பழனி சட்டமன்ற தொகுதியை மீண்டும் பாஜகவிற்கு பெற்றுத் தரக் கோரி பழனி வந்த அமைச்சர் எல்.முருகனை பாஜகவினர் முற்றுகையிட்டு முழக்கங்களை எழுப்பினர்.
தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இதில் அதிமுக சார்பில் பழனி வேட்பாளராக ரவி மனோகர் நிறுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு பழனி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்.திமுக கூட்டணியில் பழனி சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பழனி வந்த மத்திய அமைச்சர் எல். முருகனை பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுகவிற்கு ஒதுக்கப்பட்ட பழனி தொகுதியை பாஜகவிற்கு பெற்றுத் தரக் கோரி பாஜக தொண்டர்கள் கோஷமிட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
