அண்ணாமலை மாற்றமா? – டெல்லி பறந்த நயினார் நாகேந்திரன்

Published On:

| By Selvam

தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்ததை தொடர்ந்து, அதிமுக – பாஜக கூட்டணிக்கான காலம் கனிந்துள்ளது. இந்தநிலையில், டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்த பாஜக தலைவர் அண்ணாமலை, “கூட்டணி தொடர்பாக டெல்லி தலைவர்கள் தான் முடிவெடுப்பார்கள். பாஜகவின் புதிய தலைவருக்கான போட்டியில் நான் இல்லை” என்று தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில், ஏப்ரல் 6-ஆம் தேதி பாம்பனில் புதிய ரயில் பாலத்தை திறந்துவைத்துவிட்டு, ராமேஸ்வரத்தில் ரயில்வே, நெடுஞ்சாலை பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பிரதமர் மோடியுடன் மேடையிலும், அண்ணாமலை மேடைக்கு கீழ் பார்வையாளர்கள் இருக்கையிலும் அமர்ந்திருந்தார். BJP MLA Nainar Nagendran Delhi Visit

இதனால் அண்ணாமலையை விட நயினார் நாகேந்திரனுக்கு மோடி முக்கியத்துவம் கொடுப்பதாக பேச்சுக்கள் எழுந்தது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “நடந்தது அரசு நிகழ்வு என்பதால் நான் மேடையேற முடியாது. பாஜகவின் பிரதிநிதிகளாக எங்கள் கட்சியை சேர்ந்த எல்.முருகன், நயினார் நாகேந்திரன் மேடையில் அமர்ந்திருந்தனர்” என்றார்.

விரைவில் தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம் என்ற செய்திகள் வரும் நிலையில், நயினார் நாகேந்திரன் நேற்று டெல்லி சென்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோரை நயினார் நாகேந்திரன் சந்திக்க இருப்பதாக தெரிகிறது. இந்த சந்திப்பு தமிழக பாஜக மற்றும் அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. BJP MLA Nainar Nagendran Delhi Visit

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share