான் விஷயம்’ என்று இடைமறித்துச் சொல்லும் அளவுக்கு, ஒரு வித்தியாசமான திரையனுபவத்தைத் தருகிறது இப்படம்.
புதுமுகம் கே.ஜி. பாலசுப்பிரமணி இயக்கியிருக்கும் இப்படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார்.
வெவ்வேறு காலத்திற்குச் செல்லலாமா?!
ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வரும் வசந்த் (ஜீவா), ஆரண்யா (பிரியா பவானிசங்கர்) இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ‘லிவ்- இன்’ முறையில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஒருநாள் இருவரும் ஒரு ‘பப்’புக்கு நண்பர்களுடன் செல்கின்றனர். அங்கு இரண்டு பேருடன் வசந்துக்கு மோதல் ஏற்படுகிறது. அதற்கடுத்த நாள், விடுமுறையைக் கழிக்க ஏதாவது ஒரு ஊருக்குச் செல்லலாம் என்கிறார் வசந்த். ஆனால், தனக்கு விடுமுறை இல்லை என்று கூறி மறுப்பு தெரிவிக்கிறார் ஆரண்யா.
அதேநேரத்தில், ‘கடற்கரையோரமாக இருக்கும் வீட்டில் ஓய்வெடுக்கலாம். அங்கிருந்து நான் வேலைக்குச் செல்கிறேன்’ என்கிறார். ஆரண்யாவின் யோசனைக்குச் சம்மதிக்கிறார் வசந்த்.
இருவரும் உப்பளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ‘வில்லா’வுக்கு செல்கின்றனர். அங்கு யாரும் இல்லை. ஒரே ஒரு ‘செக்யூரிட்டி’ மட்டும் இருக்கிறார்.
மாலை நேரத்தில், சிறிது தொலைவிலிருக்கும் சூப்பர் மார்க்கெட்டுக்கு இருவரும் செல்கின்றனர். வேண்டிய உணவுப்பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வருகின்றனர். கேட்டில் செக்யூரிட்டி இல்லை.
வீடு திரும்பிய சிறிது நேரத்தில், இருவரையும் தேடி நண்பர் சுரேஷ் (ஷ ரா) வருகிறார். வசந்த் போன் செய்ததாகக் கூறுகிறார். ஆனால், அவர் போன் செய்யவே இல்லை. அங்கிருந்து குழப்பத்துடன் சுரேஷ் வெளியேறுகிறார்.
ஆனால், அதன்பிறகுதான் தாங்கள் எப்படியொரு சிக்கலில் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பதை ஆரண்யாவும் வசந்தும் உணர்கின்றனர்.
மின்சாரம் தடைபட்டபோது, ஜெனரேட்டர் அறைக்குச் செல்கின்றனர். அங்கு யாரோ ஒருவர் தங்களைப் பார்த்ததாகக் கூறுகிறார் ஆரண்யா.
வீடு திரும்பினால், யாரோ ஒருவர் ஒரு ஓவியத்தைப் பரிசாக அனுப்பியிருக்கிறார். அது யாராக இருக்கும் என்று இருவரும் விவாதித்துக் கொண்டிருக்கும்போது, வசந்துக்கு ஒரு போன் வருகிறது.
அடுத்த சில நொடிகளில், எதிர்வரிசையிலுள்ள ஒரு வீட்டில் விளக்கு எரிவதாகச் சொல்கிறார் ஆரண்யா. அதையடுத்து, ‘அங்கு யார் இருக்கின்றனர்’ என்பதை அறிய இருவரும் முடிவு செய்கின்றனர்.
அந்த வீடு, அச்சு அசலாக இவர்கள் வசிக்கும் வீடு போலவே இருக்கிறது. எட்டிப் பார்த்தால், இவர்களைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் இரண்டு பேர் உள்ளே இருக்கின்றனர். அதுவும், இவர்கள் பேசிய விஷயங்களைப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
அடுத்தடுத்து நடக்கும் சில நிகழ்வுகள் ஆரண்யாவையும் வசந்தையும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன. காரை எடுத்துக்கொண்டு வெளியே செல்லலாம் என்று பார்த்தால், அவர்களது தெரு மட்டுமே திரும்பத் திரும்பக் கண்ணில் தெரிகிறது.
அந்த இடத்தில் என்ன நடக்கிறது? வசந்தும் ஆரண்யாவும் என்ன ஆனார்கள் என்று சொல்கிறது மீதிப்படம்.
இது ஒரு ‘பேண்டஸி’ கலந்த ‘சயின்ஸ் பிக்ஷன் த்ரில்லர்’ திரைப்படம். இதில் ஒரே நபர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் வெவ்வேறு காலத்தில் எதிர்கொள்ளும் நிகழ்வுகள், திடீரென்று நிகழ்கிற ஒரு மாற்றத்தால் ஒரு ‘சுழலாக’ மாறுகின்றன.
குவாண்டம் இயற்பியல் கோட்பாடுகளின் அடிப்படையில் இது சாத்தியம் என்கிறது இப்படம். ஒரே நபர் வெவ்வேறு காலத்திற்குள் செல்ல முடியுமா என்ற கேள்விக்குப் பதில் எவருக்கும் தெரியாது. அதனால், குழப்பமின்றி இப்படத்தைப் பார்த்து முடித்துவிட்டு வெளியே வருவதென்பது அசாத்தியமானது. அதேநேரத்தில், ‘பிளாக்’ பெரிதாக எரிச்சலூட்டவில்லை என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
வித்தியாசமான அனுபவம்!
