ADVERTISEMENT

சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

Rest room for sanitation workers in Chennai

சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான உணவு அளிக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசினார். அப்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வறைகள் அமைத்து தரப்படும் என தெரிவித்தார்.

ADVERTISEMENT

தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு, குடியிருப்புக்கான வீடுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய முதல்வர்,” தினமும் காலையில் விடிகின்றபோது நம்முடைய சென்னை, முந்தைய நாள் குப்பைகள் இல்லாமல், தூய்மையாக இருக்கிறது என்றால், அதற்குக் காரணம், இரவு முழுவதும் கடுமையாக உழைக்கின்ற, தூய்மைப் பணியாளர்களாக இருக்கக்கூடிய நீங்கள்தான்!
அப்படிப்பட்ட உங்களுக்கு உணவு வழங்கும் இந்த முதலமைச்சரின் உணவுத் திட்டத்தை தொடங்கி வைப்பதில் நான் உள்ளபடியே பெருமை அடைகிறேன்!

ADVERTISEMENT
அரசின் பொறுப்பு

மாநகரத்தை தூய்மையாக பாதுகாக்கின்ற உங்களை பாதுகாக்க வேண்டியது எங்களுடைய கடமை! உங்களுடைய மாண்பு காக்கப்பட வேண்டும்! உங்களுடைய வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்! உங்களுடைய நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும்! இதுதான், சமூகநீதி!

இந்த சமூகநீதிப் பயணத்தில் உங்கள் சுயமரியாதையை காத்து – உங்கள் பசியைப் போக்கிடத்தான், இன்றைக்கு இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டத்தை தொடங்கியிருக்கிறோம்!

ADVERTISEMENT

இந்தத் திட்டத்தின்படி, தூய்மைப் பணியாளர்களுக்கு அவர்களுடைய பணிகளுக்கு இடையில், உணவு வேளையில் சுவையும் – ஆரோக்கியமும் நிறைந்த உணவு வழங்கப்படும்.

தூய்மையான முறையில் சமைத்து, டிஃபன் பாக்ஸில் வைத்து, சூடு குறையாமல் இருப்பதற்கு வெப்பக் காப்புப் பையில் அதை எடுத்துச் செல்லப்பட்டு, தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றும் இடத்திற்கு அருகாமையிலேயே உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான கட்டிடத்தில் உணவு பரிமாறப்படும்.

ADVERTISEMENT

நம்முடைய நலனுக்காக உழைக்கின்ற மக்களுக்கு உணவு அளிப்பது அரசின் பொறுப்பு என்கின்ற உணர்வோடுதான் இந்தத் திட்டத்தை செயல்படுத்துகிறோம்.

இது இல்லாமல், தமிழ்நாட்டில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக நம்முடைய கழக ஆட்சி காலத்தில் செய்த, மற்ற முக்கியமான திட்டங்கள் நிறைய செய்திருக்கிறோம். அதுபற்றி நான் சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்,

2006 – 2011-ல் தலைவர் கலைஞர் ஆட்சி காலத்தில்தான், தூய்மைப் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டது. அவர்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதற்கு அதனை வழிவகை செய்தோம். தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் தொடங்கப்பட்டது.

தாட்கோ நிறுவனம் மூலமாவும், தூய்மைப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு தொழில் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு, அவர்கள் தொழில் முனைவோராக வழிவகை செய்யப்பட்டது. தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதாரக் காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல், தடுப்பூசி முகாம்கள் ஆகியவை கட்டாயமாக்கப்பட்டன.

நகர்ப்புறப் பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் தள்ளுவண்டி பயன்படுத்துவதால், அவர்களுக்கு ஏற்படக்கூடிய கஷ்டத்தைப் போக்குவதற்கு மூன்று சக்கர மிதிவண்டி வாகனங்கள் மற்றும் இலகு ரக வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு முதன்முறையாக, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம் துவங்கப்பட்டது. மேலும், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கக்கூடிய பணியில் ஈடுபட்டு, பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்கள் வாரிசுகளுக்கு கருணைத் தொகையாக 30 இலட்சம் ரூபாய் வழங்கக்கூடிய திட்டம் உருவாக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இப்போது நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டு, கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர்
12-ஆம் தேதி, மதுரையில் நான் தொடங்கி வைத்தேன்.

இந்த திட்டத்தில், நான் முதல்வன் திறன் பயிற்சி, பாதுகாப்பு உபகரணம் வழங்குதல், ஹெல்த் இன்சூரன்ஸ், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தில், தொடர் உடல்நல பரிசோதனைகள் மற்றும் மாற்று வாழ்வாதார நடவடிக்கைகள் ஆகியவற்றை தடையின்றி பெற ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இதற்காக, 50 கோடி ரூபாய் – அறக்கட்டளை நிதி உருவாக்கப்பட்டு, தூய்மைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை மேம்படுத்தப்பட நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சென்னை பெருநகர் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில், பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் நடைபெறும் அனைத்து பணிகளும், முழுமையாக இயந்திரமயம் ஆக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் நிறைய நலத்திட்டங்கள் செயல்பாட்டில் இருக்கிறது. இவ்வளவு செய்திருந்தாலும், உங்களுக்கான தேவைகள் இன்னும் நிறைய இருக்கிறது என்று எனக்கு நன்றாக தெரியும்!

நான் நிச்சயமாக சொல்கிறேன்… அதையெல்லாம் நம்முடைய திராவிட மாடல் அரசு படிப்படியாக செய்யும் என்பதை நம்பிக்கையோடு தெரிவித்துக் கொள்கிறேன்!

200 வார்டுகளிலும் ஓய்வறைகள்

இரவு பகல் பார்க்காமல் நீங்கள் உழைக்கிறீர்கள்… ஆனால், உங்களுக்கென்று தனியாக ஓய்வறை இல்லை என்று பலரும் கவலைப்படுவதாக என்னிடம் சொன்னார்கள்… பலபேர் என்னிடத்தில் சொன்னார்கள். அதனால், இந்த நிகழ்ச்சி மூலமாக ஒரு அறிவிப்பை வெளியிட விரும்புகிறேன்…

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளிலும், தூய்மைப் பணியாளர்களுக்காக பிரத்யேகமாக, 300 சதுர அடி அளவில் உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் ஓய்வறைகள் கட்டப்பட்டு, பயன்பாட்டிற்கு அவைகள் கொண்டு வரப்படும்!

அதுமட்டுமல்ல, இன்றைக்கு தொடங்கப்பட்டிருக்கின்ற இந்த முதலமைச்சரின் உணவுத்திட்டம் வருகின்ற டிசம்பர் 6-ஆம் தேதி முதல் அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும். உங்களுடைய மற்ற கோரிக்கைகள் படிப்படியாக நிச்சயம் நிறைவேற்றித் தரப்படும் என்றார்.

மேலும், சுய ஒழுக்கம் இல்லாமல், முழுமையான வளர்ச்சியோ, சமூக மேன்மையோ அடைவதற்கு சாத்தியமே கிடையாது! அரசு தன்னுடைய கடமையை செய்யும்! மக்களும் பொறுப்பாக இருந்து, பொது இடங்களையும் நம்முடைய மனங்களையும் தூய்மையாக வைத்திருப்போம்.என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share