தாய் கழகமான திமுகவில் இணைந்ததில் மகிழ்ச்சி – ஓ.பி.எஸ்

Published On:

| By Pandeeswari Gurusamy

OPS press meet on joining DMK

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப்ரவரி 27) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பேரறிஞர் அண்ணா தொடங்கிய, கலைஞர் கட்டிக்காத்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்திருப்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னைத் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக்கொண்ட கழகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலினுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இன்று அரசியலில் பேரறிஞர் அண்ணா காட்டிய வழியிலும், கலைஞர் காட்டிய வழியிலும் அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லும் ஓர் அரசியல் பண்பாட்டோடு முதலமைச்சர் கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்திக்கொண்டிருக்கிறார்.

ADVERTISEMENT

அரசியலில் இன்று சர்வாதிகாரியாகவும், ஆணவப் போக்கோடும் நடந்துகொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி, அதிமுக இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாத ஒரு சூழலை உருவாக்கியிருக்கிறார்.

பொதுவாகத் தேர்தல் காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். ஆனால், கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஆளுங்கட்சியாக இருந்து, மக்களின் நலன் கருதி அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குப் பயனுள்ள திட்டங்களைச் செயல்படுத்தி, அவற்றை மக்கள் தினந்தோறும் அனுபவிக்கும் வகையில் அர்ப்பணித்த ஆட்சி மு.க.ஸ்டாலினின் ஆட்சி,” எனக் குறிப்பிட்டார்.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியின் அதிமுக செயல்பாடு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், “அதிமுகவிடம் குறிப்பிட்டுச் சொல்வதற்கு எந்தத் திட்டமும் இல்லை; மக்கள் மனதில் எந்தத் திட்டமும் நிற்கவில்லை. இன்று அவர்கள் அறிவித்திருக்கும் தேர்தல் கால அறிவிப்புகள் வெறும் பூஜ்ஜியமாகத்தான் இருக்கின்றன,” என்று தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share