பெண் டிஎஸ்பி மீது தாக்குதல் நடத்தியவர் கைது!

Published On:

| By christopher

Attacker on female DSP arrested!

பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

ராமநாதபுரத்தை சேர்ந்த காளிக்குமார், நேற்று தனது சரக்கு வாகனத்தை ஓட்டி சென்றபோது திருச்சுழி அருகே மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இதனையடுத்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி காளிக்குமார் உறவினர்கள் இன்று காலை அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்‌.

இதனை அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் தடுக்க முயற்சித்த நிலையில், போலீசார் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதில் போராட்டக்காரர்கள் கும்பலாக சேர்ந்து  டிஎஸ்பி காயத்ரியை சுற்றிவளைத்து தலைமுடியை பிடித்து இழுத்து தாக்குதல் நடத்தினர். உடனடியாக காயத்ரியை அங்கிருந்த சக போலீசார் மீட்ட நிலையில் போராட்டக்காரர்கள் மீது இடையே தடியடி நடத்தினர்.

இந்த சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், பாலமுருகன் என்பவரை அருப்புக்கோட்டை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

இதற்கிடையே பெண் டிஎஸ்பி மீதான தாக்குதலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தின் போது கலவரம் ஏற்படாமல் தடுக்க முற்பட்ட பெண் துணை கண்காணிப்பாளர் காயத்ரியை போராட்டக்காரர்கள் தலை முடியை இழுத்து தாக்க முயன்றதாக செய்திகளில் வரும் காட்சிகள் அதிர்ச்சியளிக்கின்றன.

திமுக ஆட்சியில் சட்டத்தின் மீது எந்தவித பயமும் இன்றி யாரை வேண்டுமானாலும் தாக்கலாம் என்ற அச்சமற்ற அவலநிலையில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!

மக்களை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினருக்கே, தங்கள் பணியின்போது தாக்கப்படும் அளவு பாதுகாப்பில்லாத சூழலை உருவாக்கியுள்ள இந்த திமுக அரசுக்கும், முதல்வருக்கும் கடும் கண்டனம்.

அருப்புக்கோட்டை பெண் டிஎஸ்பி காயத்ரியை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனி சீருடையில் உள்ள காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தும் தைரியம் யாருக்கும் வராத அளவிற்கு தண்டனை கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யுமாறும்,

காவல்துறையினர் உட்பட தமிழ்நாட்டில் அனைவருக்குமான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்துமாறும் திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

எதிர் அணி வீரரை கடித்து வைத்த உருகுவே சவுரஸ்… கால்பந்து விளையாட்டுக்கு முழுக்கு!

குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share