சத்குரு
உட்காரும்போது மெத் மெத் சோபாக்களையும், சாய்வு நாற்காலிகளையுமே உடல் தேடுகிறது. ரிலாக்ஸ் என்ற பெயரில் கூன் போட்டு உட்காருவதும், கோணலாக அமர்வதும் பலரின் பழக்கம். அப்படி அமரும்போது, ஏற்படும் தொய்வினால் உள்ளுருப்புகள் பாதிக்கப்படுவது உங்களுக்கு தெரியுமா?
இதனால் ஏற்படும் அபாயங்களை தவிர்க்க சில சுலபமான குறிப்புகள்…
“உள் உறுப்புகளின் நலத்தை நாம் பலவழிகளில் விளக்கமுடியும். நம் முக்கிய உறுப்புகள் எல்லாம் நெஞ்சு மற்றும் வயிற்றுப்பகுதியில்தான் உள்ளன. அவை மிகவும் கடினமான உறுப்புகள்அல்ல; அவை நட்டு போல்ட் வைத்து நிலைநிறுத்தப்படவில்லை. அவை தளர்வாக அதனதன் இடத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் முதுகுத்தண்டை நேராக வைத்து அமர்ந்தால், உங்கள் உறுப்புகள் அதிகபட்ச நலனுடன் இருக்கும்.”
நம் உடல்நிலையை அதன் நேர்த்திக்கு மாறாக நாம் வைக்கும்போது, நம் உறுப்புகளால் அவற்றின் முழுமையான செயல்திறனுடன் செயல்படமுடிவதில்லை. இது நம் வாழ்நாளின் அளவைக் குறைத்துவிடவும் கூடும்! சாய்வான இருக்கை கொண்ட வேகமாகச் செல்லும் ஒரு வாகனத்தில், 1000 கி.மீ பயணம் செய்தால், உங்கள் வாழ்நாளில் 3 முதல் 5 வருடங்களை நீங்கள் இழக்கக்கூடும். ஒருவேளை அதற்குப்பின் நீங்கள் உடல் புத்துணர்வுக்கான பயிற்சியை செய்தால், இந்த ஆயுள் குறைவைத் தவிர்க்கமுடியும். ஏனென்றால் சாய்வு நாற்காலியில் அமரும்போது அந்த அளவுக்கு நம் உறுப்புகள் குறுக்கப்படுகின்றன.
உங்கள் முதுகுத்தண்டுதான் உங்கள் உடலின்மையம். மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி இது. மூளை உட்பட உங்கள் அனைத்து உறுப்புகளும் தண்டுவடத்தோடு தொடர்புடையவை. இந்த மையத்தை நீங்கள் ஓய்வாக, நேர்த்தியுடன் வைத்தாலே நீங்கள் முதுகுத்தண்டு சம்பந்தமான பிரச்சனைகளையும் பிற உடல்நலப் பிரச்சனைகளையும் பெரும்பாலும் தவிர்க்கமுடியும். யோகமுறையில் இதனை இப்படித்தான் அணுகுகிறோம்.
இதை மனதில் கொண்டு, நாம் நம் உடலின் நிலைப்பாட்டை கொஞ்சம் கவனிக்க வேண்டும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு உங்கள் உடலின் நிலை உங்கள் ஆரோக்கியத்திற்கு உதவுகிறதா அல்லது தீங்காக இருக்கிறதா என்று ஆய்வு செய்யுங்கள். மேலும் ஆரோக்கியமான நிலையில் உங்கள் உடலை வைப்பதற்கான வழிமுறைகளையும் இங்கு பதிவு செய்துள்ளோம்.
உங்கள் உடல் இருக்கும்நிலையை கவனியுங்கள், நீங்கள் எங்கு இருந்தாலும், ஒரு கணம் உங்கள் மனதை உள்செலுத்தி, உங்கள் உடல் இருக்கும் நிலையை கவனியுங்கள்.
• உங்கள் தோள்கள் உங்கள் காதுகளை நோக்கி வளைந்துள்ளதா?
• உங்கள் முதுகு நேராக இருப்பதற்கு பதில், முன்னே வளைந்துள்ளதா?
• உங்கள் மார்பு நிமிர்ந்து இல்லாமல் உள்பக்கம் குழிந்து உள்ளதா?
இதுபோன்ற பிரச்சனைகள் எப்போது வேண்டுமானாலும் தோன்றலாம். நீங்கள் வேலைசெய்யும் நாற்காலியில் அமரும்போது, அல்லது சாய்வு நாற்காலியில் அல்லது கார் ஓட்டும்போது. எனவே உங்கள் உடல் நிலையை சரிசெய்து, அதனால் வரும் முழுபலனை அடைவதற்கு முதல்படி, உங்கள் உடல் இருக்கும் நிலையை கவனிப்பது.
