கோவையில் அதிமுக பிரமுகரின் மனைவி கார் ஓட்டுநரால் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக இன்று (நவம்பர் 13) கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவையை அடுத்த பன்னீர் மடை ஊராட்சி முன்னாள் தலைவராகவும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலராகவும் இருந்தவர் கவி சரவணகுமார். இவரது மனைவி மகேஸ்வரி (47). இத்தம்பதியினர் தங்களின் 2 குழந்தைகளுடன் தாளியூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது வீட்டில் ஒட்டுநராக வேலை செய்து வந்தவர் சுரேஷ்.
கடந்த அக்டோபர் மாதம் 28 ம் தேதி வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரியை ஓட்டுநர் சுரேஷ் கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் அதிமுக பிரமுகர் கவி சரவணகுமாரிடம் சென்று , மகேஸ்வரி தன்னை திட்டியதால் ஆத்திரத்தில் கொலை செய்து விட்டதாக கூறவே, அவர் ஓட்டுனர் சுரேஷை வடவள்ளி காவல் நிலையத்தில் சரண் அடைய வைத்தார்.
இந்த சம்பவம் தடாகம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததால் தடாகம் போலீசாரிடம் சுரேஷ் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் மகேஸ்வரி வீட்டில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வந்த சுரேஷை காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. விசாரணையில், கவி சரவணக்குமாருக்கும் அவரது மனைவி மகேஸ்வரிக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. கவி சரவணக்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கவி சரவணக்குமார் வீட்டிற்கு வராமல் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்துள்ளார். கவி சரவணக்குமார் மனைவி மகேஸ்வரியிடம் விவாகரத்து கேட்டுள்ளார். மகேஸ்வரி விவாகரத்து கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் தனது மனைவியை கொல்ல திட்டமிட்ட அதிமுக பிரமுகர் கவி சரவணகுமார், ஓட்டுநர் சுரேஷ் மூலம் கொலை செய்துள்ளார்.
மேலும் கொலை வழக்கை தான் பார்த்துக்கொள்வதாகவும், திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள தனக்கு சொந்தமான கவி சேம்பரையும் கொடுப்பதாக கவி சரவணக்குமார் கூறியதாக விசாரணையில் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து அதிமுக பிரமுகர் கவி சரவணக்குமாரை தடாகம் காவல்துறையினர் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
