பீகார் சட்டமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடக் கூடும் என கூறப்படுகிறது.
பீகார் சட்டமன்ற தேர்தல் நவம்பர் 6 மற்றும் 11-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 14-ந் தேதி எண்ணப்படும்.
பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் காங்கிரஸ்- ஆர்ஜேடி- இடதுசாரிகளை உள்ளடக்கிய இந்தியா கூட்டணி அல்லது Mahagathbandhan கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது.
பாஜக கூட்டணியில் பாஜக- ஜேடியூ கட்சிகள் தலா 101 தொகுதிகளில் போட்டியிடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 தொகுதிகளில் போட்டியிடக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக காங்கிரஸ் கட்சிக்கு 52 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முடியும் என ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்தியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா மற்றும் இடதுசாரி கட்சிகளும் இடம் பெற்றுள்ளன. பீகார் தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 12 தொகுதிகளையும் இடதுசாரிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 24 தொகுதிகளையும் கேட்டு வருகின்றன.
இந்த பின்னணியில் இந்தியா கூட்டணி இன்று தொகுதிப் பங்கீட்டை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது.