வெற்றிக் கழகமா? வெற்றுக் கழகமா? அரசியல் கட்சி என்றால்தான் என்ன?
ராஜன் குறை
நடிகர் விஜய் தன் கட்சியின் பெயரை 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பே அறிவித்துவிட்டார். கட்சி துவங்கப் போகிறேன் என்றும் உறுதிபடக் கூறிவிட்டார். ஏற்கனவே பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கமாக அவரது ரசிகர் மன்றங்கள் இணைக்கப்பட்டன, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் கட்சி துவங்க அவசரப்பட்டபோது விஜய் பகிரங்கமாக அதனை எதிர்த்துத் தடுத்து நிறுத்தியது ஆகிய கட்டங்களுக்குப் பிறகு, இப்போது கட்சி பணிகளை மேற்கொள்ள புஸ்ஸி ஆனந்த் என்பவர், புதுச்சேரியில் புஸ்ஸி என்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தல மட்டத்தில் அமைப்பினை கட்டி வருவதாகக் கூறப்படுகிறது. கட்சிப் பொறுப்பாளர்களாக சிலர் அறியப்படுகிறார்கள். தொலைக்காட்சியில் பேச சில செய்தித் தொடர்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில்தான் சென்ற வாரம் அவர் கட்சி கொடியை அறிமுகம் செய்துள்ளார். கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி உள்ளார். அவர் ஓர் உறுதிமொழியை வாசிக்க அங்கு கூடியிருந்த கட்சி அணியினர் அந்த உறுதிமொழியை எடுத்துக்கொண்டார்கள். சமத்துவத்தை வலியுறுத்துவதும், யாரையும் எந்த அடையாள அடிப்படையிலும் விலக்காமல் அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க விழைவதும் அந்த உறுதிமொழியில் முக்கியமாக உள்ளது. அதேபோல மாநில உரிமைகள், இந்திய தேசிய ஒற்றுமை ஆகிய இரண்டுமே கூறப்படுகிறது.
இப்படியாக பொதுவான நல்ல நோக்கங்கள் கொண்ட உறுதிமொழியைக் கட்சியினருக்கு அறிமுகம் செய்துள்ளார். அது ஏதோ பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் உறுதிமொழி எடுப்பது போல உள்ளதே தவிர, கட்சியின் கொள்கைப் பிரகடனமாக இல்லை.
பொதுவாக அரசியல் தலைவர்களோ, கட்சியினரோ இப்படி ஒரு பிரபலமான நடிகர் கட்சி துவங்கினால் அதை நாகரிகம் கருதி விமர்சிக்க மாட்டார்கள். ஏனெனில் அரசியல் பணி செய்ய ஒருவர் முன்வருவதை அவர்கள் வரவேற்கக் கடமைப்பட்டுள்ளார்கள். அதிலும் விஜய் இன்னம் பத்திருபது ஆண்டுகள் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பிருந்தும் திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து விலகப்போவதாகக் கூறுவதும் அவர் அரசியல் பிரவேசத்தை சிலர் வரவேற்கக் காரணமாகிறது. மக்களாட்சியில் யாரும் கட்சி துவங்கலாம், விஜய் போன்ற பிரபல நடிகர் துவங்கினால் அவரது ரசிகர்களான இளைஞர்கள் அரசியல் அறிமுகம், அனுபவம் பெறுவார்கள் என்றெல்லாம் கூறப்படுகிறது.
ஊடகங்களைப் பொறுத்தவரை அவர் வரப்போகும் 2026 சட்டமன்றத் தேர்தலில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துவார், எந்தக் கட்சியின் ஓட்டுகளைப் பிரிப்பார், கூட்டணி அமைப்பாரா என்ற தேர்தல் சார்ந்த யூகங்கள், கணக்குகள்தான் முக்கியத்துவம் பெறும். தினசரி விவாதங்களை இந்த யூகங்களால், கணக்குகளால் நிரப்புவார்கள். இதையெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது.
