மத்திய அரசின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்கள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால், ஃபெயில் என்ற நடைமுறை அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தங்கள் குழந்தைகள் குறைவாக மதிப்பெண் எடுத்தால், ஃபெயில் ஆக்க பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் ஒப்புதல் கடிதம் பெறத் தொடங்கியுள்ளன. anbil mahesh warns cbse
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், தமிழகத்தில் இடைநிற்றல் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், “சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 5-ஆம் வகுப்பு மற்றும் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தேர்ச்சியடையவில்லை என்றால், மீண்டும் அதே வகுப்பில் தான் படிக்க வேண்டும் என்று தேசிய கல்வி கொள்கையின் சரத்தை அமல்படுத்தப் போவதாக, செய்திகள் வெளியாகியுள்ளது.
தேசிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்க்க காரணம் இதுதான். திமுகவில் உள்ள குடும்பத்தினரின் குழந்தைகளுக்காக மட்டும் நாங்கள் தேசிய கல்வியை கொள்கையை எதிர்க்கவில்லை. அனைத்துக் கட்சி மற்றும் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களின் குழந்தைகளுக்காக நாங்கள் பேசுகிறோம்.
தொடக்க கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இது தமிழ்நாட்டிற்கு பெருமை. ஆனால், சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் இந்த நடைமுறையை கொண்டு வந்தால், தமிழகத்தில் இடைநிற்றல் அதிகரிக்கும்.
கடன் வாங்கி தங்கள் பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர்கள் எந்த அளவுக்கு இதனால் அழுத்தத்திற்கு உள்ளாவார்கள் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்வதில்லை.
ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு என்ன தெரியும்? அவர்களுக்கு நீங்கள் எப்படி அட்வைஸ் செய்வீர்கள்? இதனால் கல்வியில் இருந்தே மாணவர்கள் விலகிச் சென்றுவிடுவார்கள்.
குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்வி கொள்கைக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஒரு கட்சிக்காக இதனை நான் கேட்கவில்லை. மாணவர்களின் எதிர்கால நலனுக்காக இதை கேட்கிறேன்.
பல்வேறு பணிகளில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், காலையிலேயே இந்த செய்தியை பார்த்துவிட்டு என்னிடம் பேச வேண்டிய அவசியம் என்ன? இதுதொடர்பாக ஊடகத்தினரை சந்தித்து தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதனால் தான் உங்களை சந்தித்தேன்” என்று தெரிவித்தார். anbil mahesh warns cbse