ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவரும் நடிகருமான விஜய், நடிகை பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்த ஜனநாயகன் படம் கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் படம் வெளியாகவில்லை.
இந்நிலையில் படத்தை வெளியிட சென்சார் வாரியத்துக்கு உத்தரவிட கோரி தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி ஆஷா படத்தை வெளியிட உத்தரவிட்டார்.
ஆனால் எங்கள் தரப்புக்கு பதிலளிக்க கால அவகாசம் வழங்காமலே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்சார் போர்டு தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.
இந்த வழக்கை இன்று (ஜனவரி 20) தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அப்போது மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேஷன், இரண்டு முக்கிய வாதங்களை முன்வைத்தார்.
1.தணிக்கை வாரியத்தின் தரப்பிலிருந்து இந்த விவகாரத்தில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய போதிய அவகாசம் வழங்கவில்லை.
2. மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அனுப்பிய அறிவிப்பை எதிர்த்து தயாரிப்பாளர்களால் சவால் செய்யப்படவில்லை.
அதாவது ஜனநாயகன் படம் மட்டும் மறு ஆய்வுக்கு அனுப்பப்படவில்லை. இந்த நடைமுறை பல படங்களுக்கும் செய்யப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் வழங்குவதற்கு முன் படத்தை மறு ஆய்வு குழுவுக்கு அனுப்ப வாரிய தலைவருக்கு அதிகாரம் இருக்கிறது.
தணிக்கை வாரிய நடைமுறைப்படி, படத்திற்கு எதிராக ஏதாவது எதிர்ப்பு இருந்தால் அதை குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்களுக்குள் பட நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும். அந்தவகையில் ஜனநாயகன் பட விவகாரத்தில் 7 நாட்களுக்குள் தயாரிப்பு நிறுவனத்துக்கு தெரிவிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 6ஆம் தேதி தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, ஜனநாயகன் மறு ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டிருக்கிறது என அவர்களுக்குத் தெரியும்.
தனி நீதிபதி முன் எங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க சில நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவகாசம் வழங்காமலே தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜனநாயகன் படத்தில் 14 காட்சிகளை நீக்கி பின்னர் படத்தை சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு படத்தை பார்த்து முடிவெடுக்கப்படும் என்று பட நிறுவனத்திடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் 14 காட்சிகளை நீக்கியதும் சென்சார் சான்றிதழ் வழங்க வேண்டுமென கேட்டனர்” என்று வாதங்களை முன்வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள், “படத்தை பார்த்து சான்றிதழ் வழங்க யாருக்கு அதிகாரம் உள்ளது?” என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு சென்சார் வாரியம் சார்பில், “மும்பையில் உள்ள சென்சார் போர்டுக்குதான் சான்றிதழ் வழங்கும் அதிகாரம் இருக்கிறது. இந்த படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இதுவரை முடிவெடுக்கப்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.
தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் சதிஷ் பராசரண் ஆஜராகி, ‘தணிக்கை வாரியம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும் உள்ளிட்ட அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளது. சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவே அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால் ஜனநாயகன் படத்துக்கு சான்றிதழ் வழங்கும் விவகாரத்தில் டிசம்பர்29-க்கு பிறகு அனைத்தும் மறைக்கப்பட்டது. நீக்கப்பட்ட காட்சிகளை வைத்து புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. அது எப்படி முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதை கேட்ட நீதிபதிகள், ‘படத்துக்கு எதிராக யார் புகார் கொடுத்தது?’ என்று கேள்வி எழுப்பினர்.
இதற்கு தணிக்கை வாரியம், ‘மும்பையில் உள்ள தணிக்கை வாரிய தலைவருக்கு புகார் சென்றது. ஒரு படத்துக்கு சான்றிதழ் கொடுக்கும் வரை, யார் புகார் கொடுத்தார்கள் என்பதை தெரிவிக்கக் கூடாது என்ற விதி இருக்கிறது’ என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், தணிக்கை வாரியத்தை எதிர்த்த வழக்கில் ஒரே நாளில் தீர்ப்பு பெறுவதை ஏற்க முடியாது’ என்று தெரிவித்த போது கேவிஎன் புரொடக்சன்ஸ் சார்பில், ‘எங்களுக்கும் மோதுமான அவகாசம் வழங்கப்படவில்லை. உத்தரவு வந்த தினமே தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்தது’ என்று பதிலளிக்கப்பட்டது.
தொடர்ந்து மறு ஆய்வு குழுவினர் எத்தனை நாட்களில் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவார்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தணிக்கை வாரியம், “20 நாட்களில் மறுஆய்வு குழு அமைக்கப்படும். அதன் பிறகு அவர்கள் படத்தை பார்த்து சான்றிதழ் வழங்குவார்கள். அவர்கள் சான்றிதழ் வழங்க மறுத்தால் தயாரிப்பு நிறுவனம் உயர் நீதிமன்றத்தை நாடலாம்” என்று கூறியது.
இரு தரப்பு வாதங்களையும் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அப்போது நீதிபதிகள்
*”விஜய் நடித்த படத்தின் தயாரிப்பாளர்கள் இந்த படத்துக்காக ரூ. 500 கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறி நிவாரணம் கோர முடியாது.
*தனி நீதிபதி ஆழமாக விசாரிக்கத் தவறிவிட்டார். விரிவான விசாரணை நடந்திருந்தால் படத்தைப் பார்த்தவர்கள் யார் – தேர்வுக் குழுவா அல்லது வாரியமா என்பது வெளிப்பட்டிருக்கும்” என்றும் குறிப்பிட்டனர்.