இதற்கெல்லாம் அப்பால் ஒரு பண்பட்ட சமூகத்தில் விமர்சன சிந்தனை என்றும் ஒன்று இருக்க வேண்டும். அரசியலை தத்துவம், கோட்பாடு சார்ந்து அணுகுபவர்கள், எழுதுபவர்கள் என்றும் சிலர் இருக்க வேண்டும். அந்த வகையில்தான் விஜய்யின் அரசியல் நுழைவை, அது நிகழ்த்தப்படும் விதத்தை விமர்சித்து, கண்டித்து இந்தக் கட்டுரை எழுதப் படுகிறது.
விஜய் இதுவரை எந்த அரசியல் உணர்வையும் வெளிப்படுத்தவில்லை. ஒருமுறை 2011 தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற அணிலாக உதவியதாகக் கூறினார். ஆனால், எதனால் அப்படிச் செயல்பட்டார், எத்தகைய அரசியல் உணர்வு அவரை உந்தியது என்பதை விளக்கவில்லை. அவர் அரசியல் குறித்து என்ன சிந்திக்கிறார் என்பதைக் குறித்த யூகங்கள்தான் உள்ளனவே தவிர, யாரும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இப்படி தன்னுடைய அரசியல் பார்வைகளை ரகசியமாக வைத்துக்கொண்டு ஒருவர் கட்சி துவங்குவதும், கொடியை ஏற்றுவதும் அபத்தமாக இருக்கிறது. அவருடைய அரசியல் பார்வைகள் எதுவாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதைக்குறித்து முதலில் பேச வேண்டும் அல்லவா? அதைப் பேசுவதற்கே எதற்காக நாள், நட்சத்திரம் பார்க்கிறார்?
கட்சிக் கொடிக்குப் பின்னால் ஒரு கதை இருப்பதாகவும் அதை முதல் மாநில மாநாடு போடும்போது கூறுவதாகவும் அறிவித்துள்ளார். அதை “புயலுக்குப் பின்னே அமைதி” என்று கூறியது வேடிக்கையாக இருந்தது. “புயலுக்கு முன்னே அமைதி” என்பதுதான் சொல்வடை. இவர் கால ரீதியாகச் சொல்லப்பட்ட முன்னே என்பதை இட ரீதியாகப் புரிந்துகொண்டு, இவர் கட்சிக் கொடி ஒரு புயலைக் கிளப்புவதாகவும் அதற்குப் பின்னே ஒரு கதை இருப்பதாகவும் கூறுகிறார். அது எதுவாக இருந்தாலும் அதனையும் உடனே கூறுவதுதானே அரசியலுக்கு அழகு? அப்படிச் செய்யாவிட்டால் இனிமேல்தான் கட்சிக்கொடிக்கான விளக்கத்தை சிந்திக்கப் போகிறார்கள் என்றல்லவா கருத இடமளிக்கும்?
தன் கருத்துகளைப் பேச, தன் செயல்களுக்கான விளக்கத்தைக் கொடுக்க தயங்கும் ஒருவர் எப்படி அரசியல்வாதியாக முடியும்? அப்படிப் பேசுவதால் அவருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது? விஜய் படங்களில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் பாஜக மத அடையாளவாதத்தை, பாசிச அரசியலை, கெளரி லங்கேஷ் படுகொலையை துணிச்சலாக கண்டித்துப் பேசவில்லையா? சுயேச்சையாக பெங்களூருவில் தேர்தலில் போட்டியிடவில்லையா? அவர் இன்னமும் படங்களில் நடித்துக் கொண்டுதானே இருக்கிறார்? தன்னுடைய நிலைபாட்டை முன்வைத்து அதனுடன் இணங்குபவர்களை அணி திரட்டுவதுதானே அரசியல்? அப்படிப் பேசாவிட்டால் அவருடைய கதாநாயக பிம்பம் என்ற முதலீடு தவிர அவருக்கு வேறெதுவும் அரசியல் தெரியாது என்றுதானே பொருள்படும்?
