டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய 4 மருத்துவர்களின் பெயர்கள் தேசிய மருத்துவ பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லி செங்கோட்டை அருகே உள்ள மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலில் நவம்பர் 10 ஆம் தேதி நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் 13 பேர் பலியாகிய நிலையில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து NIA விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது பயங்கரவாத செயல் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய பலர் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள அல் ஃபலா பல்கலைகழகத்தில் படித்தவர்களாகவோ, பணியாற்றியவர்களாகவோ உள்ளனர். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையில் அல் ஃபலா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 3 மருத்துவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் மேலும் 2 மருத்துவர்களை காவல்துறை கைது செய்தது. அதில் ஒருவர் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பை முடித்துள்ளார். அவர் அல் ஃபலா பல்கலைக்கழகத்தில் கடந்த நவம்பர் 2ம் தேதிதான் தன் பயிற்சி காலத்தை முடித்துள்ளார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் கார் குண்டு வெடிப்பு சம்பவம், மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்குகளில், கைது செய்யப்பட்ட முசாஃபா் அகமது, அடீல் அகமது ராத்தா், முசாமில் ஷகீல், ஷஹீன் சயீத் ஆகியோர் மீது நாட்டின் இறையாண்மைக்கு எதிரான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் மருத்துவர்கள் என்பதால் தேசிய மருத்துவ ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தேசிய மருத்துவ பதிவேட்டில் இருந்து 4 பேரின் பெயர்களையும், நீக்கி தேசிய மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே அவா்கள் 4 பேரும் இனி இந்தியாவில் எந்த பகுதியிலும் மருத்துவா்களாக செயல்படவோ, நாட்டில் எங்கும் மருத்துவ ரீதியிலான சந்திப்புகளை நடத்தவோ முடியாது. சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ், அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தொடா்ந்து இந்த கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது
மேலும் இந்த நான்கு மருத்துவர்களின் செயல், மருத்துவர்களிடம் எதிர்பார்க்கப்படும் நேர்மை, நல்லொழுக்கம், மக்கள் நம்பிக்கை ஆகியவற்றுக்கு ஏற்றதல்ல என தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட வெடிமருந்துகள் காஷ்மீரின் நௌகாம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. அதை ஆய்வு செய்யும் பணி நேற்று இரவில் நடந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகி உள்ளனர். 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
