திருநராக வாழ அதிகாரி அங்கீகாரம் தேவையா: சட்டத் திருத்தமும் திரளும் உரிமை முழக்கமும்!

Published On:

| By Minnambalam Desk

அ. குமரேசன்

சமுதாயத்தின் விளிம்புநிலையில் நிறுத்தப்பட்டிருக்கும் மக்கள் தடைகளற்ற இருத்தலுக்காகவும், பொது அங்கீகாரத்திற்காகவும் நூற்றாண்டாகப் போராடி வருகிறார்கள். உலக அளவில் திருநர் மக்களும் தொடங்கிய அந்தப் போராட்டப் பயணத்தின் இந்தியச் சாலையில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவது 2019இல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2020இல் நடைமுறைக்கு வந்த ‘திருநர் (பாதுகாப்பு மற்றும் உரிமைகள்) சட்டம்’. ஆறே ஆண்டுகளில், இப்போது ஒன்றிய பாஜக அரசு அதில்  சில திருத்தங்களைச் செய்து புதிய சட்டமாக்க முயல்கிறது.

இம்மாதம் 13ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சட்டத் திருத்த முன்வரைவு திருநர் உரிமைகளை மீண்டும் கேள்விக்குறியாக்குகிறது. நாகரிக உலகத்தின் சட்டங்கள் ஒரு சமூகத்தின் பாதுகாப்பையும் முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்துவதாக  இருக்க வேண்டுமே ஒழிய, அவர்களின் கண்ணியத்தைச் சோதனைக்கு உள்ளாக்குவதாக இருக்கக் கூடாது என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

ADVERTISEMENT

தற்போதுள்ள சட்டத்தின் கதையையும் திருத்தங்களால் ஏற்படும் நிலையையும் பார்ப்போம். இந்தியாவில் நலிந்த பிரிவினருக்கு இலவச சட்ட உதவிகளை வழங்கவும், லோக் அதாலத் (மக்கள் மன்றம்)  மூலம் வழக்குகளைத் தீர்க்கவும் 1987இல் ‘தேசிய சட்ட சேவைகள் ஆணையம்’ (நால்சா) உருவாக்கப்பட்டது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு என்றும் அது குறிப்பிடப்படுகிறது.

ஒருவர் பிறக்கும்போது எந்தப் பாலின உறுப்புடன் இருக்கிறாரோ அப்படியேதான் ஆயுள் முழுக்க அடையாளப்படுத்தப்படுவார். இடைக் காலத்தில் உடல் தன்மை சார்ந்த மாற்றங்கள் ஏற்படுவது புரிந்துகொள்ளப்பட மாட்டாது. அவர்கள் ஒழுக்கக்கேட்டால், அல்லது ஏதோ பிணியின் பாதிப்பால், அல்லது உடலியக்கத்தின் விபத்தால், அல்லது மனநலம் குன்றியதால் மாறுதலாக நடந்துகொள்கிறார்கள் என்றுதான் பொதுச் சமூகத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT

இயற்கையின் பிள்ளைகள் 

ஆணாகப் பிறந்தவன் பெண்ணின் அசைவுகளை (திருநங்கை) வெளிப்படுத்தும்போது, பெண்ணாகப் பிறந்தவள் ஆணின் அசைவுகளை (திருநம்பி) வெளிப்படுத்தும்போது முதலில் விளையாட்டுத்தன வேடிக்கையாக்கப்பட்டது. அந்த வெளிப்பாடுகள் தொடரத் தொடர  கேலிக்குரிய ஒழுக்கக் கேடாக்கப்பட்டது. சமூக வெளியில் குடும்பத்திற்கு ஒரு தலைக்குனிவாகக் கருதப்பட்டது.

ADVERTISEMENT

மாறு பாலினத்தவர்களைத் “திருத்துவதற்காக“ இழிவான வசவுகள் வீசப்பட்டன, கடுமையான தண்டனைகள் அளிக்கப்பட்டன. முந்தைய பாலினத்துக்கே மறுபடியும் மாற்றுவதற்காகக் கொடுமையான சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். இதை வைத்து சுளைசுளையாகப் பணம் கறக்கலாம் என்று கணக்குப் போடும் சிலபல மருத்துவர்கள் அந்த சிகிச்சைகளைச் செய்தார்கள்.