இதைப் பற்றிப் பேசினால், கண்டித்தால் சிலர் பொறுமையாக இருக்க வேண்டும், அவர் மாநாடு போட்டு விளக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். வேடிக்கையாக இருக்கிறது. ஒருவருக்கு அரசியலில் தீவிர அக்கறையும், நிலைபாடுகளும் உருவானால்தானே அவர் அரசியல் கட்சி துவங்க வேண்டும்? அப்படி எதுவும் இல்லாவிட்டால் எதற்காக அரசியல் கட்சி துவங்க வேண்டும்? அரசியல் கட்சி துவங்க காரணமே வேண்டாமா? நாயக பிம்ப கவர்ச்சியை நம்பி துவங்குவது அரசியலை மலினப்படுத்துவது ஆகாதா? சரியான காரணமின்றி நற்பணி மன்றம் போல அரசியல் கட்சிகளை துவங்க முடியுமா?
அரசியல் கட்சிகள் எப்போது துவங்கப்படும்?
ஒரு மாநிலத்திலோ, தேசத்திலோ ஒரு புதிய அணி சேர்க்கைக்கான தேவை உணரப்படும்போதுதான் அரசியல் கட்சி துவங்கப்படும். இந்தியாவை எடுத்துக் கொண்டால், காலனீய ஆட்சியில் சுயாட்சி உரிமைகளைப் பெற இந்திய தேசிய காங்கிரஸ் துவங்கப் பெற்றது. பார்ப்பன சமூகத்தினரின் மேலாதிக்கத்தை, பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்தை எதிர்த்து பார்ப்பனரல்லாத சமூகத்தின் பிரதிநிதிகளால் நீதிக்கட்சி துவங்கப்பட்டது. சீக்கியர்களின் நலன்களைப் பாதுகாக்க அகாலி தளம் தொடங்கப்பட்டது. காஷ்மீர் மக்களின் தனியுரிமையைக் காக்க நேஷனல் கான்ஃபரன்ஸ் கட்சி துவங்கப்பட்டது. அஸ்ஸாம் மாநில மக்களின் உரிமைகளுக்காக அஸ்ஸாம் கன பரிஷத் துவங்கப்பட்டது. ஆந்திரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் ஓயாத கோஷ்டிப்பூசல் நிகழ்ந்தாலும், முதலமைச்சர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டாலும், அந்தக் கட்சிக்கு எந்த அரசியல் மாற்றும் இல்லாத நிலையில்தான் என்.டி.ராமராவ் தெலுங்கு தேசம் கட்சியைத் துவங்கினார்.
