ராஜன் குறை
நவீன உலகில் முதன்முதலில் அரசனில்லாத குடியரசு ஒன்றை அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் 1776-ம் ஆண்டு உருவாக்கிய நாடு அமெரிக்கா. இன்னும் இரண்டு ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் (United States of America) என்ற அந்த குடியரசு தோன்றி 250 ஆண்டுகள் நிறைவடையும். உலகின் சக்திவாய்ந்த ராணுவத்தை வைத்துள்ள அந்த நாடு, உலகின் பொருளாதார வளமிக்க, தொழில் வளர்ச்சியில் முன்னேறிய நாடாகவும் உள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டு முதல்வர் அந்த நாட்டிற்குச் சென்று வெற்றிகரமாக அங்குள்ள முன்னணி தொழில் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் தொழில் துவங்க, முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் முதல்வரை வரவேற்று பல நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்ந்துள்ளார்கள். தமிழர்கள் உட்பட கணிசமான இந்திய வம்சாவளியினர் அங்கே வாழ்ந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து சென்ற சியாமளா கோபாலன் என்ற பெண்மணிக்கும், டொனால்டு ஹாரிஸ் என்ற கருப்பினத்தவருக்கும் பிறந்த கமலா ஹாரிஸ் குடியரசு துணைத் தலைவரானதுடன், தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் டெமாக்ரடிக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு வருகிறார்.
ஆனாலும் அமெரிக்க அரசியல் ஒரு தீவிரமான முரணை சந்தித்து வருகிறது. இப்படி பல்வேறு நாடுகளிலிருந்து குடியேறியவர்களின் நாடாக அது இருந்தாலும், அதில் நிறவேற்றுமையும், இன வெறுப்பரசியலும் இன்றும் நிலவுகிறது. கமலா ஹாரிஸை எதிர்த்துப் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் அமெரிக்காவிற்குள் அனுமதியின்றி புகும் தென்னமெரிக்க மக்களைக் குறித்து கடும் இனவெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். சமீபத்தில் கமலா ஹாரிஸுடன் நடந்த பொது விவாதத்தில், அப்படி அகதிகளாக குடியேறுபவர்கள் அமெரிக்கக் குடும்பங்களின் செல்லப் பிராணிகளான நாய்களையும், பூனைகளையும் பிடித்துத் தின்றுவிடுகிறார்கள் என்ற விஷம் கக்கும் அருவெறுப்பான வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான இனவெறுப்பு அரசியல் நிலவுகிறது. குறிப்பிட்ட அடையாளங்களைக் கொண்டவர்கள், பிற அடையாளம் கொண்டவர்களை வெறுப்பது அரசியலின் அங்கமாக இருந்து வருகிறது. பொருளாதார ஆய்வாளர் தாமஸ் பிக்கெட்டி தரும் தரவுகளின்படி அநேகமாக எல்லா நாடுகளிலும் கணிசமான பொருளாதார ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. குறைந்த எண்ணிக்கையில் உள்ள மக்களிடம் நாட்டின் பெருமளவு சொத்துகள் குவிந்திருக்கின்றன, பெருமளவு வருமானமும் அவர்களால் ஈட்டப்படுகிறது. பெரும்பான்மையோர் குறைவான செல்வத்தையும், வருமானத்தையும் பகிர்ந்து கொள்கிறார். பிரமிடு போன்ற ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பே நிலவுகிறது. இதனால் ஏற்படும் அதிருப்தியானது இனவெறுப்பாக கட்டமைக்கப்படுகிறது.
