சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று பங்கேற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனித்து செயல்பட்டு வரும் செங்கோட்டையனும் கருப்புப் பட்டை அணிந்து அவை நடவடிக்கையில் பங்கேற்றுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி வரும் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளான செவ்வாயன்று மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நேற்று முழுவதும் பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (அக்டோபர் 15) காலை சட்டப்பேரவை கூடியவுடன் கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாமக்கல் கிட்னி திருட்டு விவகாரம், கரூர் கூட்ட நெரிசல் பலி ஆகியவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கைகளில் கருப்புப் பட்டையுடன் பேரவை கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
கருப்புப் பட்டையுடன் செங்கோட்டையைன்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக கூட்டங்களை புறக்கணித்து வரும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனும் கருப்புப் பட்டை அணிந்து சட்டப்பேரவை நடவடிக்கைகளில் பங்கேற்றுள்ளார்.
கோபிச்செட்டி பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் கோரிக்கை விடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
கேள்வி நேரத்தை தொடர்ந்து 2025 – 26 ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.