இவ்வகையான தேவையைத் தவிர ஒரு கட்சியில் இரு விதமான சித்தாந்தப் போக்குகள் தோன்றினாலோ, அல்லது ஒரு பிரிவினருக்கு தலைமையிடம் அதிருப்தி தோன்றினாலோ கட்சி பிளவுபட்டு புதிய கட்சி உருவாவது உண்டு. இந்தியாவின் முதல் அரசியல் கட்சியான காங்கிரஸ் அப்படி பல பிளவுகளை சந்தித்துள்ளது. சுயராஜ்யக் கட்சி, சோஷலிசக் கட்சி என்று அதிலிருந்து பல கட்சிகள் தோன்றியுள்ளன. சுதந்திரவாத சந்தை பொருளாதாரத்தை வலியுறுத்தி ராஜாஜி உள்ளிட்டவர்கள் தலைமையில் சுதந்திரா கட்சி தோன்றியது. அறுபதுகளின் மத்தியில் இடதுசாரி போக்கிற்கு தலைமை தாங்கிய இந்திரா காந்தியும், வலதுசாரி போக்கிற்கு தலைமை தாங்கிய மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட சிண்டிகேட்டும் காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிளவுபடக் காரணமாயினர். அதேபோல பொதுவுடமைக் கட்சியும் வலதுசாரி, இடதுசாரி என்று கொள்கை அடிப்படையில் பிரிந்தது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பார்ப்பனரல்லாதோர் நலன், மாநில சுயாட்சி ஆகிய இரண்டு கருத்தியல் அச்சுக்களை இணைத்து திராவிடர் கழகம் தோன்றியது. அது இந்தியா சுதந்திரமடையும் தருணத்தில் திராவிட நாடு என்ற தென்னிந்திய கூட்டாட்சி குடியரசை தனது லட்சியமாக முன்வைத்தது. அந்த லட்சியத்தை நோக்கி எப்படிப் பயணிப்பது என்பதில் ஏற்பட்ட வேறுபாட்டால் இந்திய குடியரசு உருவான சமயத்தில் அண்ணாவின் தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றியது. திராவிட நாடு என்ற கோரிக்கையின் தத்துவார்த்த உள்ளடக்கம் தமிழ்நாட்டு மாநில சுயாட்சிதான். அதனை அண்ணா பல சமயங்களில் தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்தி மொழி திணிப்பை, அது ஒன்றிய அரசின் ஒற்றை அலுவல் மொழியாக மாறுவதை எதிர்ப்பது என்பது முக்கியமான போர்முகமாக விளங்கியது. பதினெட்டே ஆண்டுகளில் அடித்தள மக்களை அணி திரட்டி சாமானியர்களின் ஆட்சியாக தி.மு.க ஆட்சி 1967-ம் ஆண்டு அமைந்தது. மெட்றாஸ் மாகாணம் என்ற பெயரை தமிழ்நாடு என்று மாற்றி, இரு மொழிக்கொள்கையை அறிவித்து தன் வரலாற்று முத்திரையைப் பதித்தார் அண்ணா. துரதிஷ்டவசமாக பதவிக்கு வந்த இரண்டாண்டுகளில் மறைந்தார்.
அதற்குப் பின் நடந்த 1971 தேர்தலில் தி.மு.க, கலைஞர் தலைமையில் ஐம்பது சதவிகித வாக்குகளுடன் பெருவெற்றி பெற்றது. இதையொட்டித்தான் எம்.ஜி.ஆர் தலைமையில் அண்ணா தி.மு.க என்ற தனிக்கட்சி தோன்றியது. திராவிடக் கொள்கைகளுக்குள் மிதவாதப் போக்கை கடைப்பிடிப்பவராக எம்.ஜி.ஆர் தன் கட்சியை வடிவமைத்துக் கொண்டார். எம்.ஜி.ஆர். இருபதாண்டு காலமாக தி.மு.க கட்சியின் அங்கமாக தன் திரை வாழ்க்கையையும், திரைப்படக் கதையாடல்களையும் அமைத்துக் கொண்டவர். கட்சியின் கருத்துகளைப் பேசினார். கொள்கைகளைப் பாடினார். அதனால் தி.மு.க-வின் வெகுஜன முகமாகவே அவர் விளங்கினார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் வெவ்வேறு சமூக பிரிவினரின் நலன்களை முன்நிறுத்தி கட்சிகள் தோன்றியுள்ளன. நடிகர் விஜய்காந்த் 2006-ம் ஆண்டு, தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு கட்சி வேண்டும் என்று கூறி தே.மு.தி.க தொடங்கினார். அப்படி ஒரு தேவையை உணர்ந்த மக்களில் எட்டு சதவிகிதம் பேர் அவருக்கு வாக்களித்தனர். ஆனால், அவரால் தொடர்ந்து தன் கட்சியின் தனித்துவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. கூட்டணி அரசியலில் ஈடுபட்டு வலுவிழந்தார். இன்று கூட்டணி பேரங்களில் ஈடுபடும் சிறிய கட்சியாக அவர் கட்சி விளங்குகிறது.
