கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை தலைமையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து இன்று (ஜூன் 24) மனு அளித்தனர்.
இந்த சந்திப்பின் போது பாஜக முன்னாள் தலைவரும், தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன், பாஜக துணை செயலாளர் நாராயணன் திருப்பதி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணம் தொடர்பான வழக்கை தமிழக அரசு விசாரிக்கும் முறை சரியாக இல்லை என்பது எங்கள் கருத்து. இந்த விவகாரத்தில் திமுகவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். இதில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. மாநில அரசை தாண்டி அவர்கள் எதையும் கண்டுபிடிக்க போவதில்லை. சிபிஐ விசாரணை வேண்டும் என்பது தான் எங்களது தீர்க்கமான கோரிக்கை. அதை ஆளுநரிடம் தெரிவித்துள்ளோம்.
புதன்கிழமை தான் கள்ளச்சாராயம் அருந்தியது கண்டுபிடிக்கப்பட்டது என்று சொல்கிறார்கள். ஆனால், செவ்வாய்க்கிழமையே அதிகமான பொதுமக்கள் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். இதை மாவட்ட நிர்வாகம் கண்டுபிடிக்க தவறிவிட்டது.
அடுத்த நாள் கலெக்டரோடு உட்கார்ந்து பேட்டி கொடுத்த திமுக எம்.எல்.ஏக்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோரும் இதை மறைத்திருக்கிறார்கள். கலெக்டரை மாற்றியிருக்கிறார்கள். எஸ்.பியை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். ஆனால், எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மக்கள் பாதிக்கப்பட்டாலும், அரசியல் ரீதியாகவே அவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள். இந்த பாரபட்சம் மிகவும் கண்டிக்கத்தக்கது. மக்கள் பாதிக்கப்பட்டு பல பேர் உயிரிழந்துள்ள நிலையில், அந்த துறையின் அமைச்சரோ, முதலமைச்சரோ அங்கே சென்று பார்க்க வேண்டும் என்று கூட நினைக்காதது எந்த அளவிற்கு திமுக அரசு மக்களை மதிக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
ஜனநாயக நாட்டில் ஒரு குற்றம் நடக்கிறபோது எதிர்ப்பு தெரிவிக்க அனைத்து கட்சிகளுக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து பாஜக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபடும் போது அவர்களை கைது செய்கிறார்கள். இதையெல்லாம் குறித்து ஆளுநரிடம் எடுத்து சொல்லியிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.4,000 கோடியில் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம்: ஸ்டாலின் அறிவிப்பு!
Comments are closed.