கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா பகுதியில் பால் வாகனத்தை திறந்து கரடி ஒன்று பாலை ருசி பார்த்துள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது குடியிருப்பு பகுதிக்குள் வந்து செல்கின்றன. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வாழும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில் கோத்தகிரி அருகே உள்ள கேர் பெட்டா பகுதியில் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யும் வாகனம் வழக்கம் போல் நின்றிருந்தது. அப்போது அங்கு வந்த கரடி ஒன்று பால் வாகனத்தை அசால்ட்டாக திறந்து பால் பாக்கெட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து ருசி பார்க்கிறது.
இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வனத்துறையினர் இதுபோன்ற சம்பவம் நடைபெறும் இடங்களில் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.