Is birth a punishment?

பிறப்பே தண்டனையா? திராவிட இயக்கத்தின் அரசியல் தத்துவப் போராட்டம்!

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

ஆங்கில திரைப்படம் இன்செப்ஷனில் ஒரு புகழ்பெற்ற வசனம் உண்டு. “ஒரு கருத்து என்பது அழிக்கக் கடினமான ஒட்டுண்ணி” (An idea is a resilient parasite) என்பதுதான் அந்த வசனம். ஒரு கருத்து உருவாகிவிட்டால் அது எப்படியோ ஒரு வைரஸ் போல பரவி, அழிக்கக் கடினமானதாக மக்கள் மனங்களில் குடியேறுகிறது. அதுபோல ஆரிய, பார்ப்பனீய சிந்தனையில் உதித்த ஒரு கருத்துதான் பிறப்பு என்பதே தண்டனை என்பதாகும்.

அதாவது ஒருவர் என்னவாக பிறக்கிறார் என்பது அவர் முன்பிறவியில் செய்த செயல்களுக்கான, பாவங்களுக்கான தண்டனை என்பதுதான் அந்தக் கருத்தின் முழு வடிவம். இந்தக் கருத்து இந்திய நிலப்பகுதி முழுவதும் பரவி மக்கள் மனங்களில் ஒட்டிக்கொண்டுவிட்ட ஒரு கருத்து எனலாம். வாழ்வில் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களுக்கு முற்பிறவியில் செய்த கர்ம வினை காரணம் என்பது ஒரு பகுதிதான். முக்கியமான கருத்து பிறப்பே ஒரு தண்டனையாகும் என்பதுதான்.

இந்தக் கருத்தை ஏன் ஆரிய, பார்ப்பனீய சிந்தனை என்று கூற வேண்டும் என்ற கேள்வி எழலாம். அதற்குக் காரணம் சமஸ்கிருத பிரதிகளில் இந்த சிந்தனை இடம்பெற்றதுதான். கர்ம வினை, மறுபிறவி ஆகியவை குறித்த கருத்துகள் வேத காலத்திலேயே தோன்றியிருக்கலாம்; புத்த, சமண பிரதிகளிலும் இவை ஊடுருவியுள்ளதாகவே தெரிகிறது. இது பொதுவாக மனிதர்கள் மனதில் அச்சத்தை விதைத்து அவர்கள் வாழ்வினை ஒழுங்குபடுத்தும் நோக்கில் உருவாகியிருக்கலாம் என்பது தெளிவு. ஆனால், இந்தக் கருத்துகளின், ஒரு மனிதனின் பிறப்பே தண்டனை என்ற கருத்தின் அரசியல் தன்மைதான் பிரச்சினைக்குரியது.

குறிப்பாக நால்வர்ண அமைப்பினை நிறுவும்போது அதனுடன் இந்தக் கருத்தும் இணைத்து, பேசப்பட்டதுதான் இதற்கான அரசியல் முக்கியத்துவத்தை வழங்குகிறது. ஒருவரது பிறப்பே அவர் எந்த வர்ணம் என்பதை வரையறுக்கிறது. இவ்வாறு வர்ண அமைப்பினை வரையறை செய்த பிரதிகளில் முக்கியமானது மனு ஸ்மிருதி என்று அழைக்கப்படும் மனு தர்ம சாத்திரம் என்ற நூல் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்வர்.

இந்த நூல் எப்போது எழுதப்பட்டது, அதன் சமூக அரசியல் வரலாற்றுச் சூழல் என்ன என்பதைக் காண வேண்டும். பாட்ரிக் ஆலிவெல் சமஸ்கிருதம், இந்திய மதங்கள் ஆகியவற்றை போதிக்கும் மூத்த பேராசிரியர், ஆய்வாளர். ஆஸ்டினிலுள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் பணி புரிகிறார். இவர் மனு ஸ்மிருதியின் பல்வேறு பிரதிகளைச் சேகரித்து ஒப்பிட்டு ஆராய்ந்து ஒரு செம்பதிப்பை (Critical Edition) 2005-ம் ஆண்டு வெளியிட்டுள்ளார். அதன் முகவுரையில் மனு ஸ்மிருதி எந்த காலத்தில் எழுதப்பட்டது என்பது குறித்த ஆய்வாளர்களின் கருத்துகளைத் தொகுத்துள்ளார்.