அதை விடக் கொடுமையாக, இதெல்லாம் பொறாமைக்கார எதிரிகளால் “வைக்கப்பட்ட” சூனியம் என்றும், அதை “எடுத்துவிட்டால்” சரியாகிவிடும் என்றும் சூனிய வல்லுநர்கள் விளக்கமளித்தார்கள். அதில் கடவுளை ஈடுபடுத்துவதற்காக சாம்பிராணிப் புகை முதல் சவுக்கடி வரையில் கையாண்டார்கள். பெரும்பாலான மதங்களின் கடவுள்களுக்கு இந்த வேலையும் தரப்பட்டது. “சூனியம் வைக்கப்பட்டவர்” பெண்ணாக இருந்துவிட்டால், சிறப்புப் பூசையின் பெயரால் மேற்படி வல்லுநர்கள் பாலியல் வேட்டையாடி விளையாண்ட வக்கிரக் கதைகளும் உண்டு. 

கடவுள் சித்தப்படியே எல்லாம் நிகழ்கிறது என்று நம்புகிறவர்களால் இந்தப் பாலின மாற்றமும் அவன் சித்தம்தான் என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. அற்ப மானுடச் சடங்குகளால் அவன் சித்தத்தைத் திருத்தியமைக்க முயன்றார்கள்.

உயிரினப் பரிணாமத்தில், குறிப்பிட்ட உறுப்புகளோடு குறிப்பிட்ட பாலினமாகப் பிறப்பது இயற்கையானது. அதைப் போலவே, பிறந்த பின் வளரும் காலத்தில் ஏற்படும் பாலின அடையாள மாற்றமும் இயற்கையானது. வீடுகளில் பெண் குழந்தைகளுக்கு ஆண் உடையையும், ஆண் குழந்தைகளுக்குப் பெண் உடையையும் அணிவித்துப் படம் எடுத்து மகிழ்கிறோம். இயற்கை தன் பிள்ளைகளுக்கு இப்படிப் பாலின உடையை மாற்றி மகிழ்கிறது. இவர்களைச் சிறுமைப்படுத்துவது இயற்கையைச் சிறுமைப்படுத்துவதுதான்.

அந்த டேனிஷ் பெண்

1830களில் டென்மார்க் நாட்டில் ஆண் அடையாளத்துடன் பிறந்த ஐநார் வேகனர் பின்னர் பெண் உணர்வுகளோடும் நடையுடைகளோடும் லில்லி எல்பி என்ற திருநங்கையாக மாறினார். இளக்காரங்களையும் புறக்கணிப்புகளையும் எதிர்கொண்ட அவர் திருநர் உரிமைகளுக்கான இயக்கத்தைத் தொடங்கினார். (அவருடைய வாழ்க்கையைச் சொல்லும் ‘தி டேனிஷ் கேர்ள்’ என்ற திரைப்படம் டாம் ஹூப்பர் இயக்கத்தில், 2015இல் வந்தது. பேரண்ட அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் வாழ்க்கையைச் சொல்லும் ‘தி தியரி ஆஃப் எவ்ரிதிங்’ என்ற திரைப்படத்தில் நடித்த எடி ரெட்மெய்ன் அந்த லில்லி எல்பி கதாபாத்திரமாகவும் வாழ்ந்து காட்டியிருப்பார். அமேசான் பிரைம், ஆப்பிள் டிவி ஓடிடி தளங்களில் அந்தப் படத்தைப் பார்க்கலாம்.)

1930களிலேயே திருநர் அடையாள உரிமை இயக்கங்கள் தொடங்கியிருக்கின்றன. பிற்காலத்தில் அவர்களைப் புரிந்துகொள்வதற்கான கலை இலக்கியப் படைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் 2026இல், திருநர்கள் தங்கள் அடையாளத்தை நிறுவுவதை மறுபடியும் ஒரு போராட்டமாக மாற்றுகிற ஒரு சட்ட முன்வரைவு எவ்வளவு பிற்போக்குத்தனமானது!

வழக்கும் தீர்ப்பும்

திருநர் மக்களின் உரிமையைத் தனது பிரச்சினையாக எடுத்துக் கொண்ட தேசிய சட்ட சேவைகள் ஆணையம் (நால்சா) 2012ல் ஒரு  பொதுநல வழக்காக உச்சநீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. திருநர் சமூகத்தின் சார்பாக சமூகச் செயல்பாட்டாளர் லட்சுமி நாராயண் திரிபாதி உள்ளிட்டோரும் அந்த மனுவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனுடன் தொடர்புடைய மற்றொரு மனுவும் உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது.

