சுமார் நான்கு வாரங்களாக பிக்பாஸ் பெரிதாக ரசிக்கும்படி இல்லாமல் அதே நேரம் சந்தைக்கடை சத்தம் போலவும் குழாயடிச் சண்டை போலவும் இருந்த நிலையில் , இது வேலைக்கு ஆகாது என்று நான்கு புதிய போட்டியாளர்களை களத்தில் இறக்கியது பிக்பாஸ் சீசன் 9
வந்தவர்களில் அமித் பார்கவ் எல்லோருக்கும் தெரிந்த நடிகர் . பிரஜின் தொலைக்காட்சித் தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்தவர். அவரது மனைவி சாண்ட்ரா சின்னத்திரை மூலம் பிரபலமானவர். பிரஜினும் சான்ட்ராவும் கணவன் மனைவி . அடுத்து திவ்யா கணேஷ் என்ற ஒரு போட்டியாளர் .
இவர்கள் உள்ளே வந்த பிறகு இவர்கள் ஓரளவுக்கு பிரபலம் என்பதால் பிக்பாஸ் சற்றே நிமிர்ந்து உட்காருவது போல தெரிகிறது .
அதை ஆமோதிக்கும்படியாக ஒரு சம்பவம் . !
பிரஜின் கமருதீன் பிரவீன் மூவரும் சேர்ந்து சீரியசாக சண்டை போட்டுக் கொள்வது போல ‘பிராங்க்’ பண்ண ஆரம்பித்தார்கள் . உண்மை சண்டை என்றால் கண்ட்ரோலாக இருக்கும் போட்டியாளர்கள் பொய்ச் சண்டை என்பதால் சும்மா ‘விளையாடி’னார்கள்.
இதுதான் சாக்கு என்று பிரவீனை நிஜமாகவே அடித்தார் கமருதீன் . அந்த சண்டையில் பிரஜினும் உள்ளே புகுந்து கட்டி உருள , அது பொய்ச் சண்டை என்று தெரியாத சான்ட்ரா பயந்து பதறி நடுங்கிக் கதறி விட்டார்
தனது கணவன் பிரஜினைப் பார்த்து , ” ஏன் இப்படி பண்ற ? நீயா இப்படிப் பண்ற? நமக்கு பிள்ளைகளை யோசிச்சுப் பாத்தியா? ” என்று கதறியதோடு அழுதபடி தனியே போய் பரிதாபமாக அழுது கொண்டிருந்தார் .
வந்த முதல் நாள் அன்று முன்பே பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களை ரொம்ப கெத்தாக பந்தாவாக விமர்சித்த சான்ட்ரா அடுத்த நாளே இப்படி குழந்தை போல அழு, பழைய போட்டியாளர்கள் , “ப்பூ.. இவ்வளவுதானா?” என்பது போலப் பார்த்தார்கள் .
சண்டை முடிந்த பிறகும் பிரஜின் சான்ட்ராவிடம் இது பொய்ச் சண்டை என்று சொல்லவில்லை. ”ஏன் இப்படி பண்ண/” என்று சான்ட்ரா கேட்டபோது, “ஒண்ணும் பிரச்னை இல்ல . பாத்துக்கலாம் விடு ” என்று ‘மெயின்டைன்’ செய்தார் பிரஜின்
எப்போது அது பிராங்க் என்பது சாண்ட்ராவுக்குத் தெரிய வரும்? இதுவரை கணவனை நிஜத்தில் பார்த்ததாக நம்பும் சான்ட்ரா அப்போது எப்படி ரியாக்ட் செய்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .
அதெல்லாம் சரி நம்மளால குடும்பத்துல ஏதும் குழப்பம் வந்துடக் கூடாது பாஸ்ஸூ !
- ராஜ திருமகன்
