“ஒரு கட்சியை நடத்துவது என்பது சாதாரமானது அல்ல… கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுக்க கண் இருக்க வேண்டும். உடல் முழுக்க சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும்” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் வேலூர் காட்பாடியில் இன்று (அக்டோபர் 20) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது கரூர் கூட்டநெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் விஜய் இதுவரை நேரில் சந்திக்காதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், “இது குறித்த கேள்வி எல்லாம் நீங்கள் விஜய்யிடம் கேட்க வேண்டும். என்னிடம் கேட்டால் நான் என்ன செய்ய முடியும்? என்னுடைய கருத்து எதுவும் இல்லை.
அனைத்து கட்சிகளுக்கும் தங்களுக்கு எவ்வளவு கூட்டம் வரும் என்று தெரியும். அதனால் தான் விஜய் பரப்புரையை திறந்தவெளி திடலில் வைத்திருக்கலாம் என மக்கள் கூறி வருகிறார்கள். இதில் கட்சிகள் தான் சிறந்த முடிவை எடுக்க வேண்டும்.
கரூர் சம்பவத்திற்கு திமுக எப்படி காரணமாக இருக்க முடியும்? போலீஸ் பாதுகாப்பு, அதற்கான நெறிமுறைகளை ஏற்கெனவே அளித்திருக்கிறார்கள். எங்களை எந்த கொம்பனும் தொட்டு கூட பார்க்க முடியாது. யார் எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.
திமுக அரசு யாரையும் அநாவசியமாக கைது செய்யாது. ஆதாரத்துடன் தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
மேலும் அவர், “விஜய்யின் பரப்புரையில் 41 பேர் இறந்து விட்டார்கள். அவர் மீதுதான் எல்லோரும் குற்றம் சுமத்துகிறார்கள். அவர்தான் பதில் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் வெளியே வராமல் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்று தெரியவில்லை.
மேலும், தாமதமானால் மனம் திருந்தி விடுவார்கள். அதற்குள் துக்கத்தை மறந்து விடுவார்கள். பல பிரச்சனைகள் இருக்கின்றன. அதை எல்லாம் எண்ணி பார்க்கக் கூடிய அரசியல் சாதுரியம் அவருக்கு இருக்கிறதா என்று தெரியாது.
ஒரு கட்சியை நடத்துவது என்பது சாதாரமானது அல்ல… கட்சியை நடத்தும் தலைவருக்கு உடல் முழுக்க கண் இருக்க வேண்டும். உடல் முழுக்க சிந்திக்கும் திறன் இருக்க வேண்டும்.
பல்வேறு குணங்களை கொண்ட, பல்வேறு தொழில் செய்கிற, பல்வேறு விதமான மனிதர்களை அடக்கியதுதான் ஒரு கட்சி. எல்லோரையும் ஒன்றிணைத்து வழிநடத்தும் கட்சி எந்த கட்சியோ, அந்த கட்சியே வெற்றி பெறும், செழிப்பாக இருக்கும். மீண்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்வது குறித்து விஜய் தான் முடிவு செய்ய வேண்டும். அவருடன் இருப்பவர்கள் கூறியதை வைத்து அவர் முடிவு எடுத்திருப்பார்” என துரைமுருகன் கூறினார்.