துவக்க காலத்தில் பிராமணர்களின் கருத்தியலை ஏற்று நடந்த அரசர்கள், புத்த மதத்தின் எழுச்சியின்போது அவர்கள் பிடியிலிருந்து விலகினர். குறிப்பாக மெளரியப் பேரரசர் அசோகர் புத்த மத பிரசாரத்தினை தீவிரமாக ஆதரித்தவர் என்று அறியப்படுகிறது. மெளரியர் காலத்திற்குப் பின் சுங்க வம்ச ஆட்சியில் வலுவடைந்த பிராமணீய சிந்தனை பொது ஆண்டு முதல், இரண்டாம் நூற்றாண்டுகளில் உருவாக்கிய நூல்தான் மனுதர்ம சாத்திரம் என்ற கருத்தை ஆலிவல் பதிவு செய்கிறார். இதில் சூத்திரர்களுக்கு எதிராகக் காட்டப்படும் கடுமை சிரமண மதத்தைச் சேர்ந்த மன்னர்களையும், குடிமக்களையும் மனதில் கொண்டு எழுதப்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார். இதே போன்ற கருத்தை அம்பேத்கரும் தன்னுடைய “சூத்திரர்கள் யார்?” என்ற ஆய்வு நூலில் கூறியிருப்பார்.

 

பாட்ரிக் ஆலிவெல் ஆராய்ந்து தொகுத்துள்ள மனுதர்ம சாத்திர நூலின் கடைசி பகுதியில் எப்படி பாவங்களை செய்பவர்கள் மறு பிறப்பின் மூலம் தண்டிக்கப்படுவார்கள் என்பதை பட்டியலிட்டு கூறுகிறார். இந்த இந்த பாவங்களை செய்பவர்கள் குறிப்பிட்ட விலங்குகளாகவும், சண்டாளர்களாகவும், பேய்களாகவும் பிறப்பார்கள் என்று பட்டியலிடுகிறார். சற்றே வேடிக்கையான பட்டியல் என்றாலும் பிறப்பே தண்டனை என்ற சிந்தனையை வலியுறுத்துவதாக இது உள்ளது.

உதாரணமாக, இந்த மறுபிறவி தண்டனை பட்டியலில் முதலில் வருவது பிராமணனை ஒருவர் கொன்றால் அவர் நாயாகவோ, பன்றியாகவோ, கழுதையாகவோ, ஒட்டகமாகவோ, ஆடாகவோ, மானாகவோ, பறவையாகவோ, சண்டாளனாகவோ, புல்காசனாகவோ பிறப்பார் என்பதுதான். இதில் சண்டாளர்கள், புல்காசர்கள் என்ற மனிதக் குழுக்களை மிருகங்களுக்கு இணையாகக் கூறியிருப்பது கருதத்தக்கது. ஏனெனில், இந்தக் குழுக்களை சமூகத்திலிருந்து முற்றிலும் விலக்கி வைக்க வேண்டும் என்றும் மனு தர்மம் சொல்வதுதான்.

தீண்டாமை உள்ளிட்ட சமூக விலக்கங்களுக்கு ஆட்பட்டவர்கள் முற்பிறவியில் செய்த பாவத்தால் அப்படிப் பிறந்தவர்கள் என்பது இதிலிருந்து பெறப்பட்டது. அந்த கர்மவினை மறுபிறவிக் கோட்பாடு சமூக அநீதிக்கு, விலக்குகளுக்கு, உழைப்பு சுரண்டலுக்கு, வன் கொடுமைகளுக்கு இயற்கை நியாயத்தை வழங்கியது. சண்டாளனாகப் பிறப்பதே இறைவன் கொடுத்த தண்டனை என்றால் அந்தத் தண்டனையை நிறைவேற்ற அவர்களை சமூகம் விலக்கி வைக்கத்தானே வேண்டும்?

