ADVERTISEMENT

யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்? டென்னிஸ் சாம்பியன்.. சாப்பிடும் முன் தவறாமல் செய்யும் ‘அந்த’ செயல்.. நெகிழும் உறவுகள்

Published On:

| By easwari minnambalam

background on Vice President C P Radhakrishnan

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே (ஜூலை 21) யாரும் எதிர்பார்க்காத வகையில் துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர் (Jagdeep Dhankhar) தனது பதவியை ராஜினாமா செய்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப்டம்பர் 9ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணன், துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக நேற்று இரவு அறிவிக்கப்பட்டார்.

தமிழகத்தின் கொங்கு மண்டலத்தில் பெரும்பான்மையினராக உள்ள கவுண்டர் ஜாதியை சேர்ந்த சி.பி.ராதா கிருஷ்ணனை துணை குடியரசு தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

திருப்பூரில் சி.கே.பொன்னுசாமி- ஜானகி தம்பதிக்கு மகனாக 1957ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி பிறந்தார். தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரம் கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார். இளமை பருவத்தில் டேபிள் டென்னிஸில் கல்லூரி சாம்பியனாக திகழ்ந்தார். மேலும் கிரிக்கெட், வாலிபால் போன்ற விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர். இவருக்கு சுமதி என்ற மனைவியும், அபிராமி என்ற மகளும், ஹரி சஷ்டி வேல் என்ற மகனும் உள்ளனர்.

அரசியல் பிரவேசம்

இளம் வயதிலேயே அரசியலின் பக்கம் ஈர்ப்பு ஏற்பட்டதால் சி.பி.ராதா கிருஷ்ணன் 16 வயதில் ஆர்.எஸ்.எஸ். பாரதிய ஜன சங்கம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணியாற்றி வந்தார்.

ADVERTISEMENT

1974ம் ஆண்டு, இன்றைய பாஜகவின் முன்னோடி இயக்கமான ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் எமர்ஜென்சி காலத்தில் மாணவர்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார்.

1982-ல் பாஜக தொடங்கப்பட்டது முதலே அதில் பயணத்தை தொடர்ந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

1990களில் தமிழக பாஜகவின் முகங்களில் ஒருவராக செயல்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணன், 1996-ம் ஆண்டு, தமிழக பாஜக மாநில செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கோவை குண்டு வெடிப்பை தொடர்ந்து நடந்த 1998ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 1,50,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பின்னர் 1999ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 55,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மீண்டும் 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் தோல்வியடைத்தார். கடந்த 2014 மற்றும் 2019 பொதுத் தேர்தலில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். மக்களவைத் தேர்தல்களில் 5 முறை போட்டியிட்டு 2 முறை மட்டுமே வென்றவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த சி.பி. ராதா கிருஷ்ணன் துணிநூல் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராக இருந்தார். மேலும்
பொதுத் துறை நிறுவனங்கள் தொடர்பான குழுவிலும், நிதி ஆலோசனை குழுவிலும் , பங்குச் சந்தை ஊழல் தொடர்பான நாடாளுமன்ற விசாரணைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

கடந்த 2004 முதல் 2007 வரை, தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றினார்.

மாநிலச்செயலாளராக இருந்த போது 19,000 கி.மீ தூரம், 93 நாள் ‘ரதயாத்திரை’ ஒன்றை மேற்கொண்டு மக்களின் கவனத்தை பாஜகவின் பக்கம் திரும்பும் முயற்சியில் ஈடுபட்டார்.இந்திய நதிகளை இணைப்பது, தீவிரவாதத்தை ஒழிப்பது, பொது சிவில் சட்டம், போதைப் பொருட்கள் பரவலைத் தடுப்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் ரத யாத்திரை நடத்தப்பட்டது.

மோடி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 2016 ஆம் ஆண்டு, தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். கயிறு வாரியத்தின் தலைவராக அவர் பதவி வகித்த காலத்தில், இந்தியாவின் கயிறு ஏற்றுமதி ரூ.2,532 கோடியாக உயர்ந்து.

கடந்த 2020 முதல் 2022 வரை பா.ஜ.கவின் கேரளா மாநில மேலிடப் பொறுப்பாளராக இருந்தார்.

ஆளுநராக சி.பி. ராதாகிருஷ்ணன்

2023 பிப்ரவரி 18 அன்று, ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தெலங்கானா மாநில ஆளுநரின் பொறுப்புகளையும் புதுச்சேரி துணை ஆளுநரின் பொறுப்புகளையும் கவனித்துக் கொண்டார். 2024 ம் ஆண்டில் ஜூலை 31ம் தேதி மகாராஷ்டிர மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார் சிபிஆர்.