இரண்டு ஆண்டுகள் நீதிமன்றத்திற்கு உள்ளே நடந்த விசாரணைகளுக்கும், வெளியே நடந்த விவாதங்களுக்கும் பிறகு, கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகிய இரண்டு நீதிபதிகள் அமர்வு 2014 ஏப்ரல் 15 அன்று வழங்கியதுதான் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ‘நால்சா தீர்ப்பு’. மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இவர்கள் தங்களை “மூன்றாம் பாலினம்” என்று பதிவு செய்துகொள்ள அந்தத் தீர்ப்பு வழி செய்தது. மூன்றாம் பாலினம் என்றால் முதலாம், இரண்டாம் பாலினங்கள் யார் என்ற கேள்வியும் எழுந்தது. ஆயினும், திருநர் உரிமையை நிலைநாட்டுகிற தொடர் போராட்டத்தில் அது ஒரு வலுவான துணையாக இணைந்தது.

இந்திய அரசமைப்பு சாசனத்தின் பிரிவு 14 (சமத்துவம்), பிரிவு 15 (பாகுபாடின்மை), பிரிவு 21 (வாழ்வுரிமை) ஆகியவை ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டுமல்ல, திருநர்களுக்கும் சமமாகப் பொருந்தும். பாலின அடையாளத்தின் அடிப்படையில் ஒருவரைப் புறக்கணிப்பது அடிப்படை உரிமை மீறலாகும். திருநர்களைச் சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பின்தங்கியவர்களாகக் கருதி, அவர்களுக்குக் கல்வியிலும் அரசு வேலைகளிலும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் திருநர் நல வாரியங்களை அமைக்க வேண்டும். சமூகப் பாதுகாப்பு. தனி கழிப்பறைகள், முறையான மருத்துவ வசதிகள் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். சமூகத்தில் நிலவும் தவறான எண்ணங்களை மாற்ற, அரசாங்கம் விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும். திருநர்களைக் குற்றப் பரம்பரையினராக நடத்தும் காலனியாதிக்கக் காலப் பார்வையைக் களைந்து நாட்டின் சரிநிகர் குடிமக்களாக நடத்த வேண்டும்.

இவற்றோடு உச்சநீதிமன்றத் தீர்ப்பில்ஒரு மிக முக்கியமான வழிகாட்டல் இருக்கிறது. ஒருவர் திருநராக அங்கீகரிக்கப்படுவதற்கு, அவர் எஸ்ஆர்எஸ் எனப்படும் பாலின மாற்று அறுவை சிகிச்சையோ, மருத்துவப் பரிசோதனையோ செய்திருக்க வேண்டுமென்ற கட்டாயமில்லை. மனம் சார்ந்த உணர்வுடன் அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் விதமே போதுமானது.

உலகெங்கும் பரவிடும் மனித உரிமை அலைகளில் இந்தியாவும் இணைவதன் பொது அறிவிக்கையாக அந்தத் தீர்ப்பு வரவேற்கப்பட்டது. குறிப்பாக திருநங்கைகளும் திருநம்பிகளும் இவையன்றி கலவையான – ஆனால் இயற்கையான – பாலின அடையாளங்களுடன் இருப்பவர்கள்  கொண்டாடினார்கள்.

திருத்தங்கள் கூறுவதென்ன?

இன்று திருநர் மக்களை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கி, ஆவேச எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ள திருநர் (பாதுகாப்பு மற்றும் உரிமைகள்) திருத்த சட்ட முன்வரைவை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தாக்கல் செய்தார். 2019 சட்டச் செயலாக்கத்தில் சில நடைமுறை மாற்றங்களைச் செய்வதே அரசின் நோக்கம் என்று காரணம் கூறப்பட்டது.

இந்த நடைமுறை மாற்றங்களில் ஒன்று தங்களின் சொந்த அடையாள உரிமையையும் சுயமரியாதை உணர்வையும் ஓங்கி மிதிக்கிறது என்று திருநர்கள் கண்டனக் குரல் எழுப்புகிறார்கள். திருநர் அமைப்புகளுடன் கலந்தாலோசிக்காமல் நடைமுறை மாற்றங்களுக்கான சட்ட முன்வரைவு கொண்டுவந்திருப்பது ஜனநாயகப் பண்பையும் மிதிக்கிறது எனலாம். 

இந்த முன்வரைவு சட்டமாகுமானால், திருநராகத் தன்னை உணரும் ஒருவர் அதை மெய்ப்பிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரின் சான்றிதழையும், மருத்துவர் குழுவின் பரிந்துரையையும் பெற வேண்டும். அதாவது அரசாங்க அலுவலகப் படியேறி “அய்யா/அம்மா நான் ஒரு மூன்றாம் பாலினத்து ஆள்,” என்று விண்ணப்பித்துச் சான்றிதழ் கோர வேண்டும். அதற்காக மருத்துவர்களை அணுகித் தன் உறுப்புகளைப் பரிசோதிக்க உடலை ஒப்படைக்க வேண்டும்.