உலகளாவிய அரசியலின் இந்தச் சூழ்நிலையைப் பார்க்கும்போதுதான் வெறுப்பரசியலை அறவே தவிர்த்த அண்ணாவின் அரசியலின் மேன்மை நமக்கு முக்கிய பாடமாகிறது. அண்ணா எப்படி திராவிட-தமிழர் என்ற அரசியல் தொகுதியைக் கட்டமைத்த அதே நேரத்தில், வெறுப்பரசியலை தவிர்த்தார் என்பதை புரிந்துகொள்வது அவசியமாகும். காந்தி, பெரியார் ஆகியோரின் அரசியலின் சில முக்கிய தத்துவ அடிப்படைகளின் தொடர்ச்சியாக அவர் இருந்தாலும், சாமானியர்களின் கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தை அமைப்பாக்கம் செய்ததில் அவர் தனித்துவமிக்க பங்காற்றியதால் அவரது பங்களிப்பை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
காந்தி, பெரியார், அண்ணா
காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வரும்போது, இந்திய காங்கிரஸில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவுகள் இருந்தன. மிதவாதிகள் ஆங்கிலேய ஆட்சியை விமர்சிக்கும் அதே நேரத்தில், அவர்களுடன் ஆட்சி அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்வதில் முனைப்புள்ளவர்களாக இருந்தார்கள். தீவிரவாதிகள், கிளர்ச்சிகள் மூலம், தேவைப்பட்டால் வன்முறை செயல்களின் மூலம், ஆங்கிலேயர்களை முற்றிலும் அகற்றிவிட்டு இந்தியர்கள் முழு இறையாண்மை பெற்ற தேசிய அரசினை உருவாக்க வேண்டும் என்பதில் தீவிர நோக்கு கொண்டிருந்தார்கள்.
காந்தி ஒரு புதிய அணுகுமுறையை உருவாக்கினார். அது என்னவென்றால் ஆட்சி அதிகாரம் யாரிடம் என்பதைவிட, இந்தியர்கள் அவர்கள் வாழ்க்கையை அவர்கள் விருப்பின்படி வாழ சுதந்திரம் வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இதில் வெகுஜன ஈடுபாட்டை உருவாக்குவதன் மூலம் புதிய விழிப்புணர்வை, தேசிய தன்னுணர்வை உருவாக்க விரும்பினார். வெகுஜன பங்கேற்புக்கு காந்தி அளித்த முக்கியத்துவத்தினால் கவரப்பட்ட பெரியார், காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காந்தி, பெரியார் அரசியலில் மக்களிடையே பிரச்சாரம் செய்து மனமாற்றத்தை, தன்னுணர்வை ஏற்படுத்துவது, வன்முறையற்ற வழியில் சமூக மாற்றத்தை நிகழ்த்துவது ஆகியவையே முக்கிய வழிமுறைகளாக இருந்தன.
காந்தி இத்தகைய மாற்றத்தை மரபுசார்ந்த வழிகளை அனுசரித்தே நிகழ்த்தலாம் என்று நினைத்தார். உதாரணமாக எல்லா மதங்களிலும் கடவுளிடம் பக்தி செலுத்துவதே மையமாக இருப்பதால், அதன் மூலமே சமூக இணக்கத்தை, நல்லறங்களை அனைவரும் மேற்கொள்ள இயலும் என நினைத்தார். இதனால் வைதீக மதத்தை நேரடியாக விமர்சிக்காமல், மென்போக்கு சீர்திருத்தங்களை மேற்கொள்ளவே விரும்பினார்.
பெரியார் பிராமணர்களிடம் தங்கள் சமூக மேலாதிக்கத்தினை இழக்க விரும்பாத போக்கு இருப்பதைக் கண்டார். மிதவாதிகள், தீவிரவாதிகள் ஆகிய இரு தரப்பாருமே முன்னேறிய வகுப்பினர்களின் ஆட்சி அதிகார விழைவினை மையப்படுத்தியே இயங்குவதைக் கண்டார். இது இறுக்கமான ஜாதீய சமூகத்தின் படிநிலை அமைப்பை தகர்ப்பதற்கு போதுமானதல்ல என்பதைத் தெளிவாக உணர்ந்தார். அதனால் சமஸ்கிருத மொழியில் உருவாக்கப்பட்ட பார்ப்பனீய வர்ண தர்ம சாத்திரங்களை கடுமையாக விமர்சித்து நிராகரிக்காமல், ஜாதீய அமைப்பினை தகர்க்க முடியாது என்ற முடிவுக்கு வந்தார்.