இந்த சிந்தனை பிற்காலங்களில் முழுமையாக வளர்ந்து சனாதன தர்ம கோட்பாடாக நிலைபெற்றது. காசி ஹிந்து வித்யாசாலை கமிட்டியால் 1907-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சனாதன தர்ம விளக்க நூலில் விரிவாக எப்படிப் பிறப்பு கர்மவினை அடிப்படையில் தண்டனையாக அமைகிறது என்பதைக் கூறுகிறது. ஒருவர், அதாவது ஒரு ஜீவாத்மா, அவரது வர்ணத்திற்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையிலிருந்து விலகினால் அவர் தண்டிக்கப்பட்டு அதைவிட கீழான வர்ணத்தில் பிறப்பார். அதே ஜீவாத்மா வர்ண தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் அடுத்த பிறவியில் பதவி உயர்வு பெற்று உயர் வர்ணத்தில் பிறப்பார்.

100th year celebration of Vaikam protest to be held on dec 28th at Chennai Trade Centre | சென்னையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா.. கேரள முதல்வர் பினராயி விஜயன் பங்கேற்பு ...

வைக்கம் போராட்டம்

இந்தியாவில் நவீன அரசியல் தோன்றிய பிறகு, பொது இடங்களில் சமூக விலக்கத்திற்கு எதிராக நடந்த முக்கியமான போராட்டம் கேரளாவின் வைக்கம் நகரில் நிகழ்ந்த போராட்டமாகும். 1924-25 ஆகிய ஆண்டுகளில் நிகழ்ந்த இந்தப் போராட்டத்தில் அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த பெரியார் முக்கிய பங்கெடுத்தார். அதனால் வைக்கம் வீரர் என்று அறியப்பட்டதுடன், பெரியாரின் அரசியல் வாழ்விலும் ஒரு முக்கிய நிகழ்வாக இது அமைந்தது. காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் காண்பதற்கான வித்து இந்த போராட்டத்தினூடாகவும் விழுந்திருக்கலாம்.

வைக்கம் ஆலயத்தைச் சுற்றியுள்ள தெருக்களில் ஈழவர்களையும், புலையர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி நடந்த போராட்டத்தை பொதுமக்களான “உயர்” ஜாதியினர் ஆதரித்தாலும், சனாதனிகளான ஆலய நிர்வாகிகள் மறுத்தனர். வைக்கம் வந்த காந்தி அவர்களுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தியபோது அவர்கள், தீண்டப்படாத ஜாதியினர் முந்தைய பிறப்பில் செய்த பாவத்தால்தான் அந்த ஜாதிகளில் பிறந்துள்ளனர், அதனால் அவர்களை விலக்கி வைக்க வேண்டியது தெய்வ நம்பிக்கை சார்ந்தது என்று வாதிட்டனர். பிறப்பே தண்டனை என்ற கொள்கையை காந்தியிடம் அவர்கள் தெளிவுபடுத்தினர்.

