ஃபாக்ஸ்கான் விவகாரத்தில் நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி என்று அதிமுக கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் ரூ.15 ஆயிரம் கோடி புதிய முதலீடுகளைச் செய்ய தைவானைச் சேர்ந்த ஃபாக்ஸ்கான் நிறுவனம் உறுதியளித்திருப்பதாகவும், அதன் மூலம் 14 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து தமிழக முதலமைச்சரை ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் பிரதிநிதி ராபர்ட் வூ சந்தித்து பேசியது உண்மை. ஆனால் எந்த புதிய ஒப்பந்தம் குறித்தும் பேசப்படவில்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இது குறித்து அதிமுக தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஃபாக்ஸ்கான் நிறுவனம், முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் “செயலில் ஸ்டாலின் மாடல்” என்று மார்தட்டிக் கொண்டார்.
இந்நிலையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
“பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க” என்ற ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம்.
ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும்.
ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர், அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால், அதற்கு இவர்களின் பதில், “வெற்று பேப்பர்”! அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?
நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!
கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அறிவித்துள்ளது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, திறமையற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அதிமுக ஆட்சி அமைவதே!” என கூறப்பட்டுள்ளது.