தாம் முதல்வராகப் பொறுப்பேற்ற போது தம்மை ‘பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்’ என மறைந்த முதல்வர் கலைஞர் பாராட்டியதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை எடப்பாடி பழனிசாமி அழிவுப் பாதைக்கு கொண்டு சென்றுவிட்டார்; அதிமுகவில் தென் மாவட்ட தலைவர்கள் யாருமே வரக் கூடாது என நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்றும் ஓபிஎஸ் குற்றம்சாட்டினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (பிப்ரவரி 27) முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.
இதனைத் தொடர்ந்து அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களுக்கு ஓபிஎஸ் அளித்த பேட்டி: தாய்க்கழகமான திமுகவில் மகிழ்ச்சியோடு என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன். என்னை இணைத்துக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தலைவர், முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய முதல் நன்றியும் வணக்கத்தையும் இந்த நல்ல நேரத்திலே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்கின்ற ஒரு அரசியல் பண்பாடோடு முதல்வர் ஸ்டாலின், கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்பதை நான் நன்றாகவே உணர்ந்து திமுகவில் பெருமகிழ்ச்சியோடு இணைந்திருக்கிறேன்.
ஆணவப் போக்கு- சர்வாதிகாரி எடப்பாடி
அரசியலில் இன்றைக்கு ஒரு சர்வாதிகாரியாக, ஆணவப்போக்கோடு நடந்து கொள்கின்ற எடப்பாடி, எந்தக் காலத்திலும் இனி அரசியலில் வெற்றி பெற முடியாத ஒரு சூழ்நிலையை அண்ணா திமுகவிற்கு உருவாக்கியிருக்கிறார்.
ஸ்டாலினையே உற்று நோக்கும் நாடு
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால், அதிமுக தொண்டர்கள், இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையை ஏற்று திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள். நாடு ஸ்டாலினை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
சிறப்பான ஆட்சி
ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்ற இலக்கணத்தோடு ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தை வழிநடத்திச் சென்று கொண்டிருக்கிறார். அதைப் போலவே ஆட்சியில், கடந்த 5 ஆண்டு காலம் முதலமைச்சராகப் பொறுப்பேற்று அனைத்து நிலைகளிலும், அனைத்துத் துறைகளிலும் ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணிக்கிற நோக்கத்தோடு ஸ்டாலின் ஒரு நல்ல ஆட்சி, சிறந்த ஆட்சி, சீர்மிக்க ஆட்சியை தமிழக மக்களுக்குத் தந்து கொண்டிருக்கிறார். பல்வேறு சாதனைகளை அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை நாடு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக பெண்களுக்கு மகிழ்ச்சியான ஆட்சி
அடித்தட்டு மக்கள், மேல்தட்டு மக்களுக்கு இணையாகத் தங்களுடைய வாழ்வை உருவாக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு முதல்வர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். அதிலும் அதிலும் பெண்கள் இன்றைக்கு மனமகிழ்ச்சியோடு உள்ளனர். குடும்பத்தின் தலைவியாக எந்தவித சிரமமும் இல்லாமல் குடும்பங்களை வழிநடத்திச் செல்கின்ற அனைத்து உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் தந்து கொண்டிருக்கின்றார்.

அனைத்து கட்சிகளுக்கும் வாய்ப்பு
சட்டமன்ற வரலாற்றில் பேரறிஞர் அண்ணா எப்படி அனைத்துக் கட்சிகளையும் அரவணைப்போடு நடத்தினாரோ, அதேபோல முதல்வர் ஸ்டாலினும் சட்டமன்றத்தில் தாய் உள்ளத்தோடு அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் சமபங்கான பேசுகின்ற உரிமையைத் தந்து, அவர்கள் கருத்துக்களை உன்னிப்பாகக் கவனித்து அதற்குத் தக்க பதிலை அவர்கள் தருகின்ற பாங்கு இன்றைக்கு தமிழக மக்கள் அனைவரையும் கவர்ந்திருக்கிறது .