பல மாத போராட்டத்திற்குப் பிறகு அந்த தெருக்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டாலும், முற்பிறவியில் செய்த பாவமே பிறப்பு, பிறப்பே தண்டனை என்ற சிந்தனை சமூகத்திலிருந்து முற்றிலும் மறைந்துவிடவில்லை. இந்த மனோவியலுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடத் துவங்கினார் பெரியார். ஜாதீய ஏற்றத்தாழ்வும், சமூக விலக்கமும், சுரண்டலும் ஆன்மா, மறுபிறவி, கர்மவினை ஆகிய கோட்பாடுகளுடனும், தர்ம சாஸ்திரங்களுடன், அந்த சாஸ்திரங்கள் வேதங்களுடனும், கடவுளுடன் பிணைக்கப்பட்டு புனித வலைப்பின்னலாக இயங்குவதை உணர்ந்த பெரியார், அவை அனைத்தையுமே பகுத்தறிவின் வழி கேள்விக்கு உட்படுத்தாமல் ஜாதீய ஏற்றத்தாழ்வை முற்றிலும் களைய முடியாது என்ற முடிவிற்கு வந்தார். சுயமரியாதை இயக்கம் பிறந்தது.

பெரியார் தொடர்ந்து பல இடங்களில், பேசி எழுதிவந்த பகுத்தறிவு கருத்துகள் தொகுக்கப்பட்டு பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிசம் என்ற பெயரில் அற்புதமான ஒரு சிறு நூலாக 1949-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலில் மிக அழகாக, நுட்பமாக மானுடத்தின் இயற்கையையும், கடவுள், மதம் ஆகிய கருத்தாக்கங்கள் தோன்றிய விதத்தையும் எடுத்துரைத்து முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார் பெரியார். ஆன்மா என்று ஒன்று இருப்பதும், அது மறுபிறவி எடுப்பதும் சாத்தியமா என்பதை தர்க்கரீதியாக ஆராய்ந்து மறுக்கிறார். மிக எளிய மொழியில் எழுதப்பட்ட இந்த நூல் ஒரு புரட்சிகர தத்துவக் கையேடு என்றால் மிகையாகாது.

Indian National Congress – More Loyal Than The King! – Indiafacts

தேசிய அரசியலும், திராவிட அரசியலும்

இந்திய தேசிய காங்கிரஸ் என்பது துவக்க காலத்தில் பெரும்பாலும் கல்வி பயின்ற பார்ப்பனர்களால் நிரம்பியது எனலாம். அவர்களுடன் பனியா மூலதன சக்திகளும் இணைந்ததால் உருவானது இந்திய தேசிய சொல்லாடல். அவர்கள் ஆரிய பண்பாட்டையே ஒட்டுமொத்த இந்திய பண்பாடாகக் கொண்டுதான் இந்திய தேசியத்தைக் கட்டமைத்தார்கள். அதனால் வேதங்கள், புராணங்கள், தர்ம சாஸ்திரங்கள் ஆகிய சமஸ்கிருத நூல்கள் அனைத்தும் புனிதப்படுத்தப்பட்டன. அவற்றினை விமர்சன பூர்வமாக ஆராய்வதோ, கண்டிக்க வேண்டியதை கண்டித்து விலக்குவதோ நடைபெறாமல் போயிற்று.

காந்தி தன்னளவில் மனிதர்களிடையே பாகுபாட்டை ஆதரிக்காதவர் என்றாலும், அவருடைய செயல்முறை சமஸ்கிருத புனித நூல்களுக்கு புதிய விளக்கம் தருவதாகவே இருந்தது. இது அந்த நூல்களை விமர்சன பூர்வமாக எதிர்கொள்ளாமல் தவிர்ப்பதற்கே வழிவகை செய்தது எனலாம். அவர் மட்டுமின்றி முற்போக்காக சிந்தித்த அனைவருமே ஆரிய பண்பாட்டின் மூல நூல்களை விமர்சிப்பதைத் தவிர்த்தார்கள். விவேகானந்தர் நல்லதோர் உதாரணம்.