அதுமட்டுமன்றி, பெரியார் பார்ப்பனரல்லாதோரின் அரசியல் அதிகாரத்தை நோக்கிய நகர்வு மட்டுமே சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை நீக்க போதுமானதல்ல என்பதை உணர்ந்தார். நீதிக்கட்சியின் முற்போக்கு நோக்குகள் அவருக்கு இணக்கமாக இருந்தாலும், அரசியல் அதிகாரத்தை மையப்படுத்திய அரசியல் அவருக்கு போதுமானதாகத் தோன்றவில்லை. பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் என்ற பிரிவினையை மட்டுமே அரசியலாக்காமல், சுயமரியாதை என்ற புரட்சிகர தத்துவத்தை தனது அரசியல் அடிப்படையாக மாற்றிக்கொண்டார்.
பெரியார் சமூகத்தில் நிலைபெற்றுவிட்டு ஆதிக்க சக்திகளை, குறிப்பாக பார்ப்பனீய வர்ண தர்ம சிந்தனையை கடுமையாக விமர்சித்ததால், கண்டித்ததால் அவர் எதிர்மறை அரசியல் செய்ததாக பலர் நினைக்கிறார்கள். ஆனால் அவர் எழுத்தையும், பேச்சையும், செயல்பாடுகளையும் கவனமாக ஆராய்ந்தால் அவர் சுயமரியாதை என்ற நேர்மறையான தத்துவத்தையே தனது அடிப்படையாகக் கொண்டு இயங்கினார் என்பது சுலபத்தில் புலப்படும். ஒட்டுமொத்த மானுட விடுதலைக்கான கருவியாகவே அவர் சுயமரியாதை என்ற கருத்தாக்கத்தைக் கருதினார் என்றால் மிகையாகாது.
தன்னுடைய கருத்தியல் பிரச்சாரத்தை சமரசமின்றி மக்களிடையே கொண்டு செல்ல விரும்பிய பெரியார், ஆட்சி அதிகாரத்தை நோக்கி அரசியல் செய்வதை அறவே வெறுக்கத் தொடங்கினார் எனலாம். காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய பலவீனமாக அவர் இந்த ஆட்சி அதிகாரத்தை நோக்கிய விழைவை கருதினார். அதன் தொடர்ச்சியாகவே அவர் ஒருகாலும் ஆட்சியில் பங்கெடுக்காமலும், தேர்தல் அரசியலில் பங்கெடுக்காமலும் இயங்கத் தீர்மானித்தார். காந்தியும் ஆட்சியில் நேரடியாக பங்கெடுக்காமல் இருப்பதன் மூலமே தன் கருத்துகளை சமரசமின்றி முன்வைக்கும் ஆற்றலை தக்கவைத்துக் கொண்டார் என்பது கருதத்தக்கது.
ஆட்சி அதிகார பங்கெடுப்பு என்ற புள்ளியில்தான் அண்ணாவின் அரசியல் காந்தி, பெரியார் ஆகியோரிடமிருந்து வேறுபடுகிறது என்பது மட்டுமில்லாமல், மக்களாட்சி அரசியலில் அவரது தனித்துவமிக்க பங்களிப்பை தெளிவுபடுத்துகிறது. ஏனெனில் தேர்தல் களத்தில் மக்களின் ஆதரவைப் பெறுவது என்று வரும்போது அனைத்து மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்கும்படியான அரசியலை மேற்கொள்ள வேண்டும். அப்போது தீவிர நிலைபாடுகளை மென்போக்காக தகவமைக்க வேண்டும். அதே சமயம் கொள்கைகள் நீர்த்துப் போகக் கூடாது. இது எளிதான காரியமல்ல. அண்ணா அதை எப்படி சாதித்தார் என்பதை புரிந்துகொள்வது தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றையே புரிந்துகொள்வது எனலாம்.
