இந்து அல்லாதோர் வீட்டிற்குச் செல்லும் மகள்களின் கால்களை உடைக்கத் தயங்காதீர்கள் என பாஜக முன்னாள் எம்.பி பிரக்யா சிங் தாக்கூர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற மத நிகழ்வில் பாஜகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாதவி பிரக்யா சிங் தாக்கூர் சமீபத்தில் கலந்துகொண்டார்.
அப்போது அவர், “இந்து பெற்றோர்கள் தங்கள் மகள்களின் செயல்பாடுகளில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ‘விதர்மி’ என அழைக்கப்படும் பிற மதத்தைச் சேர்ந்த ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் அல்லது அவர்களின் வீடுகளுக்குச் செல்லும் மகள்களைத் தண்டிக்க வேண்டும்.
நமது மகள்கள் நமக்குக் கீழ்ப்படியாமல், ஒரு விதர்மியின் வீட்டிற்குச் செல்ல முயன்றால், அவர்களின் கால்களை உடைக்கத் தயங்காதீர்கள். ஏனென்றால், நம்முடைய விழுமியங்களைப் பின்பற்றாதவர்கள், சொல்லைக் கேட்காதவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் நல்ல எதிர்காலத்திற்காக அவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றால், அதிலிருந்து பின்வாங்கக் கூடாது.
ஒரு பெண் குழந்தை பிறக்கும்போது, தாயானவள் ‘லட்சுமி வந்துவிட்டாள்’ என்று மகிழ்ச்சி அடைகிறாள். ஆனால் அதே பெண் வளர்ந்து ஒரு ‘மியானி‘யாக (இஸ்லாமியப் பெண்ணைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட இழிவான சொல்) மாறுவதில் தீவிரமாக இருந்தால், பெற்றோர்கள் அத்தகைய பிடிவாதமான மகள்களை உடல்ரீதியாகத் தண்டிக்க வேண்டும்” என்று பேசியுள்ளார்.
”பிற மதத்தைச் சேர்ந்த ஆண்களை, பழுதுபார்க்கும் வேலைகள், குழாய் வேலைகள், வாகனம் ஓட்டுவது போன்ற எந்த ஒரு பணிக்கும் தங்கள் வீடுகளுக்குள் நுழைய இந்துக்கள் அனுமதிக்கக் கூடாது” என்று ஏற்கெனவே பிரக்யா சிங் தாக்கூர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தங்களது சொந்த மகள்களின் கால்களை உடைக்கவும் தயங்காதீர்கள் என தற்போது கூறியுள்ளது சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இந்தக் கருத்துக்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். எனினும், பாஜக தலைமை இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