இந்த நிலையில்தான் பெரியார், அம்பேத்கர் ஆகியோரும், திராவிட இயக்கமும் ஆரிய பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கத்திற்கு எதிராக தத்துவப் போரை நிகழ்த்த வேண்டியதாயிற்று. திராவிடப் பண்பாடு ஆரியப் பண்பாட்டிலிருந்து வேறுபட்டது என்ற வரலாற்று உண்மையை அடிப்படையாகக் கொண்டு, என்னதான் தமிழ் மொழியிலும் ஆரிய கருத்துகள் புகுந்திருந்தாலும், அவற்றையும் விமர்சனம் செய்து ஒரு முற்போக்கான அரசியல் சிந்தனையை உருவாக்க முயன்றார்கள். பெரியாரைத் தொடர்ந்து அண்ணாவும், கலைஞரும் இந்த மாபெரும் பண்பாட்டு போராட்டத்தைத் தொடர்ந்தார்கள். தங்கள் பேச்சாற்றலாலும், எழுத்தாற்றலாலும் திராவிட-தமிழர் என்ற அரசியல் தொகுதியை உருவாக்கி அதில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவ அடிப்படையை வலியுறுத்த வகை செய்தார்கள்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆட்சியின் அரும்பெரும் சாதனைகள்! - Viduthalai

பகுத்தறிவுக்கு வலுச் சேர்க்காத கல்விச்சூழல்

இந்திய தேசியம் வேத காலத் தொன்மையைக் கொண்டாடுவதில் விமர்சன சிந்தனையை வளர்க்கத் தவறியது என்றால், நமது நவீன கல்வி முறையோ வேறொரு சிக்கலில் மாட்டிக்கொண்டது. பெருமளவு வறுமையில் சிக்கியிருந்த நாடு பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்றால் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி உடனடியாக தேவைப்பட்டது. சமூகத்திலும்கூட வறுமையிலிருந்து விடுபட விரும்பிய குடும்பங்கள் வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் அறிவியல் தொழில்நுட்ப கல்வியையே நாடின.

இதன் விளைவாக தமிழ்நாடு உட்பட இந்திய மாநிலங்களில், இந்திய மொழிகளிலும் சரி, ஆங்கில வழியிலும் சரி… கலை மற்றும் சமூக அறிவியல் அறிவுத் துறைகள் பெரும் தேக்கமடைந்தன. கடந்த எழுபது ஆண்டுகளில் மேலை நாடுகளில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ள சமகால விமர்சன சிந்தனை (Contemporary critical theory) என்பதற்கு இந்திய கல்விமுறையில் இடமேயில்லை. தமிழ்நாட்டு பள்ளிகளில் ப்ளஸ் டூ வகுப்புகளில் வரலாறு, அரசியல் கோட்பாடு, சமூகவியல், தத்துவம் ஆகிய பாடங்களை பயில்வதற்கான வாய்ப்புகள் அரிதாகவே உள்ளன. கலை, அறிவியல் கல்லூரிகளிலும்  இத்தகைய துறைகள் கிட்டத்தட்ட நசிந்தே போய்விட்டன. வளர்ச்சி ஆய்வுகள் (Development Studies), பாலின ஆய்வுகள் (Gender Studies), ஊடக ஆய்வுகள் (Media Studies), நிகழ்கலை ஆய்வுகள் (Performance Studies), திரைப்பட ஆய்வுகள் (Film Studies) போன்ற புதிய கல்வித்துறைகள் இன்னம் வலுவாக கால்பதிக்கவேயில்லை.  உயர்கல்வியில் இவை நிலைபெற்றால்தான் பள்ளிக்கல்வியிலும் தடம் பதிக்கும்.

இதனால் பெரியாரின் சுயமரியாதைச் சிந்தனைக்கு பெரிதும் வலுசேர்க்கவல்ல, அண்ணாவின் சுயாட்சி அரசியலுக்கு, கலைஞரின் சமூக நீதி அரசியலுக்கு அரணமைக்கக் கூடிய மேலைநாட்டு சமகால தத்துவ சிந்தனைகளை, கோட்பாட்டு சிந்தனைகளை தமிழ்நாட்டில் பயில்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளன. உயர்கல்வியில் இவை இடம்பெற்றால்தான் பள்ளி கல்வியிலும் இடம்பெற வாய்ப்பு உண்டாகும். உயர்கல்வி பயின்றவர்கள்தானே பள்ளிகளில் ஆசிரியர்களாக அமர்வார்கள்.

