வைஃபை ஆன் செய்ததும், ‘தினமும் மஞ்சள் அலர்ட்டான்னு அலுக்காதீங்க.. இனி ரெட் அலர்ட்டும் ரெடியாகுது’ என எச்சரித்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
அரசியல் வானிலையை விட்டாச்சா? ‘ரெட் அலர்ட்’ பற்றி எல்லாம் பேச்சு வருதே..
அரசியல் களத்தில்தானப்பா வானிலையை விட மஞ்சள் அலர்ட், ரெட் அலர்ட் என்ற ரேஞ்சுக்கு ஒவ்வொரு நாளும் ‘சம்பவங்களாக’ அரங்கேறுதே…
சரி.. ரெண்டு அலர்ட்டையும் விளக்கமாக சொல்லிடும்…
‘மஞ்சள் அலர்ட்டில்’ இருந்து தொடங்குறேன்..
டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி, ‘டிடிவி தினகரன், ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடம் இல்லை; இருவரையும் பாஜக கூட்டணியில் வைத்துக் கொள்ளவதை பற்றி நீங்க முடிவு செஞ்சுக்குங்க.. பாஜக அணிக்கு 40 சீட் தருகிறோம்.. அதுல நீங்க அவங்களுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் கொடுங்க’ என தெளிவான நிலையை சொல்லிட்டு வந்துட்டாரு..

டிடிவி தினகரனைப் பொறுத்தவரைக்கும், “நான் அண்ணாமலை சொல்லிதான் பாஜக கூட்டணிக்கே வந்தேன்.. எடப்பாடி முதல்வர் வேட்பாளர்னா அந்த கூட்டணிக்கே மீண்டும் போகவே மாட்டேன் என திட்டவட்டமாக சொல்லிட்டாரு..
“அண்ணாமலையுடன் தினமும் போனில் பேசுறேன்.. நானும் அவரும் சந்திக்க இருக்கிறோம்” என அண்ணாமலை புராணம் பாடிக் கொண்டிருக்கிறார் டிடிவி தினகரன்.
ஓபிஎஸ்ஸோ, ரொம்பவே சைலண்ட்டாக இருக்கிறார்.. சென்னையில் வீடு இருந்தும் கூட, ‘சில சந்திப்புகளுக்காக’ சென்னை உட்லண்ட்ஸ் ஹோட்டலில்தான் 2 நாட்களாக தங்கியிருக்கிறார்.
ஓபிஎஸ் மவுனமாக இருந்தாலே ஏதோ சீரியஸான காரணம் இருக்குமே?
ஆமாம்.. உண்மைதான்..
ஓபிஎஸ்ஸைப் பொறுத்தவரையில், அதிமுகவுக்குள் நுழையத்தான் முடியாது என்பது உறுதியாகிடுச்சு.. பாஜக கூட்டணியில் மீண்டும் சேர்ந்து தமக்கும் தமது ஆதரவாளர்களும் சில தொகுதிகளை வாங்கிடனும் என நினைக்கிறார். அதோடு நிற்காம, “எப்படியாவது முட்டி மோதியாவது, ‘இரட்டை இலை’ சின்னத்துல நிற்கிறதுக்கு வழியிருக்கான்னு பார்க்கனும்.. அப்படின்னு ஒரு பாதையை அவராகவே போட்டு அவரு மட்டுமே பயணிக்கிறாரு..

இதுல, டிடிவி தினகரன் சொல்ற மாதிரி எடப்பாடியை முதல்வர் வேட்பாளர் இல்லைன்னு பாஜக அறிவிக்குமா என்பதும் சந்தேகம்.. ஓபிஎஸ்-க்கு இரட்டை இலை கிடைக்குமா என்பதும் சந்தேகம்.. ஆனாலும் எப்படி ரெண்டு பேரும் நம்பிக்கையா இருக்காங்க?