நீங்கள் அமரும் இருக்கையை சரிபாருங்கள்!
உங்கள் உடலின் நிலைசரியாக இருந்தால், வாழ்த்துக்கள்! அப்படி இல்லாமல் மேலே சொன்ன மூன்றில் ஏதோ ஒன்று சரியில்லை என்றாலும், அதற்கான தீர்வைப் பார்ப்போம். முதலில் நாம் அமரும் சூழலை சரிசெய்வதன் மூலம் உடல்நிலையை எப்படி சரிசெய்வது என்று பார்ப்போம்.
• நீங்கள் வேலை செய்யும்போது அமரும் சேர் உங்கள் முழு செயல்திறனை வெளிக்கொண்டு வரும் விதமாக இருக்கிறதா? அப்படி இல்லை என்றால், அதை நீங்களாக அட்ஜஸ்ட் செய்து சரியாக வையுங்கள். இல்லாவிட்டால் வேறு புதிய இருக்கையை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
• நீங்கள் வீட்டில் ஓய்வாக இருக்கும்போது அமரும் சாய்வுநாற்காலியில், சிறு குஷன் போன்ற சிறு தலையணைகளை வைத்து, உங்கள் உடல்நிலையை சரியாக வையுங்கள்.
• கார் ஓட்டும்போதும் இதை கவனிக்க வேண்டும். உங்கள் கார் இருக்கை உங்கள் முதுகை நேராக வைத்திருக்கிறதா எனப்பாருங்கள். இல்லாவிட்டால், உங்கள் கீழ்முதுகு தொய்வின்றி இருக்க ஏற்ற இருக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள்.
மேற்கூறிய எல்லா நிலைகளிலும், உங்கள் உடலின் நிலை சரியாக உள்ளதா என்று அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் சரிபார்க்க வேண்டும். உங்கள் உடலை சரியாக வைக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு மிக அவசியம். அல்லது இருக்கையை அதற்கு ஏற்றமாதிரி அட்ஜஸ்ட் செய்துவைக்க வேண்டும்.
நீங்கள் நடக்கும் போதும் உடல் இருக்கும் நிலையை சரிபாருங்கள்!
அமரும்போது மட்டுமின்றி நிற்கும் போதும், நடக்கும் போதும் உங்கள் உடல்நிலையை சரிபார்க்க வேண்டும். நடக்கும்போது உங்கள் உடல் இருக்கும் நிலையை கவனிப்பது சற்று கடினம் என்றாலும், உங்கள் உடல் குறித்த விழிப்புணர்வு கொள்வதும், முதுகுத்தண்டு சரியாக இருக்கும்வண்ணம் பார்ப்பதும் மிக முக்கியம்.
உடல்நிலையை சரியாகவைப்பது என்பது, ஒருநாளில் சரியாகும் விஷயம் அல்ல. இது பல ஆண்டுகளாக நாம் கவனிக்காமல் வளர்த்து விட்ட கெட்ட பழக்கம். எனவே இதை மாற்ற சிலகாலம் ஆகலாம். மாற்றிவிட்டால் உங்கள் உள்ளுறுப்புகள் சிறப்பாகச் செயல்படும். இதனால் உங்கள் ஆயுள் குறைவதும் தடுக்கப்படும். உங்கள் முதுகுத்தண்டை நேராக அதே சமயம் ஓய்வுநிலையில் வைப்பதன்மூலம் உங்கள் ஆக்கசக்தியும் மேம்படும்.
எப்போதும் முதுகுத்தண்டை நேராக வைப்பதும், நேராக அமர்வதும், நேராக எழுவதும், ஆரம்பத்தில் கடினமாகத் தோன்றலாம். எப்படியும் இவற்றை கவனித்துச் செய்துவிட்டால், அதனால் வருவது அதிகமான நன்மைகளே!
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சமைக்காத இயற்கை உணவின் அற்புதம்!
குழந்தைகள் சொல்பேச்சு கேட்க வேண்டுமா?
திருச்சி: விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய கேப்டனுக்கு ஸ்டாலின் பாராட்டு!
ஜூஸ் வியாபாரி டு பில்லியனர்… சிக்கிய மகாதேவ் செயலி உரிமையாளர்
இரு அறைகள் கொண்ட பிளாட்… மொபைல் கிடையாது… யார் இந்த ஜிம்மி டாடா?