ADVERTISEMENT

திமுகவில் இணைந்தார் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்

Published On:

| By Mathi

OPS DMK Stalin

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று பிப்ரவரி 27-ந் தேதி திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ஓபிஎஸ் திமுகவில் இணைகிறார் என நமது மின்னம்பலத்தில் தொடர்ந்து பதிவு செய்து வந்தோம். தற்போது ஓபிஎஸ் திமுகவில் இணைந்துள்ளார்.

ADVERTISEMENT

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். 2001, 2014-ல் ஜெயலலிதாவுக்கு நெருக்கடி ஏற்பட்ட நிலையில் முதல்வராக பதவி வகித்தவர் ஓபிஎஸ். 2016-ம் ஆண்டு ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்தும் முதல்வராக பதவி வகித்தார் ஓபிஎஸ்.

3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ், 2017-ம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது துணை முதல்வராகவும் இருந்தார்.

ADVERTISEMENT

அதிமுகவில் பொருளாளராக இருந்தார் ஓபிஎஸ். 2001, 2006-ம் ஆண்டுகளில் பெரியகுளம் எம்.எல்.ஏ.வாகவும் 2011, 2016, 2021-ல் போடிநாயக்கனூர் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓபிஎஸ். 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்டு ஓபிஎஸ் தோல்வி அடைந்தார்.

2022-ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார் ஓபிஎஸ். இதனால் தமது ஆதரவாளர்களுடன் தனி அணியாக ஓபிஎஸ் செயல்பட்டார். அதன் பின்னர் அதிமுகவில் மீண்டும் இணைவதற்கு பல்வேறு முயற்சிகளை ஓபிஎஸ் மேற்கொண்ட போதும் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்.

ADVERTISEMENT

சட்டப்பேரவைத் தேர்தல் தற்போது நடைபெறும் நிலையில் எந்த அணியில் சேருவது என்ற குழப்பத்திலும் ஓபிஎஸ் இருந்தார். இதனிடையே ஓபிஎஸ் அணியில் இருந்த மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் ஏற்கனவே தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்து விட்டனர்.

இதன் பின்னர் தேனி செட்டியபட்டியில் நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் திமுகவில் இணைவது பற்றி ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினார். ச்ட்டப்பேரவைக் கூட்டத்தில், எம்ஜிஆர்- ஜெயலலிதாவின் ஆசியுடன் ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என வாழ்த்துத் தெரிவித்திருந்தார் ஓபிஎஸ். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது அரசியல் பயணம் குறித்து மிக விரிவான பேட்டியை அளித்திருந்தார் ஓபிஎஸ்.

இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு இன்று காலை ஓபிஎஸ் வருகை தந்தார். அண்ணா அறிவாலயத்துக்கு வந்த ஓபிஎஸ்ஸை அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, தேனி எம்.பி. தங்கதமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.



இதனையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஓபிஎஸ், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன், ஓபிஎஸ் மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திமுகவில் இணைந்தனர்.

ஓபிஎஸ், அவரது மகன் ரவீந்தரநாத், எம்.எல்.ஏ. ஐயப்பன் உள்ளிட்டோருக்கு திமுகவின் கறுப்பு சிவப்பு துண்டை முதல்வர் ஸ்டாலின் அணிவித்தார். இதன் பின்னர் திமுகவின் உறுப்பினர் படிவத்தில் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் கையெழுத்திட்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share