வெகுஜன அரசியலின் தத்துவம்
ஆங்கிலத்தில் வெகுஜன அரசியலை பாபுலிசம் என்று குறிப்பிடுகிறார்கள். இது பெரும்பாலும் கல்விப்புலத்திலும் எதிர்மறையாகவே குறிப்பிடப்படுகிறது. ஏனெனில் வெகுஜன அரசியல் என்பது மக்களிடையே நிலவும் முரண்களை மறுப்பதாகவும், கவர்ச்சிமிக்க தலைமை, உணர்ச்சிகரமான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் மக்களை சிந்தனையற்றவர்களாக ஒருங்கிணைப்பதாகவும் கருதப்படுவதுதான். இத்தாலியில் முசோலினியின் பாசிசம், ஜெர்மனியில் ஹிட்லரின் நாசிசம் ஆகியவை இதன் உச்சமாக கருதப்படுகின்றன.
சமீப காலத்தில் எர்னஸ்டோ லக்லாவ், சந்தால் மூஃப் உள்ளிட்ட கோட்பாட்டாளர்கள் ஆரோக்கியமான, இடதுசாரி வெகுஜன அரசியல் சாத்தியம் என்று எழுதியுள்ளார்கள். ஆனால் அவர்கள் அதனை கோட்பாடாக எழுதுவதற்கு ஐம்பதாண்டுகளுக்கு முன்பே அண்ணா நிகழ்த்திக் காட்டிவிட்டார் எனலாம். அதனால்தான் நாங்கள் மூவர் சேர்ந்து எழுதிய துவக்க கால தி.மு.க அரசியல் அணிதிரட்டல் குறித்த நூலான “Rule of the Commoner: DMK and Formations of the Political in Tamil Nadu, 1949-1967” என்ற நூலை விமர்சித்த ஒருவர், அது எப்படி அண்ணா கோட்பாட்டாளர்கள் எழுதுவதற்கு முன்பே அதனை அறிந்து செயல்படுத்தினார் என்று கேட்டிருந்தார். செயலிலிருந்துதான் கோட்பாடு பிறக்கும் என்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.
சரி, அப்படியென்ன அந்த புதுமையான கோட்பாடு என்பதை கவனிப்போம். ஆரோக்கியமான வெகுஜன அரசியல் இரண்டு அம்சங்களை இணைத்துக்கொண்டு இயங்க வேண்டும். ஒன்று, சமூகத்தின் உள்ளேயுள்ள முரண்களை அடையாளப்படுத்த எதிரெதிரான பிரிவுகளை இனம் காண வேண்டும்; ஆனால், அந்த முரண்பட்ட இரு பிரிவுகளையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த சமூகத்திற்கான குறியீட்டையும் உருவாக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆரிய பண்பாடு, திராவிட பண்பாடு ஆகியவற்றிற்கான முரணை, அல்லது பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதோர் முரணை திராவிடம் என்ற வார்த்தையில் குறித்தது. அந்த முரணுடன் மேட்டுக்குடியினர் – சாமானியர், பணக்காரர் – ஏழை ஆகிய முரண்களையும் இணைக்கத்தக்கதாக வைத்துக் கொண்டது. அதே சமயம் ஒட்டுமொத்த சமூகத்திற்கான குறியீடாக தமிழைக் கைகொண்டது. இப்படிச் செய்யும்போது தமிழ் அடையாளத்தை வேற்றுமொழி அடையாளங்களுக்கு எதிராக நிறுத்த வேண்டிய அவசியமில்லை.
வேறு வார்த்தைகளில் சொன்னால் சமூக முழுமைக்கான அரசியல், அதனுள் உள்ள முரண்களையும் பேசும்போது வெகுஜன அரசியல் முரணரசியலாக பரிணமிக்கிறது. இதற்கு மாறாக வெறுப்பரசியல் என்பது ஓர் அடையாளத்தை முழுமையானதாக்கி, அதன் முரணை வெளியே வைத்து, மற்றொரு அடையாளத்திற்கு எதிராக நிறுத்துகிறது. வன்முறையைத் தூண்டுகிறது.
அண்ணா, திராவிட – தமிழ் அடையாளத்தை சுயாட்சிக்கான, கூட்டாட்சியில் பங்கெடுக்கும் சுயாட்சிக்கான அரசியல் அடையாளமாகத்தான் வடிவமைத்தாரே தவிர வேறு எந்த அடையாளத்திற்கும் எதிரானதாக வடிவமைக்கவில்லை. இதனை மிகத் தெளிவாக பல எளிய உதாரணங்கள் மூலம் புரிந்துகொள்ளலாம்.