மக்களவைத் தேர்தல் வெற்றி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மகத்தான வெற்றி பெற்றிருக்கின்றது. அந்த முடிவின்படி தமிழக மக்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தங்களது ஆதரவைத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றார்; முதல்வர் ஸ்டாலினை ஆதரிக்கின்ற மனநிலைதான் இன்றைக்கு எல்லாத் தரப்பு மக்களிடமும் இருக்கிறது.
திராவிட இயக்கத்தை பாதுகாக்க…
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டில் அதை அழிப்பதற்கான பல முயற்சிகள் எந்தச் சூழலில் எப்படி ஏற்பட்டாலும் அதைத் தடுத்து நிறுத்தி திராவிட இயக்கத்தை பேரறிஞர் அண்ணா, கலைஞர் வழியில் பாதுகாக்கிறார் முதல்வர் ஸ்டாலின். திராவிட சித்தாந்தத்தை காப்பாற்றுவதில் முன்னணி தலைவராக இன்றைக்கு முதல்வர் ஸ்டாலின் திகழ்ந்து கொண்டிருக்கிறார்.
அழிவுப் பாதையில் அதிமுக
அதிமுக-வை இன்றைக்கு பொறுப்பிலே இருக்கின்ற தற்காலிக பொதுச்செயலாளராக சர்வாதிகாரத்தனமாக வீற்றிருக்கின்ற எடப்பாடி பழனிசாமி, அவர் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நாளிலிருந்து இன்று வரை அக்கட்சியை அழிவுப் பாதைக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு அத்தனை அண்ணா திமுக தொண்டர்களும் மிகுந்த வருத்தத்தோடு உள்ளனர். அதனால்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
தென் மாவட்ட தலைவர்களுக்கு எதிராக சதி
தென் மாவட்டங்களில் இருந்து எந்த ஒரு தலைவரும் வந்துவிடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருக்கிறார். தென் மாவட்டத்திலே இருக்கின்ற அதிமுக நிர்வாகிகளை அழிப்பதில் முனைப்பு காட்டி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
பச்சைத் தமிழர் என பாராட்டிய கலைஞர்
நான் முதல்வராக பொறுப்பேற்ற போது, கலைஞர் பாசத்தோடு ‘பச்சைத் தமிழர் பன்னீர்செல்வம்’ என்று என்னை பாராட்டினார்கள் என்பதை இந்த நல்ல நேரத்தில் நான் நன்றியோடு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.
திராவிட இயக்கத்தைக் காக்க, திராவிடத்தின் கொள்கையை காக்க, திராவிட முன்னேற்றக் கழகமே ஒரு தலைசிறந்த இயக்கம். தமிழகத்தைக் காப்பதற்கும், ஆட்சியை வழிநடத்திச் செல்வதற்கும், தமிழகத்தினுடைய மக்களை அரவணைத்துச் செல்வதற்கும், தமிழகத்தினுடைய முன்னேற்றத்திற்கும் தலைசிறந்த இயக்கமாக திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது. ஆகையால் நான் முழு ஈடுபாட்டோடு, மகிழ்ச்சியோடு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கிறேன். என்னை பாசத்தோடு அரவணைத்துக் கொண்ட முதல்வர் ஸ்டாலினுக்கு என்னுடைய நன்றியையும் தெரிவித்துக் கொண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தில் நான் இன்றைக்கு தொண்டனாகத்தான் இணைந்திருக்கிறேன். இந்த இயக்கத்துக்கு நானும் ஒரு துணையாக இருந்து இயக்க வளர்ச்சிக்கு முழுமையாகப் பாடுபடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஓபிஎஸ் கூறினார்.

தர்மயுத்தம் தோல்வியா? அதிமுகவின் எதிர்காலம்?
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளும் ஓபிஎஸ் அளித்த பதில்களும்:
செய்தியாளர்: திமுகவில் இணைவது என்பது நீங்களே எடுத்த முடிவா? ஏதாவது அழுத்தத்தின் பேரிலே எடுத்த முடிவா?
