ADVERTISEMENT

”ஸ்டாலினை கலங்கடித்த பாதயாத்திரை”- அண்ணாமலை காட்டம்!

Published On:

| By Jegadeesh

Annamalai reply to mk stalin

பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் பாதயாத்திரையை ‘பாவயாத்திரை’ என்று  முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம் செய்திருந்தார்.

இந்நிலையில், அவரின் பேச்சுக்கு அண்ணாமலை இன்று (ஜூலை 29) கண்டனம் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று (ஜூலை 28) இராமேஸ்வரத்தில் ’என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் நடைபயணத்தை தொடங்கினார். இதை உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

இச்சூழலில், இன்று நடைபெற்ற  திமுக இளைஞரணி மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ”அமித்ஷா தமிழ்நாட்டிற்காக மத்திய அரசின் திட்டத்தை தொடங்கி வைக்க வந்தாரா? இல்லையென்றால் ஏற்கனவே அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைத் திறந்து வைக்க வந்தாரா?.

ADVERTISEMENT

ஏதோ பாதயாத்திரையை தொடங்கி வைக்க வந்துள்ளார். அது பாதயாத்திரை இல்லை. பாவ யாத்திரை. குஜராத்தில் 2002 ஆம் ஆண்டும், இப்போது மணிப்பூரில் நடந்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கின்ற பாவயாத்திரை” என்று கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.

இந்நிலையில், முதல் அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அண்ணாமலை ட்விட்டர் (எக்ஸ்) பதிவு ஒன்றை இன்று (ஜூலை 29) வெளியிட்டுள்ளார்.

ADVERTISEMENT

அதில், “உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று ராமேஸ்வரத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்த ’என் மண் என் மக்கள்’ நடைபயணம், தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை பாவயாத்திரை என்று புலம்பும் அளவுக்கு வெகுவாகக் கலங்கடித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

தமிழக மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவை நிறைவேற்றப்படாத நிலையில், ஊழல் அமைச்சர்களை காப்பாற்றுவதிலும், திமுக முதல் குடும்பத்தின் ‘நிதி’களைப் பெருக்குவதிலும் மட்டுமே ஊழல் திமுக அரசு இன்று கவனம் செலுத்துகிறது.

தமிழகத்தில் ஒரு குடும்பம் தாங்கள் செய்த எண்ணற்ற பாவங்களை போக்கிக் கொள்ள புனித நீரில் மூழ்க வேண்டும் என்றால் அது திமுகவின் முதல் குடும்பமாக மட்டுமே இருக்க முடியும்.

திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், கச்சத்தீவை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியதால், கடலில் இருக்கும் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டது.

மத்தியில் 10 ஆண்டுகால திமுக காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில், 80க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டனர், திமுகவினர் இவற்றைப் பார்த்து வாய்மூடி மௌனப் பார்வையாளர்களாகவே இருந்தனர். மீனவர்களின் உயிர்களை விட, வளமான அமைச்சரவைப் பதவிகள் அவர்களுக்கு முக்கியமாக இருந்தன.

2009 ஆம் ஆண்டில், இலங்கையில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான தமிழ் சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டபோது, அவர்களுக்கு உதவுவது போல் நடிப்பதில் மட்டும்தான், தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது தந்தையுடன் மும்முரமாக இருந்தார்.

பாவமன்னிப்பு கேட்கும் அளவுக்கு எத்தனையோ பாவங்கள் செய்திருக்கும் நிலையில், தன் குடும்பம் சொத்து குவிப்பதற்காக, தமிழ் மக்களின் நலனை அடகு வைக்கும் ஸ்டாலின் பாவயாத்திரை செய்து, ராமேஸ்வரத்தில் புனித நீராடி, எம்பெருமான் சிவனிடம் மன்னிப்பு கேட்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

“அப்துல் கலாம் கனவை மோடி நிறைவேற்றுகிறார்” – அமித்ஷா

பட்டாசு குடோன் விபத்து: பிரதமர், முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share