ஒரு வாதத்துக்காகவாவது, திருநர்கள் மீதான பெருங்கருணையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் கட்டணமின்றியே சான்றிதழ் வழங்கப்படுவதாகவும், மருத்துவமனையில்  இலவசமாகவே அறிக்கை தரப்படுவதாகவும் வைத்துக்கொள்வோம். ஆனால், ஒருவர் தனது சுயமரியாதை என்ற பெரிய விலையைக் கொடுத்துதானே அவற்றைப் பெற வேண்டும்? 

அப்பட்டமான பாகுபாடு

ஆண்களோ பெண்களோ தங்களை அவ்வாறே பதிவு செய்துகொள்ள இவையெல்லாம் தேவையில்லை. கல்விக் கூடங்களிலோ, வேலைத் தலங்களிலோ கோரப்படுமானால் பள்ளிச் சான்றிதழ் உள்ளிட்ட வழக்கமான ஆவணங்களை இணைத்தால் போதுமானது. உச்சநீதிமன்ற அங்கீகாரத்தின்படி மூன்று பாலினங்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் இந்த நிபந்தனைகளை விதிப்பது – ஒரு வகையில் பாலினப் பாகுபாட்டையும், சிறுமைப்படுத்தலையும் சட்டப்பூர்வமாக்குகிறது என்றே சொல்ல வேண்டும்.

2014-இல் நால்சா தீர்ப்பு “மருத்துவச் சான்றிதழ் கட்டாயமில்லை” என்று திட்டவட்டமாகச் சொன்னது. ஆனால் 2026-இன் திருத்தம் மருத்துவ நிர்வாகக் கதவுகளைத் தட்டச் சொல்கிறது, அதிகார பீடப் படியேறச் சொல்கிறது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் ஆன்மாவையே சிதைப்பதல்லவா?

நிலைமையைச் சீர்குலைக்கிற திருத்தங்கள் ஏன் என்ற கேள்விக்கு  பதிலளித்த அமைச்சர், திருநர் அல்லாதவர்கள் மோசடியாகப் பதிவு செய்து இட ஒதுக்கீட்டையும் சலுகைகளையும் தட்டிப் பறிப்பதைத் தடுக்க மாவட்ட ஆட்சியரும் மருத்துவக் குழுவினரும் சரிபார்ப்பது தேவையாகிறது என்றார். மக்கள்தொகையில் திருநர் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிடவும், ‘தேசிய திருநர் அடையாள அட்டை’  வழங்குவதை முறைப்படுத்தவும் இந்தத் திருத்தம் உதவும் என்ற வாதத்தை, அதன் ஆதரவாளர்கள் முன்வைக்கிறார்கள். இதையெல்லாம் மேற்படி சான்றிதழும் பரிந்துரையும் இல்லாமலே செய்ய முடியும் என்பது ஒருபுறமிருக்க, சட்டத் திருத்த ஆதரவாளர்கள் முன்வைக்கிற மற்றொரு வாதம் இந்த மக்களை மேலும் அவமானப்படுத்துகிறது.

காலனிய மிச்ச சொச்சம்

திருநர் சமூகத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும், அவர்களைக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரவும் இந்தத் திருத்தங்கள் உதவும் என்பதாக ஒரு பாதுகாப்பு வாதமும் முன்வைக்கப்படுகிறது. திருநர்களைக் குற்றப் பரம்பரையினராக நடத்தும் காலனியாதிக்கக் காலப் பார்வையைக் களைந்து நாட்டின் சரிநிகர் குடிமக்களாக நடத்த வேண்டும் என்ற உச்சநீதிமன்ற வழிகாட்டலையே முடக்குகிற பக்கவாதம் அல்லவா இது?

எல்லாத் துறைகளிலும், எல்லாத் தளங்களிலும முறைகேடுகள் மலிந்திருப்பதை மறுப்பதற்கில்லை. முறையாக விவாதித்தால் சரியான, அனைவரும் ஏற்கத்தக்க வழிமுறைகளை உருவாக்கி அவற்றைக் களைந்திட முடியும். ஒரு சிலரது முறைகேடுகளைத் தடுக்க, ஒட்டுமொத்த சமூகத்தின் மாண்பையும் கேள்விக்கு உள்ளாக்குவது பண்பாட்டுக் களத்தில் மிகப் பெரிய முறைகேடாகிவிடுமே?