ரஜினிகாந்த் பலமுறை கட்சி துவங்குவதாகச் சொன்னாலும் இறுதியில் துவங்காமல் பின்வாங்கி விட்டார். காரணம், அவருக்கும் கொள்கை தெளிவோ, அரசியல் நிலைபாடுகளில் ஆர்வமோ இருக்கவில்லை. கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற வலதுசாரி, இடதுசாரி ஆகியவற்றிற்கு நடுவில் பாதை வகுக்கும் கட்சி என்று துவங்கினார். ஆனால், அவரால் கட்சியை சரிவரக் கட்டமைத்து தேர்தல் களத்தில் வெற்றி காண முடியவில்லை. இப்போது இந்தியா கூட்டணியின் ஆதரவாளராக உள்ளார். சரத்குமார் அவர் சார்ந்த சமூகப்பிரிவின் நலன்களுக்காக கட்சி துவங்கினார். இப்போது பாஜக-வில் அதனை இணைத்துவிட்டார். இலங்கையில் நிகழ்ந்த தமிழர் படுகொலையின் தாக்கத்தில் திராவிட அடையாளத்திற்கு மாற்றாக தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சியை சீமான் துவங்கினார். தொடர்ந்து தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டு வருகிறார். கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் எட்டு சதவிகிதம் ஓட்டுகளைப்பெற்றார், எந்தத் தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை.
விஜய் கட்சி துவங்கும் வரலாற்றுத் தருணம்
இந்திய ஒன்றிய அரசில் ஆட்சிப் பொறுப்பினை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 2014-ம் ஆண்டு கைப்பற்றியது. அதிலிருந்து அந்தக் கட்சியின் லட்சியமான ஒற்றை இந்து ராஷ்டிர அரசாக இந்திய அரசை மாற்றுவதற்கான பல்வேறு அசைவுகளை அது மேற்கொண்டு வருகிறது. அதற்கு எதிர்முனையில் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியும், பல்வேறு மாநில கட்சிளும் இந்தியா கூட்டணியாக ஒருங்கிணைந்துள்ளன. அவை சமூக நீதியையும், மாநில சுயாட்சியையும் வலியுறுத்துகின்றன. குறிப்பாக ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பிற்கான அரசியல் முழக்கத்தை முன்னெடுக்கின்றன.
ஜெயலலிதா 2016 டிசம்பரிலும், கலைஞர் 2018 ஆகஸ்டிலும் மறைந்தபோது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு சகாப்தம் நிறைவுக்கு வந்தது. ஜெயலலிதாவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி பாஜக ஆதரவுடன் ஆட்சி நடத்தினார். பாஜக-வுடன் கூட்டணி அமைத்து இரண்டு தேர்தல்களைச் சந்தித்து தோல்வியுற்றார். எதிர்முனையில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், இந்தியா கூட்டணியாக 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பெருவெற்றி பெற்றுள்ளது. ஆனால் 2024-ல் பாஜக, அ.இ.அ.தி.மு.க-விலிருந்து பிரிந்து தனித்து போட்டியிட்டது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.இ.அ.தி.மு.க-வை பிளந்து, அதனை பலவீனப்படுத்தி தி.மு.க-விற்கு மாற்றாக தமிழ்நாட்டு அரசியலில் நிலைபெற பாஜக முயற்சி செய்கிறது.
சுருக்கமாகச் சொன்னால் கலைஞரின் தொடர்ச்சியாக ஸ்டாலின் தி.மு.க-வை வலுப்படுத்திவிட்டார். ஆனால், ஜெயலலிதாவின் தொடர்ச்சியாக எடப்பாடி பழனிசாமியால் அ.இ.அ.தி.மு.க-வை வலுப்படுத்த முடியவில்லை. பாஜக-வின் அழுத்தங்களை எதிர்கொள்ளத் திணறுகிறார். இந்த நிலையில் பாஜக-வின் முயற்சிகளை முறியடித்து தி.மு.க, அ.இ.அ.தி.மு.க-விற்கு மாற்றாக ஒரு மாநிலக் கட்சியை விஜய் உருவாக்க நினைத்தால் அது தவறல்ல.
