கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் 8 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு நாளை (செப்டம்பர் 30) தமிழகம் வருகிறது. இந்த குழுவில் அதிமுகவின் எம்.பி.க்கள் யாரும் இடம் பெறாதது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக தலைவர் நடிகர் விஜய்யின் கரூர் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மா.செ. மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமூக ஊடகப் பொறுப்பாளர் நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
இதனிடையே இன்று கரூருக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் வருகை தந்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் எப்படி நிகழ்ந்தது என்பது பற்றி விசாரித்த இருவரும் இந்த சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து பிரதமர் மோடி அறிவித்த தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியையும் வழங்கினர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், கரூர் சம்பவம் தொடர்பாக உண்மையை கண்டறிவதற்கான குழு ஒன்றை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்துள்ளது என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இந்த குழுவில் பாஜக, தெலுங்குதேசம், சிவசேனா கட்சிகளின் எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளனர். ஹேமமாலினி எம்.பி. தலைமையிலான இந்த குழு கரூருக்கு நாளை (செப்டம்பர் 30) வருகை தருகிறது.
அதேநேரத்தில், தமிழகம் சார்ந்த சம்பவத்துக்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் அந்த கூட்டணியில் இருக்கும் அதிமுகவின் எம்.பி.க்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்த குழுவின் பட்டியலைப் பார்த்ததும், அதிமுக எம்.பி.க்கள் பெயர் இல்லாததால் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த உண்மை கண்டறியும் குழு விவகாரம் அதிமுக- பாஜக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.