தண்டனையில் பாகுபாடு

திருத்தத்தின் வேறு சில பாகுபாடுகளையும் களப் போராளிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். பெண்கள் மீது வன்கொடுமைகள் இழைப்போருக்கு அளிக்கப்படுவதை விட, திருநர்கள் மீது வன்கொடுமைகள் இழைப்போருக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம் குறைவாக இருக்கிறது. ஒரே மாதிரியான குற்றங்களுக்குப் பாலின அடிப்படையில் மாறுபட்ட தண்டனைகள் நியாயமாகுமா? அது திருநர் பாதுகாப்பை வலுவிழக்கச் செய்யாதா?

திருநர்கள் தங்களின் ரத்த உறவுக் குடும்பங்களுடன் இருக்க வேண்டும் அல்லது அரசாங்கக் காப்பகங்களில் சேர வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. இது தங்களின் வாழ்க்கையை இவர்களே தேர்வு செய்யும் சுதந்திரத்தை முடக்குகிறது. திருநர் வாழ்க்கையைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் குடும்பங்கள்தான் ஒடுக்குமுறை மையமாகவே இருக்கின்றன. அந்தச் சூழலில், தங்களின் மனதுக்கு உகந்ததாகத் தேர்ந்தெடுக்கும் குடும்பங்களுடன் வாழ்வதைத் தடுப்பது இவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும், மனநலத்துக்கும் சவாலாகும்.

கடமையும் பெருமையும்

“எங்களைக் கேட்காமல் எங்களைப் பற்றிய எந்த முடிவும் எடுக்காதீர்கள்” –இதுதான் திருநர் மக்களின் ஒட்டுமொத்தக் குரலாக ஒலிக்கிறது. சட்டங்கள் காகிதங்களில் வலிமையாகத் தோன்றலாம், ஆனால் அவை ஒரு சமூகத்தின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்கத் தவறும்போது அவை வெறும் அடக்குமுறை கருவிகளாகவே பார்க்கப்படும்.

ஆகவேதான் சிபிஐ(எம்), சிபிஐ, சிபிஐ(எம்எல்), காங்கிரஸ், என்சிபி, ஆர்ஜேடி, தமிழ்நாட்டில் திமுக, விசிக உள்பட பல்வேறு கட்சிகளும், இளைஞர், மாணவர், மாதர் சங்கங்களும், மனித உரிமை அமைப்புகளும் இவர்களது குரலுடன் இணைகின்றன. மார்ச் 22 அன்று நாடாளுமன்றம் முன்பாகத் திரண்ட திருநர் மக்களுக்கு  அனைத்து எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் தங்களின் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினார்கள்.

இதை வெறும் ஆளுங்கட்சி – எதிர்க்கட்சி முரணாகப் பார்ப்பதற்கில்லை. ஒருவேளை தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை வைத்து, நாட்டின் உயரிய அமைப்பான நாடாளுமன்றத்தில் இந்தத் திருநர் நல விரோதச் சட்டத்தை நிறைவேற்றக்கூடும்தான். ஆனால் நாடாளுமன்றத்தை விட  உயர்வான அரசமைப்பு சாசனம் உறுதிப்படுத்துகிற உரிமையோடு திருநர் மக்கள் மறுபடி நால்சா அமைப்பையும், உச்சநீதிமன்றத்தையும் நாட முடியும். தன்னுடைய முந்தைய நியாயத் தீர்ப்பை அரசாங்கம் மாற்றி எழுதுவதை நீதிமன்றம் அனுமதிக்குமா? அல்லது நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தைத் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று ஒதுங்கிக்கொள்ளுமா?

சூதாட்டம் போன்றதொரு நிலைமை வருமுன் தடுக்கும் நிதானத்துடன்  சட்டத் திருத்த முன்வரைவை மறு ஆய்வு செய்து விலக்கிக்கொள்வதே அரசுக்கு மரியாதை. திருநர் சமூகத்தின் உண்மையான தேவைகளையும், அறம் சார்ந்த  உரிமைகளையும் உள்ளடக்கிய ஒரு முழுமையான சமூக நீதிச் சட்டத்தை உறுதி செய்வதே அரசின் கடமை. அப்படிப்பட்ட நீதி இருக்கிறது என்று திருநர் மக்கள் அங்கீகரித்த சட்டமாக அதை நிறைவேற்றுவதே நாடாளுமன்றத்துக்குப் பெருமை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share