ஆனால், அதை அவர் பகிரங்கமாகப் பேச வேண்டும். பாஜக-வை எதிர்த்து மாநில நலன்களைக் காப்பேன் என அறிவிக்க வேண்டும். எதனால் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளிலும் இணையாமல் தனி கட்சி துவங்குகிறேன் என விளக்க வேண்டும். அதையெல்லாம் செய்ய அரசியல் தெளிவும், நெஞ்சுரமும், செயலாற்றலும், பேச்சாற்றலும் இருக்க வேண்டும்.
ஆனால், கடந்த இருபதாண்டு காலமாக இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக்கான போராட்டம், இனப்படுகொலை விசாரணை கோரிய போராட்டம், ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் ஆலைக்கெதிரான போராட்டம், குடியுரிமை சட்ட சீர்திருத்தத்திற்கு எதிரான போராட்டம், நீட் தேர்வுக்கெதிரான போராட்டம் என எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல், எதற்கும் குரல் கொடுக்காமல் சினிமாவில் நடித்துக்கொண்டிருந்துவிட்டு இப்போது திடீரென தமிழக வெற்றிக் கழகம் துவங்குகிறேன், கொடியேற்றுகிறேன் என்றால் அது வெற்றிக் கழகமா, வெற்றுக் கழகமா என்ற ஐயம் மக்களுக்குத் தோன்றத்தானே செய்யும்.
அவர் ஒரு விரல் புரட்சியே என்று பாடிய சினிமாவில் சொன்ன கருத்து மக்களுக்கு அரசு வழங்கிய மிக்ஸி, கிரைண்டர் போன்றவற்றை தீயிட்டுக் கொளுத்த வேண்டும் என்பதுதான். இப்படி மக்கள்நலத் திட்டங்களை இகழும் மேட்டுக்குடி அரசியல்தான் அவருடையதா என்பதையாவது அவர் விளக்க வேண்டும் அல்லது தன்னுடைய படம் எந்த அரசியலை பேசுகிறது என்று கவலைப்படாமல் வசூலில் மட்டும் கவனமாக இருந்தாரா என்றும் தெரியவில்லை.
திரைப்படம் வெளியாகும் வரை கதை வெளியில் தெரியக்கூடாது என்பதுபோல, மாநில மாநாடு போடும்வரை தன் அரசியல் என்னவென்று வெளியில் தெரியக்கூடாது என்று ஒரு அரசியல்வாதி நினைப்பது அபத்தமானது, நகைப்புக்குரியது. அரசியல் பேசாமலேயே தன் நாயக பிம்பத்தைக் காட்டி வாக்குகளைப் பெறலாம் என்று நினைத்தால் அது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்தியாவிற்கே வழிகாட்டும், உலக அளவில் தனித்துவமிக்க மக்களாட்சி அரசியல் முரண் களத்தை உருவாக்கிய மாநிலம் தமிழ்நாடு. அந்த வரலாற்றை சுய பிம்ப மயக்கத்தில் விஜய் ஏளனம் செய்யக்கூடாது என்று கூற வரலாறு தெரிந்த விமர்சகர்கள் கடமைப்பட்டுள்ளார்கள்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சமத்துவம், சமூக நீதி, கூட்டாட்சி: அதிகாரத்தைப் பரவலாக்குவது எப்படி?
சமூக நீதிக்கு எதிரான “கிரீமி லேயர் விலக்கம்” என்ற கருத்தாக்கம்!
அந்த ஊருக்கு ஏன் போகல? – அப்டேட் குமாரு