தமிழகத்தின் டாலர் சிட்டியான திருப்பூரில் தீபாவளியையொட்டி 9 நாட்களுக்கு பனியன் கம்பெனிகள் விடுமுறை அறிவித்துள்ளது.
திருப்பூர் பனியன் நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். மேலும் பீகார், ஒரிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட லட்சக்கணக்கான வட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் திருப்பூர் பனியன் கம்பெனிகளில் பணியாற்றி வருகின்றனர்.
புலம்பெயர்ந்து வந்து தமிழகத்தில் தங்கி பணியாற்றும் தொழிலாளர்கள் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால் அனைத்து நிறுவனங்களிலும் தீபாவளி போனஸ் வழங்குவதோடு, விடுமுறையும் அறிவிக்கப்படும்.
அந்த வகையில் இந்த ஆண்டு சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்கள் திரும்பி வர தாமதமாகும் என்பதை கருத்தில் கொண்டு பெரும்பாலான பனியன் நிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து 9 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளன.
இதனால் நாளை முதல் 26 ஆம் தேதி வரை திருப்பூரில் பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் திருப்பூர் ரயில் நிலையத்தில் சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதிக பணி உள்ள சில நிறுவனங்கள் மட்டுமே புதன்கிழமை இயங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.