சர்ச்சைகளில் சிக்கிய சி.பி.ராதாகிருஷ்ணன்

அரசியலில் பல பொறுப்புகளை வகித்த போதிலும் அதிரடியான தனது பேச்சால் சில நேரங்களில் சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார்.

ஜார்கண்ட் மாநில ஆளுநராக பொறுப்பேற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கோவையில் நடந்த பாராட்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியுடன் பயணிக்கும் வரை மட்டுமே உனக்கு பிரச்சனை இல்லை. இல்லாவிட்டால் நீ காணாமல் போய் விடுவாய் என சர்ச்சைக்குரிய வகையில் வானதி சீனிவாசனை ஒருமையில் பேசினார்.

மேலும் கடந்த 2018ம் ஆண்டு கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவில் பேசிய சி.பி.ராதாகிருஷ்ணன் “1998-ம் ஆண்டு நடந்த கோவை குண்டுவெடிப்பு சம்பவங்களுக்குக் காரணமான காவலர் செல்வராஜ் வெட்டிக் கொல்லப்பட்டதை அடுத்து, நடந்த அத்தனையும் (கலவரம்) பா.ஜ.க-வோ, இந்து முன்னணியோ செய்தது அல்ல. அவை, காவல் துறையினரே பொறுக்க முடியாமல் செய்ததுதான். ஆனால், காவல்துறையினரில் ஒருவரைக்கூட ஒருபோதும் பா.ஜ.க-வினர் காட்டிக்கொடுக்கவில்லை. காவல் துறையை காட்டிக்கொடுப்பது, தேசத்தை காட்டிக்கொடுப்பது போல என்று நினைப்பவர்கள் நாங்கள்”என்று பேசியது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதேபோல் இந்த ஆண்டு மார்ச்சில், சச்சின் நந்தா எழுதிய “ஹெட்கேவர் வாழ்க்கை வரலாறு” புத்தக வெளியீட்டு விழாவில், “தமிழ்நாட்டை எந்த தமிழனும் உருவாக்கவில்லை, ஆங்கிலேயர்களால் அரசியல் ரீதியாக உருவாக்கப்பட்டது” என்று கூறினார். மேலும், ஆர்.எஸ்.எஸ். தேசபக்தர்களை உருவாக்கியதாகவும், தமிழ்நாடு சேர, சோழ, பாண்டிய, கொங்கு நாடாக தனித்தனியாக இருந்ததாகவும் பேசினார். சி.பி.ராதா கிருஷ்ணனின் இந்த பேச்சு தமிழர் அடையாளத்தையே கேள்விக்குள்ளாக்குவதாக விமர்சிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய துணை குடியரசுத் தலைவர் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரை தேர்வு செய்ய நேற்று பாஜக ஆட்சி மன்ற குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த சி.பி.ராதாகிருஷ்ணன் தாயார் ஜானகி, முன்னாள் ஜனாதிபதி சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் போல் வரவேண்டும் என்று எண்ணி பெயர் வைத்தோம். இன்று அது நிறைவேறும் தருணம் வந்துவிட்டது என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

கொங்கு உணவுப்பிரியர்

இந்நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவரிகளிடம் பேசுகையில், அவரின் விருப்பமான உணவு பட்டியலில் கொங்கு சமையலுக்கு எப்போதும் முதல் இடம் உள்ளது. சைவ உணவுப்பிரியரான இவர் வாரத்தில் குறைந்தது 4 முறையாவது பாசிப்பயிறு உணவில் சேர்த்து கொள்வார்.

உணவுக்கு முன் எப்போதும் இறைவனை வணங்கும் பழக்கம் கொண்ட சி.பி.ராதாகிருஷ்ணன் சாப்பிடும் முன் சிறிதளவு உணவை காக்கைக்கு வைக்கும் பழக்கம் கொண்டவர். இதில் ஹைலைட் என்னவென்றால் ஐந்து நட்சத்திர விடுதியில் சாப்பிடும் போதும் இந்த பழக்கத்தை தவற விட மாட்டார் என்று கூறப்படுகிறது.

தலைவர்கள் வாழ்த்து

இந்நிலையில் இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 1998 ம் ஆண்டு அதிமுக – பாஜக – மதிமுக கூட்டணி இருந்த பொழுது கோவை குண்டு வெடிப்பு நடந்தது. ஏராளமானோர் இறந்தனர். அந்த ஆண்டு நடந்த தேர்தலில் 3 நாட்கள் கோவை நாடாளுமன்ற தொகுதியில் திறந்த வேனில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததை நினைவூட்டினார். மேலும் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக அறிவிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி என்றவர் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். மேலும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாட்டு எம்.பி.க்கள், கட்சி பேதமின்றி ஒரு மனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share