அப்துல் கலாம் கனவை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் என் மண் என் மக்கள் நடைபயணத்தை துவக்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்தார்.
நேற்று இரவு ராமேஸ்வரத்தில் நடைபயணத்தை துவங்கி வைத்தார். இன்று ராமேஸ்வரம் கோவிலில் வழிபட்டார். அதனை தொடர்ந்து அப்துல் கலாம் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு ‘டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம், மெமரீஸ் நெவர் டை’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியபோது, “கல்விக்காக தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்தவர் அப்துல் கலாம். அவரது முகத்தில் எப்போதும் புன்சிரிப்பு இருக்கும். அந்த புன்சிரிப்பானது நமது இந்தியாவின் வளமையான பாரதத்திற்கு ஒளி ஊட்டுவதாகவும் வேகம் ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது. அப்துல் கலாம் இந்தியா 2020 என்ற புத்தகத்தை எழுதியிருந்தார்.
அதில் இந்தியாவின் திறனை முன்னெடுத்து செல்ல வேண்டும், தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதாரம், கிராமம் நகரம் இரண்டும் இணைந்து செயல்பட்டால் இந்தியா முன்னேற்றமடையும் என்று குறிப்பிட்டிருந்தார். அவரது கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். இந்த புத்தகத்தை படித்தால் நமது வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமையும்.
அறிவியல் அறிஞராக மட்டும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளாமல் நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தில் முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் ஆன்மிகத்தில் மிகப்பெரிய ஈடுபாடு கொண்டிருந்தார். அப்துல் கலாம் இலக்கை மோடி நிறைவேற்றி வருகிறார். விண்வெளி துறையில் இந்தியா சாதிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை” என்று தெரிவித்தார்.
செல்வம்
பெண் விவசாயிகளுக்கு ஸ்பெஷல் விருந்தளித்த ராகுல்
“சூப்பர் ஸ்டார் சகாப்தம் முடிந்து விட்டது” – எஸ்.ஆர்.பிரபு