ஜனநாயகன் படம் வெளியாக தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில், தயாரிப்பு நிறுவனத்திடம் அமேசான் பிரைம் நிறுவனம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பதால் தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படம் ஜனநாயகன். இதன் ஆடியோ லான்ச் மலேசியாவில் பிரம்மாண்டமாக நடந்தது.
தொடர்ந்து படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், சென்சார் சான்றிதழ் வழங்காமல் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் விஜய்யின் ஜனநாயகனுக்கு செக் வைத்தது.
இதை எதிர்த்து தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தவரை எதிர்த்து சென்சார் வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நேற்று தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அமர்வு விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்து வைத்தது.
இந்த விசாரணையின் போது தயாரிப்பு நிறுவனம் தாங்கள் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் ஓடிடி உரிமையை பெற்ற அமேசான் பிரைம் நிறுவனம் ரிலீஸ் தேதியை தெளிவுபடுத்துங்கள் என கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாகவும் கூறியிருந்தது.
“ஜனநாயகன்” படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் பதிப்புகளுக்கான டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் சுமார் ரூ.110 முதல் ரூ.121 கோடி வரையிலான பெரும் தொகைக்கு வாங்கியிருப்பதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
படம் வெளியாகி, சில நாட்களிலேயே ஓடிடியில் ஒளிபரப்பாகும் விதமாக இதன் உரிமம் பேசப்பட்டு, ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இந்தசூழலில் வழக்கு விசாரணையை எதிர்கொண்டு வரும் கே.வி.என். புரொடக்ஷனிடம் தாமதம் ஏற்படுவதற்கான நஷ்டத்தை ஈடு செய்யாவிட்டால், நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என எச்சரித்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
இதனால் தீர்ப்பு தேதியை எதிர்நோக்கி காத்திருக்கிறது ஜனநாயன படக்குழு.