இரட்டை இலை சின்னத்துக்காக புரோக்கர் சுகேஷை நம்பியவரு டிடிவி தினகரன்.. அதிமுகவே கிடைச்சிடும்னு பாஜகவே சரணம்னு இருந்தவரு ஓபிஎஸ்.. இவங்க ரெண்டு பேருக்கும் இப்போது ‘பொலிட்டிக்கல் கைடு’ அண்ணாமலை ஜிதான்.. இரண்டு பேரும் அண்ணாமலையைத்தான் ‘மலை’போல நம்புறாங்க..
டிடிவியும் ஓபிஎஸ்ஸும் சேர்ந்து அண்ணாமலையை சந்தித்து ‘டெங்கு காய்ச்சல்’ குணமாகிடுச்சான்னு விசாரிக்கப் போறாங்க.. அப்போ, ‘மந்திராலோசனை’ நடக்கப் போகிறது.. அந்த ஆலோசனைக்குப் பின்னர் ரொம்பவே அதகளமாக இருக்குமாம் பாஜக- அதிமுக கூட்டணி..
நயினார் சும்மா வேடிக்கையா பார்க்கிறாரு?
டிடிவி தினகரன் வெளிப்படையாகவே நயினார் நாகேந்திரன் மீது என்ன கோபம்னு சொல்லிட்டாரு… “பாஜக கூட்டணியில் யாரு இருக்கனும்னு எடப்பாடிதான் முடிவு செய்வாருன்னு நயினாரு சொன்னாரு.. அதனால வெளியே வந்துட்டேன்னு”டிடிவி பிரஸ்மீட்டில் சொல்லிட்டாரு..
நயினாரோ, ஓபிஎஸ்ஸுடன் பேசிகிட்டு இருக்கேன் என சொல்கிறார்.. ஓபிஎஸ்ஸை எப்படியாவது கூட்டணிக்குள் திரும்ப கொண்டு வந்து டெல்லியிடம் பாராட்டு வாங்க துடிக்கிறார் நயினார்..
அண்ணாமலையோ, டிடிவி தினகரன்- ஓபிஎஸ் இருவரையும் வைச்சு ‘ஆடிப் பார்க்கலாம்’னு துடிக்கிறார்.. இப்ப களமானது, ‘ஜெயிக்கப் போவது நயினாரா? அண்ணாமலையா?’ என மாறிப் போயிடுச்சுய்யா..
ஓஹோ.. இதான் மஞ்சள் அலர்ட்டா? ரெட் அலர்ட் மேட்டர் என்னாப்பா?
சென்னை ஈசிஆர் ரிசார்ட்டில் பாஜகவின் தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் ஒரு மீட்டிங் நடத்தியிருந்தாரே.. அண்ணாமலை போய் பொலிட்டல் சயின்ஸ் வகுப்பு எடுத்தாருன்னு நாம எழுதியிருந்தோமே..
ஆமா..
அந்த மீட்டிங்கில பிஎல் சந்தோஷ் பேசுன சில விஷயங்கள்தான் பாஜக ‘தலைகளுக்கு’ ‘தலைவலியை’ உருவாக்கிவிட்டுருச்சாம்…
ஓஹோ..
தமிழக பாஜகவின் சீனியர்களை மட்டுமல்ல.. 2-ம் நிலை தலைவர்களைப் பற்றியும் ரொம்பவே முழுமையாக, அக்குவேறா.. ஆணிவேரா ‘துல்லியமாகவே’ தெரிஞ்சு வெச்சுருக்கிறாராம் பிஎல் சந்தோஷ்..

ஈசிஆர் ரிசார்ட் கூட்டத்துல பாஜக கருப்பு முருகானந்தம் அப்பாவியாக தமது பின்புலத்தை பற்றி பேச தொடங்கினார்.. ஆனால் பிஎல் சந்தோஷ் குறுக்கிட்டு, ‘தஞ்சாவூரில வீடு இருக்கிறதும் தெரியும்.. சென்னையில, டெல்லியில இருக்கிறதும் எங்களுக்கு தெரியுமே’ என பொளேர்னு கவுண்ட்டர் அடிக்க.. மொத்த கூட்டமும் ஜெர்க் ஆகிடுச்சாம்.. அப்ப நம்மை பத்தியும் டீட்டெயில் ரிப்போர்ட்டை மனுஷரு கையில வெச்சிருக்காரா? என தவித்துக் கொண்டனர் பாஜக நிர்வாகிகள்.
