மூன்றாம் பாலினத்தவரின் குழந்தைக்கு “பெற்றோர்” என்று குறிப்பிட்டு பிறப்புச் சான்றிதழ் வழங்குமாறு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. transgender couple as parent
கேரள மாநிலம், கோழிக்கோடு- உம்மலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சஹத் பாசில் மற்றும் ஜியா பாவல். இதில், சஹத் பாசில் பெண்ணாகப் பிறந்து ஆணாக மாறிய திருநம்பி, ஜியா பாவல், ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய திருநங்கை.
இவர்கள் முதலில் இரு குழந்தையை தத்தெடுக்க விரும்பினர். ஆனால் மூன்றாம் பாலினத்தவர் என்பதால் அதில் சட்ட சிக்கல் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு அந்த முடிவை கைவிட்டனர்.
எனினும் பாலின மாற்று அறுவை சிகிச்சையில் இருந்தபோது, மருத்துவர்கள் மூலம் சஹத்தின் கருப்பை உள்ளிட்ட உறுப்புகள் அகற்றப்படாததைத் தெரிந்துகொண்டனர்.
இதையடுத்து ஜியாவின் விந்தணுவை பெற்று, சஹத்தின் கருப்பைக்குள் செலுத்தப்பட்டது. அதன்படி கடந்த 2023 பிப்ரவரி 9ஆம் தேதி இவர்களுக்கு குழந்தை பிறந்தது.
இக்குழந்தையை கோழிக்கோடு மாநகராட்சியில் பதிவு செய்தனர். தாய் தந்தை என அடையாளப்படுத்தாமல் பிறப்புச் சான்றிதழில் பெற்றோர் என குறிப்பிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
ஆனால் இவர்களின் கோரிக்கையை கோழிக்கோடு மாநகராட்சி மறுத்துவிட்டது.
இதை எதிர்த்து இருவரும் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுதாரர்கள் சார்பில், “எங்களை பெற்றோர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்றுதான் கேட்கிறோம். பெற்றோர் என்றால் தாய் தந்தை என இருவரையும் குறிக்கும். அப்போது எந்த சிக்கலும் வராது” என்று வாதிடப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை முடிந்து நேற்று (ஜூன் 2) தீர்ப்பு வழங்கிய கேரள உயர் நீதிமன்ற நீதிபதி சியாத் ரகுமான், “தாய், தந்தை என தனித்தனியாக குறிப்பிடாமல் பெற்றோர் என்று குறிப்பிட்டு புதிய பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோழிக்கோடு மாநகராட்சிக்கு உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக ஜியா பாவல் கூறியுள்ளார். “இனி, எங்களைப் போன்ற மூன்றாம் பாலின தம்பதிகள் இப்போது ‘அம்மா’ மற்றும் ‘அப்பா’ போன்ற குறிப்பிட்ட பாலின அடையாளங்களுக்குப் பதிலாக ‘பெற்றோர்’ என்று அங்கீகரிக்கப்படுவதைத் தேர்வுசெய்யலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.
இது LGBTQ சமூகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மனுதாரர்களின் வழக்கறிஞர் பத்மா லக்ஷ்மி கூறியுள்ளார்.
இந்த வழக்கின் முடிவு வரும்காலத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கான தீர்வாக அமையும் என்று சட்டத்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. transgender couple as parent
