தமிழ் என்றில்லை, பெரும்பாலான இந்திய இயக்குனர்களிடம் ‘உங்களுக்குப் பிடித்த ஹாலிவுட் படம் எது’ என்று கேட்டால் ‘காட்பாதர்’ என்று சொல்வார்கள். பிரான்சிஸ் போர்ட் கப்போலா இயக்கத்தில் மார்லன் பிராண்டோ, அல் பாசினோ நடித்த அந்தப் படம் அவ்வளவு பிரபலம். போலவே, ‘கல்ட் கிளாசிக்’ ஆகக் கொண்டாடப்படுகிற ஒரு ‘கேங்ஸ்டர்’ திரைப்படம்.
அதேபோன்று ரொமான்ஸ், த்ரில்லர், அட்வெஞ்சர், ஆக்ஷன் படங்கள் வரிசையிலும் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் கதாசிரியர்களுக்கும் நடிகர் நடிகையருக்கும் சில ‘பேவரைட் படங்கள்’ பட்டியல் இருக்கும்.
அந்த வரிசையில், ’சயின்ஸ் பிக்ஷன் பேண்டஸி’ வகைமையில் அமைந்த ‘டைம் ட்ராவல்’ படங்களில் ‘கிளாசிக்’ ஆகக் கொண்டாடப்படுகிற படங்களில் முதன்மையானது ‘பேக் டூ தி ப்யூச்சர்’. ’இன்று நேற்று நாளை’ தந்த இயக்குனர் ரவிக்குமார் உட்படப் பல தமிழ் இயக்குனர்களின் ஆதர்சமாக இருப்பது இப்படமே.
ராபர்ட் ஜெமிகிஸ் இயக்கத்தில் மைக்கேல் ஜே பாக்ஸ், கிறிஸ்டோபர் லாய்ட் நடித்த இப்படமானது பல ஆண்டுகளாக ‘ஐஎம்டிபி’ தளத்தில் 8.5 புள்ளி ரேட்டிங் உடன் வலம் வருகிறது. இப்படம் இதுவரை மூன்று பாகங்களைக் கண்டுள்ளது.
இந்த சீரிஸின் முதல் பாகம் வெளியாகி 40 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. அதனைக் கொண்டாடுகிற வகையில், இப்படமானது வரும் அக்டோபர் 31ஆம் தேதியன்று உலகமெங்கும் ‘ரீரிலீஸ்’ ஆகிறது. அதுவும் ஐமேக்ஸ், டி-பாக்ஸ், 4டிஎக்ஸ் நுட்பத்தில் வெளியாகவிருக்கிறது.
ஏற்கனவே இப்படத்தின் தமிழ் ‘டப்பிங்’ பதிப்பை விஜய் தொலைக்காட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ரசிகர்கள் கண்டுகளித்திருக்கலாம். அவர்கள் அனைவரும் பெரிய திரையில் காணத் தற்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
இனிவரும் நாட்களில் ‘டைம் ட்ராவல்’ கதையம்சம் கொண்ட படங்கள் பல நம்மூரில் வெளியாக, இந்த சந்தர்ப்பம் ஒரு விதையாகவும் அமையலாம். யார் கண்டது?