தேசிய அரசியல் சனாதன பிற்போக்கு சிந்தனைகளின் பிடியில் சிக்கும்போது, பகுத்தறிவின் துணைகொண்டுதான் திராவிட சுயமரியாதை அரசியல் எதிர்நீச்சல் போடுகிறது. அந்த அரசியலுக்கு வலுசேர்க்கும் அறிவுத்துறைகள் மேலை நாடுகளில் கடந்த ஐம்பதாண்டுகளில் பெரும் பாய்ச்சல்களைச் சந்தித்துள்ளன. அவற்றை நாம் இணைத்துகொள்ளும்போதுதான் நம்மிடையே தோன்றும் பிற்போக்கு சக்திகளை முறியடிக்க முடியும். உதாரணமாக, மதங்களின் வரலாறு, மதச்சார்பின்மையின் வரலாறு, குடியரசுத் தத்துவம், மக்களாட்சித் தத்துவம், சமூக நீதி தத்துவம் ஆகியவற்றின் இன்றைய வளர்நிலைகளை நமது கல்விப்புலத்தின் இன்றியமையாத அங்கமாக மாற்ற வேண்டும்.

திராவிட இயக்கம் ஓர் அறிவியக்கம் என்பதாலேயே அது இன்றும் கூட மூட நம்பிக்கை பேச்சுக்கெதிரான ஒற்றைக் குரலாகவேனும் எந்த அரங்கிலும் ஓங்கி ஒலிக்கிறது. மஹாவிஷ்ணுவை கேள்வி கேட்கும் சங்கரின் குரலாகிறது. அந்தக் குரல்களை வலுப்படுத்த காலம்தோறும் அறிவியக்கம் புதுப்பிக்கப்பட வேண்டும். அறிவியலும், தொழில்நுட்பமும் பொருளாதார வளர்ச்சியும் மட்டும் சமூக நீதி அரசியலை வளர்த்தெடுக்க முடியாது. அவற்றிற்கு இணையாக பிரகிருதி வாதமும் வளர்ந்தோங்க வேண்டும்.

பெரியார் எப்போதும் “என்னுடைய கருத்தைச் சொல்கிறேன்; நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்” என்றுதான் சொல்வார். எல்லா கல்வியுமே அந்த விவாத நோக்குதான். நான் உங்களுக்கு ஞானத்தைத் தருகிறேன் என்ற குரல் கல்வியல்ல. கற்றலின் கல்லறை. நம்பிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்தினால்தான் அவை மூடாத நம்பிக்கைகளாக இருக்கும். அதுவே பகுத்தறிவு; சுயமரியாதை.

கட்டுரையாளர் குறிப்பு:

Is birth a punishment? Political Philosophical Struggle of Dravida Iyakkam by Rajan Kurai Article in Tamil

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வெற்றிக் கழகமா? வெற்றுக் கழகமா? அரசியல் கட்சி என்றால்தான் என்ன?

சமத்துவம், சமூக நீதி, கூட்டாட்சி: அதிகாரத்தைப் பரவலாக்குவது எப்படி?

சமூக நீதிக்கு எதிரான “கிரீமி லேயர் விலக்கம்” என்ற கருத்தாக்கம்!

உள் ஒதுக்கீடு: உச்ச நீதிமன்ற தீர்ப்பும், தலித் அரசியலும், பொது சமூகமும்

டிஜிட்டல் திண்ணை: அமெரிக்காவில் இருந்து ஆலோசனை… ஸ்டாலின் கையில் ஹிட் லிஸ்ட்!

அரைச்ச மாவ அரைப்போமா, துவச்ச துணிய துவைப்போமா – அப்டேட் குமாரு

+1
0
+1
0
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *