ராமச்சந்திரன் துரைராஜ் – புகைப்பட நிபுணர், உதவி ஒளிப்பதிவாளர், உதவி இயக்குனர் எனப் பன்முகம் கொண்ட படைப்பாளி! actor ramachandran durairaj life in kollywood
ராமச்சந்திரன் துரைராஜ். தமிழ் சினிமா வரலாற்றில் இடம்பிடித்த எத்தனையோ வில்லன், குணசித்திர நடிகர்களில் ஒருவர். அதேநேரத்தில், இவரைப் போல இன்னொருவரை ரசிகர்கள் கண்டதில்லை எனும்படியான தோற்றத்தையும் நடிப்பையும் திரையில் வெளிப்படுத்தி வருபவர்.
வெகு லாவகமாக எதிர்மறை பாத்திரத்தில் இருந்து நேர்மறை பாத்திரமாக மாறுகிற வித்தையை இவரிடத்தில் நிறையவே காண முடியும். அதனாலேயே, எந்த பாத்திரத்திலும் இவரை நடிக்க வைக்கலாம் என்கிற நம்பிக்கையை இயக்குனர்களிடத்தில் விதைத்திருக்கிறார்.
தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். குடும்பத்தினர், நட்பு வட்டாரத்தில் இருந்தவர்களுக்கு இவர் எப்போதும் ‘ராம்ஸ்’ தான்.

சினிமாவுக்குள் இழுத்த கேமிரா
பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ முடித்த இவர், வேலைக்காக கோயம்புத்தூருக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். அங்கு நான்கைந்து ஆண்டுகள் இருந்தபிறகு, சென்னையில் இருந்த வேறொரு நிறுவனத்தில் சேர்ந்திருக்கிறார்.
சிறு வயது முதலே ராமச்சந்திரனுக்கு ‘புகைப்படக்கலை’யில் ஆர்வம் அதிகம். தானியங்கி கேமிரா ஒன்றை வைத்துக்கொண்டு சுற்றுலா செல்லுமிடங்களுக்குச் செல்லும் வழக்கமும் இருந்திருக்கிறது.
இந்த நிலையில், ஒருநாள் தனது நண்பர் வைத்திருந்த எஸ் எல் ஆர் கேமிராவை கண்டிருக்கிறார். அதன் மீது காதல் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, ஒளியமைப்பை மாற்றியமைத்துப் புகைப்படம் எடுக்கிற வித்தையை முழுமையாகக் கற்க முயன்றிருக்கிறார். அதற்காகப் பயிற்சி ஒன்றிலும் சேர்ந்திருக்கிறார்.
அப்படி, புகைப்படக்கலை தொடர்பான ஆர்வமும் தேடலும் முழுநேரமாக சினிமாவில் பணியாற்றுகிற உத்வேகத்தை அவருக்குள் விதைத்திருக்கிறது.
2000களில் சென்னைக்கு இடம்பெயர்ந்த ராமச்சந்திரன் துரைராஜ், சில நாட்களிலேயே சினிமா துறையில் இடம்பிடிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறார். அப்போதிருந்த முன்னணி ஒளிப்பதிவாளர்களிடம் உதவியாளராகச் சேர முயற்சித்திருக்கிறார்.
ஒருகட்டத்தில் அந்த விருப்பம் எட்டாக்கனியாகிப் போக, பிழைப்புக்காக சினிமாவில் வேறு தொழில்களைச் செய்யலாம் என நினைத்திருக்கிறார். அப்படித்தான் ‘கோலங்கள்’ தொடரில் உதவி இயக்குனர் ஆகப் பணியாற்றுகிற வாய்ப்பு வசனகர்த்தா பாஸ்கர் சக்தி மூலமாகக் கிடைத்திருக்கிறது.
வெண்ணிலா கபடிக்குழுவில் வாய்ப்பு!
அந்த காலகட்டத்தில், இயக்குனராக முயற்சித்து வந்த சுசீந்திரனோடு ராமச்சந்திரன் துரைராஜுக்கு நட்பு உண்டு. அதன் தொடர்ச்சியாக, ‘வெண்ணிலா கபடி குழு’ படம் உருவாவதில் இவர் பங்காற்றியிருக்கிறார். அதில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக, அப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார்.
ஒல்லியான உருவம். முகத்தை மறைக்கிற தாடி மீசை. கொஞ்சம் கரகரப்பு கலந்து கீச்சிடுகிற குரல். கிராமத்து மனிதர்களுக்கு உரித்தான தெனாவெட்டான உடல்மொழி என்று அந்த காலகட்டத்தில் ரொம்பவே ‘வித்தியாசமாக’ தோற்றமளித்தவர் ராமச்சந்திரன்.
சினிமாவில் நடிப்பதற்கான தோற்றம் இதுவல்ல’ என்பதாகவே அவரது எண்ணம் இருந்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் அதீத கூச்சமும் தயக்கமும் அவரை கேமிராவுக்கு முன்னால் நிற்கவிடாமல் தடுத்திருக்கிறது.
ஆனாலும், நண்பர்கள் தந்த ஊக்கத்தினால் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் ராம்ஸ். பிறகு அவள் பெயர் தமிழரசி, நான் மகான் அல்ல படங்களில் நடித்தார்.
‘நான் மகான் அல்ல’ படத்தில் கொடுக்கப்பட்ட வில்லன் பாத்திரம் ராம்ஸை வித்தியாசமாகத் திரையில் காட்டியது. ஆனாலும், பெரியளவில் அவருக்கு நடிப்பு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

