தமிழகத்தின் கோவைக்கு இன்று வருகை தரும் பிரதமர் மோடி, நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு உதவித் தொகை PM Kisan Samman Nidhi ரூ18,000 கோடியை விடுவிக்கிறார். தமிழ்நாட்டின் 21,80,204 விவசாயிகள் ‘மோடி பணம்’ என்றழைக்கப்படும் விவசாயிகளுக்கான ரூ436 கோடி நிதி உதவியை பெறுகின்றனர்.
பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக- ஜேடியூ கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது. இந்த கூட்டணியின் வெற்றிக்கு காரணமே, தேர்தலின் போது வழங்கப்பட்ட பெண்களுக்கான ரூ10,000 நிதி உதவிதான் என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு.
தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்னர் பிரதமர் மோடி இந்த திட்டத்தை அறிவித்தார். இதனடிப்படையில் தேர்தலின் போது ஒவ்வொரு குடும்பத்திலும் பெண்களுக்கு ரூ10,000 கடன் வழங்கியது பீகார் அரசு. இதுதான் பீகாரில் பாஜக- ஜேடியூ வெற்றிக்கான பார்முலா எனவும் சொல்லப்படுகிறது.
இதே பாணியில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தமிழ்நாட்டிலும் பாஜக செயல்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது. இதனை உறுதி செய்யும் வகையில், சாமானிய மக்களால் ‘ மோடி பணம்’ என்றழைக்கப்படும் விவசாயிகளுக்கான நிதி உதவி தொகையின் 3-வது கட்டத்தை கோவையில் இன்று வழங்குகிறார் பிரதமர் மோடி.
ஒவ்வொரு ஆண்டும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு தலா ரூ6,000- த்தை 3 கட்டங்களாக வழங்குகிறது. இதுதான் விவசாயிகளால் ‘மோடி பணம்’ என்றழைக்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்பட்டு வருகிறது.
‘மோடி பணம்’ எனப்படும் விவசாயிகள் கவுரவிப்பு நிதி திட்டம்
2019-ம் ஆண்டு மத்திய அரசால் இத்திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 20 தவணைகளாக தலா ரூ2,000 வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் ரூ.4 லட்சம் கோடி பணம் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது கோவையில் 21-வது தவணை விடுவிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் 9 கோடி விவசாயிகளுக்கு இந்த ஆண்டின் 3-வது கட்ட தவணை தலா ரூ2,000 வீதம் ரூ18,000 கோடியை இன்று கோவையில் விடுவிக்கிறார் பிரதமர் மோடி.
மத்திய அரசின் இந்த நிதி உதவியை தமிழ்நாட்டில் 21,80,204 விவசாயிகள் பெறுகின்றனர்.
மாவட்ட வாரியாக ‘மோடி பணம்’ பெறும் விவசாயிகள்:
- அரியலூர் – 67,845
- செங்கல்பட்டு – 26,431
- சென்னை – 38
- கோவை – 44,837
- கடலூர் – 75,924
- தருமபுரி – 1,00,192
- திண்டுக்கல் – 73,409
- ஈரோடு – 72,671
- கள்ளக்குறிச்சி – 74,425
- காஞ்சிபுரம் – 21,873
- கன்னியாகுமரி – 1,19,279
- கரூர் – 48,509
- கிருஷ்ணகிரி – 85,527
- மதுரை – 55,494
- மயிலாடுதுறை – 13,154
- நாகப்பட்டினம் – 22,537
- நாமக்கல் – 64,542
- பெரம்பலூர் – 51,570
- புதுக்கோட்டை – 79,747
- ராமநாதபுரம் – 56,799
- ராணிப்பேட்டை – 40,270
- சேலம் – 1,15,753
- சிவகங்கை – 57,976
- தென்காசி – 38,148
- தஞ்சாவூர் – 63,641
- நீலகிரி – 20,460
- தேனி – 26,501
- திருவள்ளூர் – 40,079
- திருவாரூர் – 38,891
- தூத்துக்குடி – 47,336
- திருச்சி – 99,739
- திருநெல்வேலி – 29,344
- திருப்பத்தூர் – 39,134
- திருப்பூர் – 61,356
- திருவண்ணாமலை – 1,39,012
- வேலூர் – 34,993
- விழுப்புரம் – 82,947
- விருதுநகர் – 49,821
தமிழகத்தில் மொத்தம் 21,80,204 விவசாயிகளுக்கு ரூ 436 கோடியை 3-வது கட்டமாக வழங்குகிறார் பிரதமர் மோடி. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கோவையில் விவசாயிகளுக்கான நிதியை மோடியை விடுவிப்பதும் ‘பீகார் ஃபார்முலாவா?’ என்பது எதிர்க்கட்சிகளின் கேள்வி.
