அரசு நலத்திட்ட விளம்பரங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், முன்னாள் முதல்வர்களின் படங்களை பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் உள்ளிட்ட அரசின் திட்ட விளம்பரங்களில் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கலைஞர், திமுக சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பதவியில் இருக்கும் முதல்வரின் புகைப்படத்தை பயன்படுத்த தடையில்லை. ஆனால் அரசியல் கட்சிகளின் கொள்கை தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள், கட்சி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தவும், வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும்
புதிதாக அரசு நலத்திட்டங்களைத் தொடங்கும்போதும் செயல்படுத்தும்போதும், எந்தவொரு ஆளுமையின் பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் இன்று (ஆகஸ்ட் 4) மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று (ஆகஸ்ட் 4)விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அரசாங்கத்தால் தொடங்கப்படும் சமூக நலத் திட்டங்களுக்கு இதுபோன்ற பெயர்களைப் பயன்படுத்துவதற்கு ஏன் தடை இருக்க வேண்டும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதிகள் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி விசாரிப்பதாக கூறினர்.