அறம் கொடுத்த புகழ்!
ஒருவழியாக, 2014இல் இவர் நடித்து ‘சதுரங்க வேட்டை’, ‘ஜிகர்தண்டா’ படங்கள் வெளிவந்தன. இரண்டிலுமே அடியாள் பாத்திரம் தான் என்றபோதும் திரையில் அவரது நடிப்பு ஒரேமாதிரியானதாக இல்லை.
அந்த வேறுபாட்டிற்குப் பின்னால், ராம்ஸின் இயல்பான குணாதிசயங்களும் பல மனிதர்களைப் பார்த்து உள்வாங்கியிருந்த அனுபவமும் இருந்தன.
அகத்திணை, இன்று நேற்று நாளை, ஈட்டி, வில் அம்பு என்று சில படங்களில் இடம்பிடித்த ராமச்சந்திரன் துரைராஜ், தொடர்ச்சியாகப் பல படங்களில் சிறு பாத்திர வாய்ப்புகளை ஏற்றார். அவற்றில் பெரும்பாலானவை வில்லனுக்குப் பின்னால் நிற்கிற அடியாட்களாகவே இருந்தன.
அந்தச் சூழலில்தான் ‘அறம்’ படத்தில் இடம்பெறுகிற வாய்ப்பை ராமச்சந்திரனுக்கு தந்தார் இயக்குனர் கோபி நயினர். புலேந்திரன் எனும் அப்பாத்திரம் ஆனது மிகச்சாதாரண மனிதனாகத் திரையில் அவரைக் காட்டியது.
அந்த படத்திற்குப் பின்னர், அவரது வாழ்க்கைச் சூழலே தலைகீழாக மாற்றியது.

’பேட்ட’ படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்த இவர், ‘விஸ்வாசம்’ படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்தார். ‘சூரரை போற்று’, ‘ஜகமே தந்திரம்’, ‘மகான்’ என்று அடுத்தடுத்த படங்களில் முக்கிய நட்சத்திரங்களோடு இணைந்து தெரிந்தார்.
நண்பகல் நேரத்து மயக்கம், மஞ்ஞும்மள் பாய்ஸ் ஆகிய மலையாளப் படங்களிலும் நடித்திருக்கிறார்.
கற்றுக்கொண்டே நகரும் வாழ்க்கை!
கடந்த இரண்டு ஆண்டுகளில் ராம்ஸ் நடித்து எந்த படமும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. அது பற்றிய வருத்தம் ஏதுமில்லாமல், ‘இன்றைய பொழுதை வாழ்வோம்’ என்று கணங்களைக் கழித்து வருகிறார்.
எப்போது வேண்டுமானாலும் ஒரு ஒளிப்பதிவாளராகவோ, இயக்குனராகவோ மிளிரலாம் எனும் அளவுக்கு நாளும் வளர்கிறது அவரது நடிப்புத் திறமை.
’சிறப்பான உழைப்பு பெயர், புகழொடு அடுத்தடுத்த வாய்ப்புகளையும் பெற்றுத் தரும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ராமச்சந்திரன் துரைராஜ். ஆண்டுக்கு நான்கைந்து படங்கள். அளவான சம்பளம். நிறையவே படிப்பும் தேடலுமாக வாழ்ந்து வருகிறார். இனி வரும் நாட்களில் இவரது சினிமா அறிவுக்கும் பொருளாதார மேம்பாட்டிற்கும் தீனி போடுகிற வாய்ப்புகள் வாய்க்க வேண்டும்.. அது வாய்க்கட்டும் என்பதாகத் தெரிகிற மனப்பாங்கு, அதனை நிச்சயம் சாதிக்கும்..!
உதயசங்கரன் பாடகலிங்கம்