ஓபிஎஸ்: கடந்த காலங்கள் ஏற்பட்டுவிட்ட கசப்பான நிகழ்வுகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக நான் சுயமாக எடுத்த முடிவுதான் திமுகவில் இணைவது என்பது. அரசியல் நாகரிகம் – ஒரு கட்சியை இயக்கக்கூடிய தலைமைப் பொறுப்பிலே இருக்கிறவர்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற போக்கு அண்ணா திமுக-வில் இல்லை. அது மறைந்துவிட்டது.
திராவிட இயக்கத்திற்கு ஊறு வருமென்று சொன்னால் அதை காப்பாற்றுகின்ற மிகப்பெரிய பொறுப்பு இன்றைக்கு முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்துதான் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருக்கிறேன். மற்றபடி எனக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை, அழுத்தமும் இல்லை, கட்டாயமும் இல்லை.
ஒரு பொறுப்பான இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர்கள், கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி அனைத்து தரப்பட்ட மக்களாலும் பாராட்டப்பட வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் கட்சியை நடத்த வேண்டும். எந்தவித பாகுபாடும் இல்லாமல் ஆட்சியும் நடத்த வேண்டும். அந்த வகையில் இன்றைக்கு சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் விளங்கிக் கொண்டிருக்கிறார். எல்லா திட்டங்களையும், சாதனைகளையும் மக்களுக்கு எது தேவை என்பதை உணர்ந்து அத்தனை திட்டங்களையும் அவருடைய திருக்கரங்களால் தந்து கொண்டிருக்கின்றார் என்பதை நினைத்துதான் நான் திமுகவில் இணைந்திருக்கிறேன். சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் வெற்றி பெற்று முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்பார்.
செய்தியாளர்: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவீர்களா?
ஓபிஎஸ்: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட முதல்வர் ஸ்டாலின் வாய்ப்பு தந்தால் நிச்சயமாகப் போட்டியிடுவேன்.
செய்தியாளர்: திமுகவில் இணைந்தது காலதாமதமான முடிவா?
ஓபிஎஸ்: பொறுமையாக இருந்து எல்லா அம்சங்களையும் சிந்தித்துப் பார்த்துதான் நான் இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த முடிவு என்று இன்று காலை 5 மணியிலிருந்து ஆயிரக்கணக்கானோர் தொலைபேசி மூலமாக எனக்கு பாராட்டுகளையும் நன்றிகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். “நீங்கள் சரியான முடிவை, சரியான இடத்திற்குச் சென்றிருக்கிறீர்கள், எங்களுடைய வாழ்த்துகள்” என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
செய்தியாளர்: கடந்த காலத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்து வந்தீர்கள், இன்று ஏன் திடீரென்று இந்த மாற்றம்?
ஓபிஎஸ்: யார் நல்லது செய்தாலும் அவர்களைப் பாராட்டுகிற மனப்பக்குவம் கொண்டவன் நான்.. எதிர்க்கட்சியில் இருந்தபோது காரணமே இல்லாமல் நான் வசைபாட மாட்டேன். முதல்வர் ஸ்டாலின் கட்சியை நடத்துகின்ற பாங்கு, ஆட்சியை நடத்துகின்ற பாங்கு இன்று அனைத்து மக்களாலும் பாராட்டப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தின் தாய்மார்கள், பெண்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அதற்காகத்தான் நான் இங்கே வந்திருக்கிறேன்.
செய்தியாளர்: உங்களது தர்மயுத்தங்கள் தோல்வியில் முடிந்துவிட்டவனா?
ஓபிஎஸ்: கடந்த காலத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. இனிமேல் அரசியலில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கிற முடிவுக்கு நான் முழுமையாக ஆதரவு தருவேன், கட்டுப்படுவேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
செய்தியாளர்: அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ஓபிஎஸ்: அதிமுகவிற்கு எதிர்காலமே இனி இல்லை.
கேள்வி: தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு யார் போட்டி?
ஓபிஎஸ்: திமுகவை எதிர்க்கின்ற சக்தி இன்றைக்கு அரசியல் சூழலில் யாருக்குமே இல்லை.
செய்தியாளர்: அதிமுகவை எதிர்த்து வழக்கு போடுவீர்களா?
ஓபிஎஸ்: வழக்குகள் எப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
