அதிமுக தலைமைக்கு எதிராக தாம் “செப்டம்பர் 5-ந் தேதி மனம் திறந்து பேசிய பின்னரே எல்லாமே தெரியவரும்.. அன்றைய தினம் என் மீது பிரியப்பட்டு எத்தனை பேர் வருவாங்க” என தெரியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மீண்டும் போர்க்கொடி தூக்கி உள்ளார். கோபிச்செட்டிபாளையத்தில் கடந்த 2 நாட்களாக தமது ஆதரவாளர்களுடம் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார் செங்கோட்டையன்.
மேலும், செப்டம்பர் 5-ந் தேதி தாம் மனம் திறந்து பேச இருக்கிறேன் எனவும் செங்கோட்டையன் அறிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அதிமுகவின் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ. பண்ணாரி, செங்கோட்டையன் கூட்டத்தில் கலந்து கொண்டது கவனம் பெற்றுள்ளது.
இதனிடையே இன்று (செப்டம்பர் 3 ) செய்தியாளர்களிடம் கூறியதாவது: செப்டம்பர் 5-ந் தேதி காலை 9.15 மணிக்கு அனைத்து பத்திரிகையாளர்களும் கோபிச்செட்டி பாளையம் கட்சி அலுவலகத்துக்கு வந்துவிடுங்கள். மேற்கு மாவட்ட அதிமுக உட்பட வேறு யாரையும் நான் அழைக்கவில்லை.
நாளை மறுநாள் நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் தொண்டர்களின் கருத்துகளுக்கு நான் பதில் தரப்போகிறேன். வேறு ஒன்றும் இல்லை. என்னுடைய கருத்தை பதிவு செய்யப் போகிறேன்..அதைத் தவிர அவங்க வருவாங்க.. இவங்க வருவாங்க என்பது இல்லை.. அங்கே வாங்க.. அனைத்தையும் பேசுவோம். அன்றைய தினம் கோபிச்செட்டிபாளையம் கட்சி அலுவலகத்தில்தான் சந்திக்கப் போகிறேன். இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
அப்போது, செப்டம்பர் 5-ந் தேதியன்று 10,000 பேரை திரட்ட திட்டமிட்டுள்ளீர்களா? என செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, “நான் பேசப் போறேன் என்றுதான் சொன்னேன்.. அன்றைய தினம் எத்தனை பேர் வருவாங்க என்பது எல்லாம் எனக்கு தெரியாது. நான் இதுவரை யாரையும் கூப்பிடவில்லை.. என் மீது பிரியப்படுகிறவர்கள் வருவாங்க.. நான் யாரையும் வா என்று சொல்லவில்லை.. ஆனால் நேற்று 500 பேர் வரை வந்திருந்தனர். அவங்களாக தன்னெழுச்சியாக வருகின்றனர்”.” இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.