”ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட ஆசைப்படுவது வழக்கம். அதனால்தான், நான் என் குடும்பமாகக் கருதும் உங்கள் அனைவருடனும் தீபாவளியைக் கொண்டாட வந்துள்ளேன்” என கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி பேசியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவதை பிரதமர் மோடி வழக்கமாக வைத்துள்ளார். அதன்படி கோவா கார்வார் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ள உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தில் கடற்படை வீரர்களுடன் இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாடினார் பிரதமர் மோடி.

பாகிஸ்தானுக்கு தூக்கமில்லாத இரவுகள்!
தொடர்ந்து அவர் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசுகையில், “சில மாதங்களுக்கு முன்பு, ‘விக்ராந்த்’ என்ற பெயரே பாகிஸ்தான் முழுவதும் அச்ச அலையை அனுப்பியதை நாம் கண்டோம். அதன் பெயர் கேட்டால் எதிரியின் தைரியம் நொறுங்கும். ஐஎன்எஸ் விக்ராந்த் பாகிஸ்தானுக்குத் தூக்கமில்லாத இரவுகளைக் கொடுத்தது.
ஐஎன்எஸ் விக்ராந்த் வெறும் போர்க்கப்பல் மட்டுமல்ல. இது ‘தற்சார்பு இந்தியா’ (Atmanirbhar Bharat) மற்றும் ‘மேக் இன் இந்தியா’ (Make in India) ஆகியவற்றின் எழுச்சி மிகு அடையாளமாகும். 21-ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் கடின உழைப்பு, திறன், தாக்கம் மற்றும் அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்று.
நமது மூன்று படைகளுக்கும் இடையிலான அசாதாரண ஒருங்கிணைப்பு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானை மிகக் குறுகிய காலத்திலேயே சரணடையச் செய்தது. இந்திய கடற்படை ஏற்படுத்திய அச்சம், விமானப்படையின் வியக்கத்தக்கத் திறன் மற்றும் இராணுவத்தின் வீரம் ஆகியவைதான் அதற்குக் காரணம்” என்றார்.

என் குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட வந்துள்ளேன்!
தொடர்ந்து வீரர்களுடன் தீபாவளி கொண்டாடுவது குறித்து பேசிய அவர், “ஒவ்வொருவரும் தங்கள் குடும்பத்துடன் தீபாவளியைக் கொண்டாட ஆசைப்படுவது வழக்கம். நானும் என் குடும்ப உறுப்பினர்களுடன் தீபாவளியைக் கொண்டாடப் பழகிவிட்டேன். அதனால்தான், நான் என் குடும்பமாகக் கருதும் உங்கள் அனைவருடனும் தீபாவளியைக் கொண்டாட வந்துள்ளேன். இந்தத் தீபாவளி எனக்கு உண்மையிலேயே சிறப்பானது.
நேற்றிரவு ஐஎன்எஸ் விக்ராந்தில் கழித்த இரவு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது. நாள் முழுவதும் உங்களைக் கவனித்த பிறகு எனக்குள் ஏற்பட்ட திருப்தி உணர்வுதான், எனக்கு சீக்கிரம் தூக்கம் வரக் காரணம். அது மனநிறைவின் தூக்கம்.
தற்சார்பு அவசியம்!
இந்தியாவின் கடற்படை வீரர்கள் நம் தேசத்தின் கவசம். இவர்களின் அர்ப்பணிப்பு, தைரியம் மற்றும் நாட்டுப்பற்றின் வெளிப்பாடே நாடு பெற்றிருக்கும் வலிமை. இந்த பெரிய கப்பல்கள், காற்றை விட வேகமாகச் செல்லும் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் போன்றவை சக்தி வாய்ந்தவை தான். ஆனால், அவற்றை இயக்கும் உங்களுடைய வீரம்தான் இவற்றிற்கு உண்மையான பலத்தைக் கொடுக்கிறது. இந்த இரும்புக் கப்பல்கள் நீங்கள் ஏறியவுடன், தேசத்தின் உயிர் துடிப்புள்ள படைகளாக மாறுகின்றன.

ஆயுதப்படைகள் வலிமையடைவதற்கு தற்சார்பு நிலை மிக அவசியம். கடந்த பத்தாண்டுகளில், பாதுகாப்புத் துறையின் உள்நாட்டுமயமாக்கல் வேகமாக முன்னேறி வருகிறது.
நமது படைகள் ஆயிரம் வெளிநாட்டுப் பொருட்களின் பட்டியலைத் தயாரித்து, அவற்றை இறக்குமதி செய்யாமல், உள்நாட்டிலேயே தயாரிக்க முடிவு செய்தன. இதன் விளைவாக, பெரும்பாலான அத்தியாவசிய உபகரணங்கள் இப்போது நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன. கடந்த 11 ஆண்டுகளில், நமது பாதுகாப்பு உற்பத்தி மூன்று மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒவ்வொரு 40 நாட்களுக்கும் சராசரியாக ஒரு புதிய போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கிக் கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது.
பிரம்மோஸ் மற்றும் ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் உலக அரங்கில் தங்கள் திறமையை நிரூபித்துள்ளன. பல நாடுகள் இப்போது பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டுகின்றன.
இந்தியா உலகிலேயே முன்னணி பாதுகாப்பு ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக மாற வேண்டும் என்பதே நமது இலக்கு. கடந்த பத்தாண்டுகளில், நமது பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது” என்றார்.
