மும்பை மாநகரம் தொடர்பாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசிய கருத்தால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அண்ணாமலையை கைது செய்ய வேண்டும் என உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் வலியுறுத்தி உள்ளார். அதேபோல மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவும் அண்ணாமலையை மிகக் கடுமையாக ஒருமையில் இழிவாக விமர்சித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் ஜனவரி 15-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளரான, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஜனவரி 8-ந் தேதி முதல் பிரசாரம் செய்தார்.
அண்ணாமலை பேசியது என்ன?
அப்போது, “மத்தியில் மோடி இருக்கிறார்.. மாநிலத்தில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இருக்கிறார்.. மும்பையில் பாஜக மேயர் இருக்கிறார்.. ஆகையால் மும்பை என்பது மகாராஷ்டிராவின் நகரம் மட்டும் இல்லை; அது ஒரு சர்வதேச நகரம்” என அண்ணாமலை பேசினார். அவரது இந்த பேச்சு மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணாமலையை கைது செய்க
அண்ணாமலையின் இந்த பேச்சு குறித்து கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், “அண்ணாமலை மீது உடனே வழக்கு பதிவு செய்ய வேண்டும். மகாராஷ்டிராவின் தலைநகரைப் பற்றி அண்ணாமலை எப்படி இப்படி பேச முடியும்? அண்ணாமலையை கைது செய்ய வேண்டும். மும்பையை விட்டு அண்ணாமலை வெளியேற அனுமதிக்கக் கூடாது” என்றார்.
இழிவாக பேசிய ராஜ்தாக்கரே
இதேபோல மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, அண்ணாமலையை இழிவான வார்த்தைகளில் விமர்சித்தார். மேலும், “தமிழ்நாட்டில் இருந்து இங்கே வந்த உனக்கும் இந்த நிலத்துக்கும் என்ன தொடர்பு? அதனால்தான் உங்களை (தமிழரை) பால்தாக்கரே விரட்டி அடித்தார்.. வட இந்தியர்களுக்கு எதிராக அவதூறுகளை இதுவரை பேசிவிட்டு இப்போது தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசுவதா?” என்றும் ராஜ்தாக்கரே கொந்தளித்தார்.
பாஜக விளக்கம்
மகாராஷ்டிரா பாஜகவின் தலைவர்கள், அண்ணாமலையின் கருத்து மும்பையை அவமதிக்கும் நோக்கில் கூறப்படவில்லை என்றும், மாறாக, மும்பையின் சர்வதேசப் பெருமையைப் பறைசாற்றும் வகையிலேயே அவர் பேசினார் என்றும் விளக்கம் அளித்தனர். மும்பையின் பொருளாதார, கலாச்சார முக்கியத்துவத்தை அண்ணாமலை எடுத்துரைத்ததாக பாஜக தரப்பு விளக்கமளித்துள்ளது.