இந்தப் படத்தில் மொத்தமாக ஒரு டஜன் பாத்திரங்கள் கூட இல்லை. பெரும்பாலான காட்சிகளில் ஜீவாவும் பிரியா பவானிசங்கரும் மட்டுமே வருகின்றனர். அதுவும், தங்களைப் போன்ற தோற்றமுள்ளவர்களைக் கண்டு அதிர்கிற வகையில் காட்சியமைப்பு உள்ளது. அதனை இருவருமே அருமையாகத் திரையில் பிரதிபலித்திருக்கின்றனர்.
இருவரது திரை இருப்பு சுமார் ஒன்றரை மணி நேரங்களுக்கும் மேலாக நிகழ்கிறது என்பதே ஆச்சர்யகரமான விஷயம். இவர்கள் தவிர்த்து ஷரா, யோக் ஜேபீ, ஸ்வயம் சித்தா, விவேக் பிரசன்னா மற்றும் நான்கைந்து பேர் இதில் வந்து போயிருக்கின்றனர்.
கோகுல் பினோயின் ஒளிப்பதிவு, இப்படம் காட்டும் கற்பனை உலகை உண்மையென்று நம்ப வைக்கும்விதத்தில் அமைந்துள்ளது. பிலோமின் ராஜின் படத்தொகுப்பு இப்படத்தின் பெரிய பலம். முன்பாதியில் வரும் மிகச்சிறியதாகக் காட்சிகளில் இடம்பெறும் நிகழ்வுகள், பின்பாதிக் காட்சிகளில் முதன்மையாக இடம்பெறுகின்றன. அந்தக் காட்சிகளைப் பார்க்கிறபோது குழப்பம் ஏற்படாததற்கு அவரது பங்களிப்பு ஒரு காரணம்.
சதீஷ்குமாரின் கலை வடிவமைப்பு, மெட்ரோ மகேஷின் சண்டைக்காட்சி வடிவமைப்பு, எம்.ஆர்.ராஜகிருஷ்ணனின் ஒலிக்கலவை என்று இதிலிருக்கும் சில தொழில்நுட்ப அம்சங்கள் காட்சியமைப்பைச் சுவாரஸ்யப்படுத்த உதவியிருக்கின்றன.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் கே.ஜி.பாலசுப்பிரமணி. இப்படம் ‘coherence’ என்ற ஹாலிவுட் படத்தின் தாக்கத்தில் உருவாகியிருப்பதாக இணையத்தில் சில தகவல்கள் உலவுகின்றன. அந்தப் படத்தைப் பார்க்காத காரணத்தால் எதுவும் சொல்வதற்கில்லை.
வெறுமனே ஒரு சாதாரண ரசிகனாக நோக்கினால், இப்படத்தின் கதை குழப்பத்தையே தரும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. குவாண்டம் இயற்பியல்’ கொள்கைகள் பற்றித் தெரியாதவருக்கு இக்கதை புரிய வேண்டுமென்ற எந்த அவசியமும் இல்லை. ஆனால், அதனைத் தெரிந்தவர்களும் கூட இக்கதையை ஒப்புக்கொள்வது சந்தேகமே. ஏனென்றால், அவை இன்னும் ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.
ஒரே ஆள் உயிரோடு இருந்தால் அல்லது இறந்திருந்தால் என்கிற இரு வேறு சாத்தியக்கூறுகளில், இரண்டுமே நிகழ்ந்தால் என்னவாகும் என்று சிந்திப்பதே ஒரு ‘குழப்பக் கூத்து’. அதேநேரத்தில், அது ஒரு அற்புதமான ‘பேண்டஸி’. அதன் வழியாக, திரையில் ஒரு வித்தியாசமான அனுபவம் கிடைக்கும்.
இரண்டாவதைத் தனதாக்கிக் கொண்டு, ‘பிளாக்’ கதையைத் திரையில் சொல்லியிருக்கிறார் கே.ஜி.பாலசுப்பிரமணி. முன்பாதியில் வரும் சிறு அசைவுகள் கூட, பின்பாதியில் ஒரு காட்சியின் மையப்பொருளாக இருக்கின்றன. அந்த வகையில் இயக்குனர் அமைத்திருக்கும் திரைக்கதை நம்மை ஈர்க்கிறது.
அதேநேரத்தில், இதன் மையைக்கதை பெரிதாகப் புரியாத காரணத்தால் ‘இரண்டாவது முறை பார்க்க வேண்டுமோ’ என்ற எண்ணம் எழுகிறது. அது இந்தப் படத்தின் பலமா, பலவீனமா என்பதை இதன் வெற்றி சொல்லும்..!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரயில் விபத்து வழக்குப்பதிவு – லோகோ பைலட்டிடம் விசாரணை!
வார இறுதியிலும் தங்கம் விலை உயர்வா? இன்று சவரன் எவ்வளவு?
கவரப்பேட்டை விபத்து : பயணிகளின் கவனத்துக்கு… ரத்தான ரயில்களின் விவரம்!