திராவிடம் என்பது தென்னிந்தியா என்று கொள்வதால், நாராயண் சிங் என்ற இயற்பெயர் கொண்ட ராஜபுத்திர வம்சாவழியினரான உடுமலை பா.நாராயணனை அண்ணா அரவணைக்கத் தயங்கவில்லை. அவர் கோவை மாவட்டச் செயலாளராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கியவர். இன்றைய நிலையிலும் ஏராளமான தொழிலாளர்கள் வட மாநிலங்களிலிருந்து புலம்பெயர்ந்து வந்து தமிழ்நாட்டில் பணிபுரிவதை தமிழ்நாட்டு மக்கள் இணக்கமாக ஏற்றுக்கொள்வதைக் காண முடிகிறது. தி.மு.க இனவெறுப்பை வளர்த்திருந்தால் இது சாத்தியமாகாது.
இந்தி திணிப்பை எதிர்த்து தி.க மற்றும் தி.மு.க ஆகிய இரண்டு இயக்கங்களுமே தொடர்ந்து போராடியது. அது பெருவெடிப்பாக 1965-ம் ஆண்டு நிகழ்ந்தது மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் தன்னெழுச்சியான போராட்டத்தினால் என்றாலும் அதன் பின்னால் முப்பதாண்டுக் கால போராட்ட வரலாறு இருக்கிறது. நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் அவ்வளவு உக்கிரமான போராட்டம் இந்தி மொழி வெறுப்பாக மாறவில்லை என்பதைத்தான்.
தி.மு.க அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியில் அமர்ந்தபோது இந்தி மொழி திரைப்படங்கள் தமிழ் மக்களிடையே பெரும் வரவேற்பினை சந்தித்தன. இந்தி மொழி பாடல்கள் அனைவராலும் விரும்பப்பட்டன. தமிழ்நாட்டின் பல பகுதிகளில் ஆராதனா (1969), பாபி (1973), யாதோன் கி பாரத் (1973), ஷோலே (1975) உள்ளிட்ட பல படங்கள் தமிழ் படங்களுக்கு இணையான வெற்றிப் படங்களாக விளங்கின.
இதற்கெல்லாம் முக்கிய காரணம் அண்ணா தலைமையில் கலைஞரின் பெரும் பங்களிப்புடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சியமைப்பு வலுப்பெற்றபோது, அது திராவிட-தமிழர் என்ற அரசியல் தொகுதியைக் கட்டமைத்தபோது, பல்வேறு உள்முரண்களையும் பேசியே அந்த சமூக முழுமையை உருவகித்தது. ஓர் அடையாளத்தை உருவாக்க வேறு எந்த அடையாளத்தின் மீதும் வெறுப்பரசியலை முன்னெடுக்கவில்லை.
காந்தியும், பெரியாரும் வெவ்வேறு விதங்களில் வலியுறுத்திய சுயமரியாதையை அண்ணா தன் வெகுஜன அரசியலின் அடிநாதமாகக் கொண்டதால் அவரால் வெறுப்பரசியல் சுவடின்றி ஒரு மக்கள் தொகுதியின் முழுமையை, திராவிட தமிழர் என்ற அரசியல் தொகுதியை, அதன் முரண் அரசியலை வெற்றிகரமாக வடிவமைக்க முடிந்தது எனலாம். அந்த வகையில் அரசியல் தத்துவத்தில் புதுப்பாதை சமைத்தவர் அண்ணா. அவரைப் புரிந்துகொள்ளத்தான் நாம் சமகால கோட்பாட்டாளர்களை நாடுகிறோமே தவிர, அவர் தனக்கான கோட்பாடுகளை தாமே வடிவமைத்துக் கொண்டவர் என்பதில் ஐயமில்லை.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!
உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தலித் அரசியலும், பொது சமூகமும்
வெற்றிக் கழகமா? வெற்றுக் கழகமா? அரசியல் கட்சி என்றால்தான் என்ன?
சமத்துவம், சமூக நீதி, கூட்டாட்சி: அதிகாரத்தைப் பரவலாக்குவது எப்படி?