ஈசிஆர் ரிசார்ட் மீட்டிங்கில், பாஜக மாநிலச் செயலாளர் கராத்தே தியாகராஜனுக்கு செம்ம பாராட்டு தெரிவிச்சாராம் பிஎல் சந்தோஷ். ” இங்க பேசுனதுலயே ரொம்ப பிராக்டிக்கலா கராத்தே தியாகராஜன்தான் பேசுனாரு.. தேர்தல் பணிகளைப் பற்றி ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக சொன்னாரு”ன்னு பாராட்டி தள்ளிட்டாராம்..
ரெட் அலர்ட் மேட்டர் என்னவாம்யா?
அவசரப்படாதீர்.. வாரேன்.. சொல்றேன்..
அப்புறமாக சீரியசாக, “பீகார் தேர்தல் பற்றி நமக்கு நல்ல ரிப்போர்ட் வந்திருக்கு.. போன முறையைவிட இந்த முறை நமக்கு பீகாரில் அதிகமான இடங்கள் கிடைக்கும்னு அந்த ரிப்போர்ட் சொல்லுது.. பீகார் தேர்தல் முடிஞ்சதும் ‘தமிழ்நாடுதான்’ நம்ம குறி.. ன்னு மேட்டருக்கு வந்தாராம்..
அத்துடன், “மேற்கு வங்கத்துல மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ்காரங்களோட, கேரளாவில் கம்யூனிஸ்டுகளோட பாஜகவினர் தெருவில இறங்கி சண்டை போடுறாங்க.. தமிழ்நாட்டில்தான் சோசியல் மீடியாவில் சண்டை போட்டுகிட்டு இருக்கீங்க.. மேற்கு வங்கம், கேரளா மாதிரி தமிழ்நாட்டிலும் ‘தெருவில இறங்கி சண்டை’ போட்டாதான் நாம வளர முடியும்.. அந்த ‘வழியை’ பின்பற்றுங்க” என ஆவேசமாக ‘தூண்டி’விட்டாராம் பிஎல் சந்தோஷ்..
ரொம்ப அதிர்ச்சியா இருக்கே..
பிஎல் சந்தோஷ் இப்படி பேசி முடிஞ்சதுமே, “மேற்கு வங்கத்துல பஞ்சாயத்து தேர்தல் தொடங்கி சட்டமன்ற, மக்களவைத் தேர்தல்னு எது நடந்தாலும் திரிணாமுல் – பாஜக; கம்யூனிஸ்டுகள்- பாஜக மோதல் இல்லாம ரத்த ஆறு ஓடாம இருந்ததே இல்லை.. வெட்டு குத்துன்னு உயிரிழப்புகள் ஏற்பட்டு தொகுதிகளில் தேர்தல்களை ஒத்திவைக்கிற நிலைமை கூட ஏற்பட்டிருக்கு.. கேரளாவிலும் பாஜக- கம்யூனிஸ்டுகள் மோதலில் சாவுகள் விழுந்துருக்கு.. அப்படியான ஒரு ‘பயங்கர’த்தை நம்ம தமிழ்நாட்டுல நம்மை செய்ய சொல்றாரே சந்தோஷ் ஜி?” என திகலடித்த முகத்துடன் பாஜக நிர்வாகிகள் தங்களுக்குள் பேசிக் கொண்டனராம்…

பிஎல் சந்தோஷின் இந்த ‘வெறி’ப்பேச்சு அரசாங்கத்தின் கவனத்துக்கும் உடனே போய் சேர்ந்திருக்கிறதாம் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.